200 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 16 அமர்நாத் யாத்ரிகர்கள் பலி

ஜம்மு - காஷ்மீரில் உள்ள ராம்பன் மாவட்டத்தில், ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்ததில் 16 அமர்நாத் யாத்ரிகர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமூக ஊடகமான ட்விட்டரில், விபத்து குறித்த தகவலை மத்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 42 பேர் பயணிக்கக்கூடிய பேருந்து ஒன்று ராம்பன் மாவட்டத்தில் உள்ள ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் அமர்நாத் யாத்திரிகர்களுடன் பயணித்து கொண்டிருந்தது.

அப்போது திடிரென சுமார் 200-250 அடி உயரமுள்ள பள்ளத்தாக்கு ஒன்றிற்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த யாத்ரிகர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளதாக போலீஸ் கூறியுள்ளதாகவும் பிடிஐ முகமை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 10 ஆம் தேதி இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில், பயணிகள் பேருந்து ஒன்றின் மீது இரவு, பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமர்நாத் யாத்ரீகர்கள் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.

தற்போது, சரியாக ஆறு தினங்கள் கழித்து இந்த விபத்து நடந்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்