ஊபெர் நிறுவனம் மீது இரண்டாவது முறையாக வழக்கு தொடர்ந்த பெண்
இந்தியாவில் 2014ல் ஊபெர் கார் ஓட்டுநரால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக சொல்லப்படும் பெண், தனது மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை ஊபெர் வாடகை கார் நிறுவனம் முறைகேடாகப் பெற்றதால் தனது தனியுரிமையை மீறியுள்ளதாகக் கூறி வழக்கு தொடுத்துள்ளார்.

பட மூலாதாரம், SPENCER PLATT/GETTY
தொடர்ந்து வெளியான அவதூறுகளுக்கு மத்தியில் தனது பொதுமதிப்பை மீட்டெடுக்க ஊபெர் நிறுவனம் முயற்சி செய்துவரும் வேளையில் இந்த வழக்கு வந்துள்ளது.
ஊபெர் தலைமை நிர்வாகி டிராவிஸ் கலானிக் தனது நிறுவனத்தின் மேலாண்மை மற்றும் நடைமுறைகள் பற்றிய ஆய்வுக்குப் பின்னர் அவர் நிறுவனத்தை விட்டு விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஊபெர் நிறுவனத்தின் பிற தலைமை அதிகாரிகளும் விலகிவிட்டனர். அதே நேரத்தில் ஊபெர் நிறுவனம் பிற மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
டிசம்பர் 2014ல் டெல்லியை சேர்ந்த 26 வயதான பெண் ஊபெர் நிறுவன ஓட்டுநர் சிவ்குமார் யாதவால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானதாக பெயர் குறிப்பிடாமல் வழக்கு பதிவுசெய்தார். அவர் தற்போது அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்திற்கு குடியேறிவிட்டார்.
இதனை தொடர்ந்து ஓட்டுநர் யாதவுக்கு ஆயுட்கால தண்டனை வழங்கப்பட்டு சிறையில் உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:

பட மூலாதாரம், PABLO BLAZQUEZ DOMINGUEZ
அமெக்க நிறுதிவனத்தின் மீது தொடரப்பட்ட குற்றவியல் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்த்துக்கொள்ளப்பட்டது.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை விசாரித்த ஊபெர் நிறுவனம், அவரது மருத்துவ அறிக்கைகளை பெற்று, நிறுவனத்தின் வணிகத்தை பாதிப்பதாக அவர் வேண்டுமென்றே ஆதாரங்களை உருவாக்கினாரா என்று பரிசோதித்ததாக செய்திகள் வெளியான பிறகு, கடந்த வியாழனன்று அந்த பெண் அமெரிக்காவில் ஒரு வழக்கை தொடுத்துள்ளார்.
ஊபெர் நிறுவனம் தனது தனியுரிமையை மீறியுள்ளதாகவும், தனது நடத்தையை அவமதித்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
ஊபெர் நிறுவன செய்திதொடர்பாளர் பேசுகையில், '' "இதுபோன்ற கொடூரமான அனுபவத்தை யாரும் எதிர்கொண்டிருக்க கூடாது, கடந்த சில வாரங்களில் அதை அவர் மறுபடியும் மனதளவில் அனுபவிக்க வேண்டிய நிலையைக் கண்டு வருந்துகிறோம்,'' என்றார் .
அந்த பெண் தொடர்ந்துள்ள வழக்கில் கலானிக் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் எமில் மைக்கல் மற்றும் எரிக் அலெக்சாண்டர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க செய்தியாளர்கள் கேள்வி கேட்ட பிறகு, ஊபெர் நிறுவனத்தை விட்டு அலெக்சாண்டர் கடந்தவாரம் விலகிவிட்டார்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












