You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பன்னீர்செல்வம் சொன்ன 10 விஷயங்கள்
மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமர்ந்த அவர் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் அமைதியாக அமர்ந்திருந்தார்.
பன்னீர்செல்வம்,முதல்வர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்துள்ளார். அதே சமயம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பியதும் அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா முதல்வராக பதவியேற்க இருக்கும் இந்த நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் திடீர் தியானம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
40 நிமிட மௌனத்திற்கு பிறகு பன்னீர்செல்வம் சொன்ன முக்கியமான பத்து விஷயங்கள்:
1)என்னை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்தனர்.
2)கழகத்தின் கட்டுப்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதால் ராஜினாமா செய்தேன்.
3)மக்கள் , தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் , ராஜினாமாவைத் திரும்ப பெறுவேன்.
4)மக்கள் நம்பிக்கையை பெற்ற ஒருவர் முதல்வராகவும் பொதுச் செயலாளராகவும் வர வேண்டும்.
5) முதலில் மதுசூதனனை பொதுச் செயலாளராக்கவேண்டும் என்று கூறினார்கள். நான் மறுத்தேன்.
6) பின்னர், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், என்னை சந்தித்து, சசிகலாவின் சகோதரர் திவாகரன் போன்றோர் சசிகலாவை பொதுசெயலாளராக ஆக்க வேண்டும் என்று விரும்புவதாகக் கூறினார். நான் சசிகலாவிடம் இது பற்றிக் கேட்டபோது, அவர் அதை ஏற்றுக் கொண்டார்.
7)வர்தா புயல் நிவாரணப் பணி, ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆகியவற்றை நான் சிறப்பாகக் கையாண்டது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
8)பிரதமரை நான் சந்திக்கும் போது, துணை சபாநாயகர் தம்பிதுரையும் தனியாக எம்பிக்களுடன் சென்று பிரதமரை சந்திக்க முயன்றார். இது பற்றி கட்சித் தலைமையிடம் சொன்ன போது நீதி கிடைக்கவில்லை.
9) நான் முதல்வராக இருக்கும் போது, என்னுடைய அமைச்சரவையில் அமைச்சராக இருக்கும் உதயகுமார் சசிகலா முதல்வராக வேண்டும் என்று சொன்னார். உதயகுமார் பேசியது நீதிக்கு புறம்பானது என்று சசிகலாவிடம் முறையிட்ட போது, உதயகுமாரை கண்டித்துவிட்டதாக சொன்னார்கள். ஆனால் பிறகு செல்லூர் ராஜூவும் என்னிடம் தனிப்பட்ட முறையில் உதயகுமாரை விமர்சித்துவிட்டு, மதுரை சென்று அவரும் சசிகலா முதல்வராகவேண்டும் என்று பேசினார்.
10)ஒட்டுமொத்த நாட்டு மக்களும், நம்மீது வருத்ததில் இருக்கிறார்கள். தொண்டர்களும் வருத்தத்தில் இருக்கிறார்கள், என்னை ஏன் அசிங்கப்படுத்துகிறார்கள், அவமானப்படுத்துகிறார்கள் என்று கேட்டேன். தன்னந்தனியாக நின்று போராடவும் தயாராக இருக்கிறேன்.