You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரை கீழடியில் எடுக்கப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல, குழியை மூட இடைக்காலத் தடை
மதுரைக்கு அருகில் உள்ள கீழடி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட பொருட்களை, சிவகங்கை மாவட்டத்தை விட்டு எடுத்துச் செல்லவும், ஆய்வுக் குழிகளை மூடவும் உயர்நீதிமன்றத்தின் உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.
மதுரை நகரத்திற்கு தென் கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி என்ற கிராமத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டிலிருந்து இந்தியத் தொல்லியல் துறையால் மேற்கொண்டு வரும் அகழ்வாராய்ச்சியின் இரண்டாம் கட்ட ஆய்வு செப்டம்பர் மாத இறுதியோடு முடிவுக்கு வருகின்றது.
இதுவரை, இங்கு கிடைத்திருக்கும் கட்டடத் தொகுதிகளும், பொருட்களும் இங்கு ஒரு சங்ககால நகரம் இருந்ததற்கான சான்றுகளைத் தந்திருப்பதால், மேலும் ஆய்வுகளைத் தொடர இந்தியத் தொல்லியல் துறை ஆலோசித்து வருகிறது.
இங்கு மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட அரும்பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் பூமிக்கு அடியில் புதைந்துகிடந்த பல கட்டடத் தொகுதிகளும் தோண்டியெடுக்கப்பட்டன.
இங்கு கட்டடத் தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்தே, பள்ளி மாணவர்களில் துவங்கி பொதுமக்கள் வரை கூட்டம்கூட்டமாக பலரும் வந்து இந்தப் பகுதியை பார்வையிட்டு சென்றுள்ளனர்.
இந்நிலையில் இந்த மாத இறுதியோடு இங்கு ஆய்வுப்பணிகள் நிறைவடைவதால், தோண்டியெடுக்கப்பட்ட பகுதிகளை மூடுவதற்கு இந்தியத் தொல்லியல் துறை முடிவெடுத்திருக்கிறது.
இந்நிலையில், இங்கு எடுக்கப்பட்ட அரும்பொருட்களை வைத்து இங்கேயே ஒரு கள அருங்காட்சியகம் அமைக்க வேண்டுமென்று கோரி, கனிமொழி மதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையை அணுகியுள்ளார்.
இந்தப் பொருட்களை, தற்போதுள்ள சூழலில் லாரிகள் மூலம் பெங்களூரில் உள்ள தென்னிந்தியத் தலைமையகத்திற்குக் கொண்டுசெல்வது சரியாக இருக்காது என்றும், அந்தப் பொருட்களை இங்கேயே வைத்து கள அருங்காட்சியகம் ஒன்றை அமைக்க வேண்டுமென்றும் அவர் கோரியுள்ளார்.
அந்தப் பகுதியில் 110 ஏக்கர் அளவுக்கு ஆய்வு நடத்தமுடியும் என்ற நிலையில், ஒரு ஏக்கரில் மட்டுமே தற்போது ஆய்வு நடத்தப்பட்டுள்ளதால், தொடர்ந்து ஆய்வுகளை நடத்த வேண்டுமென்று தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகமுத்து, முரளிதரன் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குனர் ஜெனரலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
அரும்பொருட்களை அக்டோபர் 18-ஆம் தேதி வரை இங்கிருந்து எடுத்துச் செல்லக்கூடாது எனவும் ஆய்வுக் குழிகளை மூடக்கூடாது எனவும் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து கள அருங்காட்சியம் அமைக்க வேண்டுமென பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.