நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி: ரஜினியிடம் அய்யாக்கண்ணு கோரிக்கை

இந்தியாவில் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்காக ஏற்கனவே தருவதாக அறிவித்த 1 கோடி ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு ரஜினிகாந்தை சந்தித்துவலியுறுத்தியுள்ளார்.

அய்யாக்கண்ணு மற்றும் அவரின் குழுவினர் ரஜினியை சந்தித்த போது
படக்குறிப்பு, அய்யாக்கண்ணு மற்றும் அவரின் குழுவினர் ரஜினியை சந்தித்த போது

இதற்காக இன்று சென்னையில் உள்ள போயஸ் தோட்ட இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த அய்யாக்கண்ணு, தனது கோரிக்கை மனுவை வழங்கியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, தன்னிடமே அந்த 1 கோடி ரூபாயை வழங்க ரஜினிகாந்த் முன்வந்ததாகவும், ஆனால், அந்த பணத்தை பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கி, அவரிடம் நதிகள் இணைப்பை விரைவாக மேற்கொள்ள வலியுறுத்த வேண்டும் என தான் கோரியதாகவும் தெரிவித்தார்.

ரஜினிக்கு பி.ஆர். பாண்டியன் கேள்வி

இதற்கிடையே, மத்திய அரசு, நதிகளை தேசியமயமாக்க தயாராக இல்லை என தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

அது குறித்து பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி நீர் தமிழகம் வருவதை தடுத்து, அணை கட்டுவதை தடுக்க மத்திய அரசு மறுக்கிறது; காவிரி நீர் கேட்டதால் தமிழன் சொத்துக்கள் சூரையாடப்பட்டது. தீ வைத்து கொளுத்தப்பட்ட போதும் வாய் திறக்காத ரஜினி 1 கோடி கொடுத்து நதிகளை இணைக்கப் போறாராம்"என்று விமர்சனம் செய்துள்ளார்.

மேலும் அதே அறிக்கையில், "அய்யா அய்யாக்கண்ணு அவர்களே, காவிரியில் அணை கட்டாதே என்று ரஜினியை வாய் திறக்க சொல்லுங்கள். நதிகள் இணைப்பதை அப்புறம் பார்க்கலாம் காவிரி நீரின்றி தமிழகம் இல்லை அதை விடுத்து விளம்பரத்திற்காக காவிரி போராட்டத்தை திசை திருப்ப வேண்டாம்" என்றும் பி.ஆர்.பாண்டியன் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்:

இதையும் படிக்கலாம்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்