சிலந்திகள் சாப்பிடும் உணவின் அளவு - `மலை`க்க வைக்கும் தகவல்

உலகில் உள்ள அனைத்து சிலந்திகளும் 400-800 மில்லியன் டன் உணவுகளை ஒவ்வொரு வருடமும் உட்கொள்கின்றன என உயிரியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர்.

சிலந்திகள் உட்கொள்ளும் இரை, மனிதர்களால் சுமார் ஒரு வருடத்தில் உண்ணப்படும் இறைச்சி மற்றும் மீன் மாமிசத்தின் அளவிற்கு சமமானதாக உள்ளது.

ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆய்வு சிலந்தி இனத்தின் சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது; இந்த கண்டுப்பிடிப்புகள் "இயற்கை அறிவியல்" என்ற பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வை வழிநடத்திய பாசல் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளார் மார்டின் நிஃப்லெருக்கு, 1958 ஆம் ஆண்டு பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம் பிரிஸ்டைவ் எழுதிய "தி வேல்ட் ஆஃப் ஸ்பைடர்ஸ்" புத்தகம் ஊக்கமாக இருந்தது; அந்த புத்தகத்தில், சிலந்திகளால் கொல்லப்படும் பூச்சிகளின் எடை, பிரிட்டனின் மக்கள் தொகையின் மொத்த எடையை காட்டிலும் அதிகமானதாக இருக்கும் என எழுத்தாளர் ஊகித்திருந்தார்.

அவரின் ஊகத்தை தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த சிலந்தி வல்லுநரான நிஃப்லெர், சிலந்திகளின் நடவடிக்கை மற்றும் உலகம் முழுவதும் உள்ள சிலந்திகளின் சூழலியல் பற்றிய தகவல்களை சேகரித்தார்.

"நாற்பது வருட காலமாக, சிலந்திகள் பூச்சிகளை உண்ணும் விகிதம் மற்றும் இரையை தேர்ந்தெடுப்பது குறித்த மணிக்கணக்கான தகவல் சேகரித்த அனுபவம், சர்வதேச அளவில், ஒரு ஆண்டு காலத்தில் சிலந்திகளால் கொல்லப்பட்ட இரையைப் பற்றி எழுத தேவைப்பட்டது" என அவர் தனது மின்னஞ்சலில் தெரிவித்தார்.

இந்த நாற்பது ஆண்டுகால தகவல் சேகரிப்பிற்கு பிறகு, எட்டுக்கால் பூச்சி எவ்வளவு இரையை உட்கொள்கிறது என்ற போதுமான தகவல் அவருக்கு கிடைத்தது.

இந்த ஆய்வின் எண்ணிக்கைகள், சிலந்திகள் குறித்து அச்சம் கொள்ளும் எவரையும் பயமுறுத்தும் வண்ணம் உள்ளது; உலகில் உள்ள அனைத்து சிலந்திகளின் மொத்த எடை 25 மில்லியன் டன்னாக உள்ளது; அவை, ஆண்டு தோறும் 400-800 மில்லியன் டன் கணக்கான பூச்சியை இரையாக உண்ணுகின்றன என தெரிவிக்கிறார் நிஃப்லர்.

இந்த புள்ளிவிவரம் யாரையும் அச்சுறுத்தும் நோக்கிலானது அல்ல , இந்த ஆய்வு உலகளாவிய உணவு வலையில் சிலந்திகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் என நம்புவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

"தாவர உணவு உண்ணி பூச்சிகளை சிலந்திகள் அதிக அளவில் கொல்கின்றன; இதன்மூலம் தாவரங்களில் பூச்சிகள் ஏற்படுத்தும் சேதத்திலிருந்து சிலந்திகள் பாதுக்கின்றன" என நிஃப்லர் தெரிவித்தார்.

"பூச்சிகளை உண்ணும் ஆயிரக்கணக்கான விலங்குகளுக்கு சிலந்திகள் உணவாகின்றன; சுமார் 8,000 முதல் 10,000 வரையிலான சிறப்பு பூச்சி இனங்களுக்கும், 3,000 முதல் 5000 வரையிலான பறவைகளுக்கும் சிலந்திகள் உணவாக உள்ளன", என்றார் அவர்.