You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
கீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து, அதே இடத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை நகருக்கு அருகில், சிவகங்கை மாவட்டம் கீழடி என்ற இடத்தில் இந்தியத் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில், சங்ககால நாகரீகம் என்று கருதத்தக்க நகரம் ஒன்று அங்கு இருந்ததற்கான அடையாளங்கள் அங்கு கிடைத்தன.
பழங்காலப் பொருட்களும் பானை ஓடுகளுமாக 5,300 பொருட்களும் அங்கிருந்து கண்டெடுக்கப்பட்டன. இந்த நிலையில், இந்த ஆய்வை மேற்கொண்டிருந்த அமர்நாத் ராமகிருஷ்ணா, அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.
கண்டெடுக்கப்பட்ட பொருட்களும் பெங்களூருக்குக் கொண்டுசெல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த கனிமொழிமதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து, அங்கேயே அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென தனது மனுவில் கூறியிருந்தார்.
தொடர்புடைய செய்திகள்:
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை, பெங்களூருக்குக் கொண்டுசெல்லக்கூடாது என கூறியிருந்தது. இந்த நிலையில், அந்த மனு இன்று மீண்டும் நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அருங்காட்சியகம் அமைவதற்கான இடத்தை மாநில அரசு ஏற்கனவே ஒதுக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
மேலும் உதவிகள் செய்யவும் தயாராக இருப்பதாகவும் ஆனால், இந்திய அகழ்வாய்வுத் துறைதான் அருங்காட்சியகத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று கூறினார்.
இந்த வழக்கில் பதிலளித்த மத்திய அரசின் வழக்கறிஞர், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பெங்களூருக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட இடத்தில்தான் அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டும் என விதியில்லை என்றும் அப்படி அருங்காட்சியகம் அமைந்தால், மாநில அரசும் நிதியுதவி செய்ய வேண்டுமென்றும் கூறினார்.
இதையடுத்து, கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை வைத்து அங்கு அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய - மாநில அரசுகள் ஆகஸ்ட் 24ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமெனக் கூறி வழக்கை ஒத்தி வைத்தனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்