You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குடிநீர் தட்டுப்பாட்டால், ஓ.பி.எஸ் நிலத்தை வாங்கும் கிராம மக்கள்
குடிநீர் தட்டுப்பாட்டைத் தவிர்க்க, இரண்டு மாதங்களுக்கு மேலாக நடந்த ஆலோசனை மற்றும் போராட்டத்தின் வாயிலாக தேனி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்த மக்கள், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் குடும்பத்திற்குச் சொந்தமான கிணறு மற்றும் விவசாய நிலத்தை, சுமார் ரூ. 6 கோடி தொகையை கூட்டாக செலுத்தி வாங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.
கடும் வறட்சியால், குடிநீர் இன்றி அவதிப்பட்ட பெரியகுளம் தொகுதி லட்சமிபுரம் கிராம மக்கள் தங்களது கிராமத்தில் உள்ள கிணறுகளில் தண்ணீர் வற்றுவதற்கு, ஓ.பி.எஸ் குடும்பத்திற்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள கிணறு காரணம் என்று கூறி போராட்டம் நடத்தினர்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பிரச்சனையில் நேரடியாக தலையிட்ட ஓபிஎஸ், நிலத்தை விற்க முன்வந்துள்ளார் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, கிணறு உள்ளடங்கிய 40 ஏக்கர் விவசாய நிலத்தை ஒரு சென்ட் நிலம் சுமார் ரூ.15 ஆயிரம் என்ற அளவில், கிராம மக்கள் ஒன்றிணைந்து வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
கிணற்றை வாங்கவேண்டிய நிலை பற்றி விவரித்த லட்சுமிபுரம் மக்கள் போராட்டக் குழுவைச் சேர்ந்த ரா.செந்தில் குமார், ''60 நாட்காளாக நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். முதலில் விஷயத்தை நேரடியாக ஓபிஎஸ்சுக்கு சொல்ல வேண்டும் என்று முயற்சி எடுத்தோம். அவரது உறவினர் மற்றும் நெருங்கிய வட்டத்தைச் சேர்ந்தவர்கள் எங்களை தடுத்துவிட்டனர்,'' என்றார்.
''எங்கள் ஊரில் உள்ள கிணறுகள் பலவும் சுமார் 60 அடி ஆழம் கொண்டதாக உள்ளன. ஓபிஎஸ் நிலத்தில் உள்ள கிணறு சுமார் 140 அடி இருக்கும். அந்த கிணற்றில் 10 ஆழ்துளை கிணறு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராமம் முழுவதும் உள்ள கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போனது,'' என்றார்.
அவர் மேலும் ஓ.பி.எஸ் நேரடியாக பிரச்னையை தீர்ப்பார் என்று எதிர்பார்த்த காரணத்தால் இரண்டு மாதங்கள் தாமதித்ததாக கூறினார். ''சாலை மறியல் செய்தோம். தற்போது ஓபிஎஸ் நிலத்தை அளிப்பதாக உறுதியளித்துள்ளார். தனிப்பட்ட முறையில் அவர் மீது எங்கள் ஊர் மக்கள் அன்புடன் உள்ளனர். ஆனால் இந்த கிணறு விவகாரம் எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது,'' என்றார்.
உடனடி பயன்பாட்டிற்காக, கடந்த இரண்டு நாட்களாக, ஓபிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டுவருகிறது என்று மக்கள் உறுதிப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
ஓபிஎஸ் குடும்பம் 90 நாட்கள் கெடு வைத்துள்ளதாகவும், அதற்குள் பணத்தை சேர்த்து நிலத்தை வாங்குவதாக மக்கள் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
லட்சுமிபுரத்தில் நிலவிய குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கை குறித்து, பெரியகுளம் தொகுதி மேம்பாட்டு அதிகாரி பாண்டியிடம் கேட்டபோது, ''லட்சுமிபுரம் மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய, ஓபிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான கிணறு மட்டுமல்லாமல், புதிய திட்டமாக வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவருவதற்கு உடனடியாக ரூ.62 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.
6 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட லட்சுமிபுரம் கிராமத்திற்கு சுமார் தினமும் 5 லட்சம் லிட்டர் தண்ணீர் அளிக்க வேண்டிய நிலையில், கடந்த சில நாட்களில் வெறும் 1.30 லட்சம் லிட்டர் மட்டுமே தரமுடிந்தது. இதன் காரணமாகவே மக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர் என்றார் அவர்.
லட்சுமிபுரம் மக்கள் நிலத்தை வாங்குவது தொடர்பாக கருத்துக் கேட்க ஓ.பன்னீர் செல்வதை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தும் பதில் கிடைக்கவில்லை.
பிற செய்திகள்
- ஐ.எஸ். குழுவின் எதிர்காலம் என்ன?
- `அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்'
- டெல்லி: பிரதமர் வீட்டு முன் தமிழக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட முயற்சி
- 6 சிசுக்களை குளிர்பதன கிடங்கில் மறைத்த பெண்ணுக்கு சிறை
- தூக்கத்தில் பற்களை நறுக்குபவரா? என்னென்ன பாதிப்புக்கள் வரும்?
- மனைவி ஷாப்பிங் செய்யும் வரை காத்திருக்க கணவர் மையங்கள்
- ஏடிஎம் எந்திரத்தில் சிக்கிக்கொண்ட நபர், காப்பாற்ற குறிப்பு அனுப்பிய வினோதம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
- டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்