You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கீழடி அகழ்வாராய்ச்சி தலத்தை பார்வையிட வந்த மத்திய அமைச்சர்களுக்கு எதிர்ப்பு
மதுரை நகருக்கு அருகில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சித் தலத்தைப் பார்வையிட வந்த மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களை பா.ஜ.கவினர் கைகளில் கட்டைகளுடன் துரத்தியதாக தமிழ் அமைப்பினர் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுரை நகரத்திற்கு தென்கிழக்கில் சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் கீழடி கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலிருந்து மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களுடன் கூடிய நகரம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள கீழடியின் அகழ்வாராய்ச்சி கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா விண்ணப்பித்திருந்த நிலையில், அவர் அங்கிருந்து ஒரிசாவுக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இன்று மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா, மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இன்று கீழடி அகழ்வாராய்ச்சித் தலத்தைப் பார்வையிடுவதற்காக வந்தனர்.
அப்போது மக்கள் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் அந்த அமைப்பின் நிறுவனர் முருகவேல் ராஜன் என்பவர் தலைமையில் கறுப்புக்கொடிகளைக் காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். அமர்நாத் ராமகிருஷ்ணாவை மீண்டும் இந்த ஆராய்ச்சிக்குப் பொறுப்பாக நியமிக்க வேண்டுமென கேஷமிட்டனர்.
இதையடுத்து, அமைச்சர்களுடன் வந்திருந்த பாரதீய ஜனதாக் கட்சியின் தொண்டர்கள் அங்கே கிடந்த தென்னை மரத்தின் மட்டைகளை எடுத்து ஆர்பாட்டக்காரர்களைத் துரத்தினர். இதற்குப் பிறகு இரு தரப்பினரையும் விலக்கிவிட்ட காவல்துறை, ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைதுசெய்தது.
காவல்துறை மீது புகார்
இந்த சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், "இந்த சம்பவத்தில் காவல்துறை நடந்துகொண்டவிதம் கண்டிக்கத்தக்கது. ஆர்ப்பாட்டக்காரர்களை காவல்துறை கட்டுப்படுத்தவே முயற்சிக்கவில்லை. அதனால்தான் பாரதீய ஜனதாக் கட்சியினர் அமைச்சர்களைப் பாதுகாக்க முயற்சித்தனர். வன்முறையில் யாரும் ஈடுபடவில்லை" என்று கூறினார்.
தாங்கள் ஜனநாயக முறையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் ஆனால், தங்களைக் கைதுசெய்திருக்கும் காவல்துறை பா.ஜ,கவினரை ஒன்றும் செய்யவில்லையென முருகவேல் ராஜன் பிபிசியிடம் கூறினார்.
இதேபோல, மத்திய அமைச்சர்களின் வருகையைக் கண்டித்தும் மீண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணாவை ஆய்வுக்குப் பொறுப்பாக நியமிக்கக்கோரியும் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகில் மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் பிறகு கைதுசெய்யப்பட்டனர்.
"மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் ஒரே இடத்தில் பணிபுரியக்கூடாது என்ற விதிமுறை தற்போதுதான் அகழ்வாராய்ச்சித் துறையில் கொண்டுவரப்பட்டிருக்கிறது. முதல் ஆளாக அமர்நாத்தை மாற்றியிருக்கிறார்கள். இஸ்ரோ போன்ற இடங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகளை இப்படி மாற்ற முடியுமா? ஆய்வுப் பணியில் ஈடுபடுபவர்களை ஆய்வை முடிக்கும்வரை அதே இடத்தில் பணியாற்ற அனுமதித்தால்தான் அது சரியாக இருக்கும். இதற்காக போராடியவர்களை பா.ஜ.கவினர் தாக்க வந்தனர்" என குற்றம்சாட்டுகிறார் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தி.
கீழடி தளத்தின் ஆகழ்வாராய்ச்சிக் கண்காணிப்பாளராக இருந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்குப் பதிலாக தற்போது ராமன் என்ற அதிகாரி நியமிக்கப்பட்டிருக்கிறா்.
ஆனால், இது இந்த ஆய்வை முடக்கும் முயற்சி என பல அமைப்புகளும் இயக்கங்களும் குற்றம்சாட்டிவருகின்றன. தமிழ்நாட்டில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நாகரீகம் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்திருப்பதால், இந்த ஆய்வை மத்திய அரசு மேற்கொள்ளவிரும்பவில்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றன.
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்