You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தூக்கத்தில் பற்களை நறுக்குபவரா? என்னென்ன பாதிப்புக்கள் வரும்?
பதின்ம வயதினரிடையே பற்களை நறுக்கும் பழக்கம் அவர்கள் பள்ளிக்கூடங்களில் கேலிக்கு உள்ளாவதற்கான அறிகுறி என்று ஆய்வுகள் கூறுகின்றன.
மன அழுத்தம் மற்றும் சோகத்துக்கு ஆளான பெரியவர்களையும் இது பாதிக்கும் என்பதால், பெற்றோரும் பள்ளிகளும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வாய் தொடர்புடைய சுகாதாரத்திற்கான ஒரு தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.
பற்களை நறுக்குதல், தலைவலி, பல் தேய்மானம் மற்றும் தூக்க குறைபாடுகள் உள்ளிட்டவற்றை உண்டாக்கும் என்றும், இவை அதிகரித்து வருவதாகவும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
நறுக்கும் சத்தத்தை வட்ட வடிவ ரம்பத்தின் சத்தத்துடன் ஒப்பிடலாம்.
பள்ளிகளில் கேலிக்கு ஆளாகும் 13 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்கள், பிறரைவிட நான்கு மடங்கு அதிகமாக இரவில் பற்களை நறுக்கும் பழக்கத்திற்கு உள்ளாக வாய்ப்புண்டு என்று ஜோர்னல் ஆப் ஓரல் ரீஹேபிலியேஷனில் (Journal of Oral Rehabilitation) வெளியாகியுள்ள ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
பிற மாணவர்களில் 17 சதவீதத்தினரிடையே மட்டும் அப்பழக்கம் உள்ள நிலையில் கேலிக்கு உள்ளாவோரிடையே இது 65 சதவீதமாக உள்ளது.
"பரவலாகப் பார்க்கும்போது பற்களை நறுக்குவதில் ஒரு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயமாகத் தோன்றாது. ஆனால் அது ஒரு குழந்தையின் மனநிலையைப் பற்றிய ஆழ்ந்த பார்வையைத் தருவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கேலிக்கு ஆளாக்கப்படுவதை முன்கூட்டியே அறிவதற்கான அடையாளங்களை அறிய உதவும் முக்கிய அறிகுறியாகவும் இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார்.
குறிப்பாகத் தூக்கத்கில் பற்களை நறுக்குதல் உடல் நலத்தை பாதிக்கும் என்று கூறும் அவர், நாம் அதைச் செய்வதைப் பெரும்பாலும் அறிவதில்லை என்கிறார்.
"வழக்கமாக, தங்களுடன் உறங்குபவர்களை எழுப்பும்போதுதான் முதல் முதலாக மக்கள் இப்பழக்கத்தை அறிய வருகின்றனர்," என்கிறார் மருத்துவர் கார்ட்டர்.
மேல் மற்றும் கீழ் தாடைகளில் உள்ள பற்களை ஒன்றாக அழுத்துவதால், பல் கூச்சம் மற்றும் தேய்மானம், பற்கள் உடைதல், பற்கள் விழுதல், முகம் மற்றும் மற்றும் தாடையில் வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.
" பற்களை நறுக்குதல் மெல்லுவதை விட 40 மடங்கு அதிகம் வலிமையானது. தன் ஈறுகள் வரை பற்கள் தேயுமளவுக்கு நறுக்குபவரை நான் கண்டுள்ளேன்," என்று கார்ட்டர் கூறுகிறார்.
பெரும்பாலானவர்களுக்கு, பற்களின் அடர்த்தி குறைவதால், அவை தட்டையாவதுடன், பல் முனைகளில் சேதங்களும் ஏற்படுகின்றன.
கண்விழிக்கும்போது நீடித்த தலைவலி அல்லது ஈறுகளில் புண் ஏற்படுதல் ஆகியன வெளிப்படையாகத் தெரியும் அறிகுறிகள்.
கவலையை விடுங்கள்
ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இதற்கு திறன்மிகுந்த சிகிச்சைகள் உள்ளன.
கார்டு (Guard) அல்லது ஸ்ப்ளின்ட் (Splint) எனப்படும் கடினமான பிளாஸ்டிக் உபகரணத்தைப் பற்களில் பொருத்துவதன்மூலம், அவற்றை நறுக்குவதைத் தடுக்க முடியும்.
பற்கள் ஒன்றன் மேல் ஒன்று நன்றாகக் பொருந்த வைப்பதே இதன் நோக்கம். இந்த உபகரணத்தைப் பொருத்துவதால் மெல்லுவது இலகுவாகி பற்கள் பாதுகாக்கப்படும்.
புகைப் பழக்கத்தைக் கைவிடுதல், மது உட்கொள்வதைக் குறைத்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களும் இப்பிரச்சனைத் தீர்க்கப் பரிந்துரைக்கப்படுகின்றன.
உறக்கத்தின்போது மூச்சுத் திணறல், கடுமையாகக் குறட்டை விடுதல் உள்ளிட்ட தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் பற்களை நறுக்கும் பழக்கத்தை உண்டாக்கும்.
பிரிட்டனில் மட்டும் உறக்கத்தில் பற்களை நறுக்குதல் 60 லட்சம் பேரைப் பாதிக்கலாம் என்று கார்ட்டர் மதிப்பிடுகிறார்.
நம் வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மன அழுத்தம் இருந்தால், நாம் அவற்றை நம் பற்களுக்கு எடுத்துச் செல்கிறோம் என்பதில் வியப்பேதுமில்லை.
பகல் நேரங்களில் நம் வீட்டு வேலைகள் மற்றும் நாமாகச் செய்து கொள்ளும் பணிகள், வாகனம் ஓட்டுதல், நாம் மிகுந்த அக்கறை கொள்ளும் பணிகள் உள்ளிட்டவற்றால் பற்களை நறுக்கறோம்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்