You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கதிராமங்கலத்தில் பொதுமக்கள் தாக்கப்பட்ட விவகாரம்: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
கதிராமங்கலத்தில் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தவர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டிருப்பதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் கதிராமங்கலம் விவகாரம் தொடர்பாக, தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கட்கிழமை கொண்டு வரப்பட்டுள்ள கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது பதிலளித்து பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதனை கூறினார்.
மேலும் தமிழக காவல்துறையினரால் சிறிய அளவிலான தடியடி மட்டுமே நடத்தப்பட்டதாகவும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்கார்களில் சிலர் கல் வீச்சில் ஈடுபட்டதாகவும், அதன் காரணமாகவே காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டியுள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வைக்கோல் போரை எரித்து சாலை மறியலில் ஈடுபட்டு, அரசு அதிகாரிகளை வேலை செய்ய விடாமல் தடுத்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பிபிசியின் பிற செய்திகள்:
கச்சா எண்ணெய் எடுக்கும் விவகாரத்தில் இதுவரை பிரச்னை இல்லாமல் இருந்தது என்றும், அப்பகுதியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகளை கண்டு, தவறான எண்ணத்துடன், அது பற்றிய புரிதல் இல்லாமல் கிராம மக்கள் தேவையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
கசிவை சரிசெய்ய சென்ற அதிகாரிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர், இரண்டு காவல்துறையினர் தாக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், எனவே நிலைமையை சீர்செய்யவே காவல்துறையினர் குவிக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
தற்போது அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், அங்கு அமைதி நிலவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
இந்த விவகாரத்திற்காக திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி கொண்டு வந்திருந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விளக்கங்களை அளித்திருந்தார்.
பிபிசியின் பிற செய்திகள்:
முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலம் கிராமத்தில், ஓஎன்ஜிசி குழாயில் ஏற்பட்ட கசிவையடுத்து அந்த திட்டத்தை எதிரித்து கிராமத்து மக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தீவிர போராட்டம் நடத்தி வந்தனர்.
அது தொடர்பான விவகாரத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 30ஆம் தேதியன்று, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
அதன் காரணமாக அப்போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்கள்.
இவர்களை விடுவிக்க வேண்டும், குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினரை ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும், ஓஎன்ஜிசி திட்டத்தை நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அப்பகுதியில் தொடர் போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழக அரசியல் கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டு வருகின்றன.
பிபிசியின் பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்