`முன்னேற்றத்தை மையப்படுத்திய மோதி அரசின் அணுகுமுறை'
- எழுதியவர், ஆசீர்வாதம் ஆச்சாரி
- பதவி, பாரதீய ஜனதா கட்சி
(பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதா அரசு மூன்றாண்டுகளைப் `'பூர்த்தி செய்யும் நிலையில், அந்த அரசின் செயல்பாடுகளைப் பற்றி, தேசிய கட்சிகளின் பிரமுகர்கள் சிலரும், பகுப்பாய்வாளர்களும் பிபிசிதமிழ்.காம் பக்கங்களில் தங்கள் கருத்துகளை எழுதுகின்றனர். அந்தக் கட்டுரைத் தொடரில் இரண்டாவதாக, பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நூலக மற்றும் ஆவணப்படுத்தல் துறை உறுப்பினருமான ஆசீர்வாதம் ஆச்சாரி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை இன்று வெளியாகிறது. இத்தொடர்களில் வெளியாகும் கருத்துகள் கட்டுரையாளர்களுடைய சொந்தக் கருத்துக்கள். பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர், பிபிசி தமிழ்.)

இந்திய மக்கள் நரேந்திர மோதி அவர்கள் மீது நம்பிக்கை வைத்து அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர வைத்து மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. மூன்றாண்டுகளில் முத்தான திட்டங்களும் அரசின் செயல்பாடுகளும் திருப்தி அளிப்பதாக 62% மக்கள் தெரிவித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது.
2004 முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கட்சியின் கூட்டணி அரசு ஊழல் மலிந்த ஆட்சியைத்தான் தந்திருந்தது . இந்தக் காலக்கட்டத்தில் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி ஊழல், ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் என்று ஒவ்வொரு ஊழலும் செல்லரித்த அரசு இயந்திரத்தின் ஆட்சியையே பறைசாற்றின. இத்தருணத்தில், 2014ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோடி தனது இம்மூன்று ஆண்டு கால ஆட்சியில், நாட்டில் அனைத்துத் துறைகளுக்குமான 360 டிகிரி வளர்ச்சி, உள்நாட்டு அமைதி, அண்டைய நாடுகளோடு நல்லுறவு, உலகப் பொருளாதாரத்தில் உயர்ந்த இடம் அடைதல், தெற்காசிய நாடுகள் மத்தியில் பாரதத்தை ஒரு "வல்லரசாக" உருப்பெறச் செய்தல் ஆகிய நல்ல நோக்கங்களுக்கு உருவகம் அமைத்துத் தந்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் வளர்ச்சிக்காக ஒருபுறம் முயற்சிகள் மேற்கொண்டுவரும் அதே சமயம், உள்நாட்டில் அமைதிக்கு பங்கம் விளைவிக்க முற்படும் காஷ்மீர் தீவிரவாதிகளாக இருந்தாலும் சரி; சத்தீஸ்கர் மாநில மாவோயிஸ்டுகளாக இருந்தாலும் சரி; உடனுக்குடன் பதிலடி கொடுக்க தயங்கவே இல்லை மோதி அரசு. படிக்கவேண்டிய மாணவர்கள் கருங்கற்களை கொண்டு ராணுவ வீரர்களைத் தாக்கினால் அதைப் பார்த்து சும்மா இருக்க இந்த அரசு ஒன்றும் "கையாலாகாத கோழை காங்கிரஸ் அரசு" அல்ல என்பதையும் நிரூபிக்கத் தவறவில்லை. விளைவு கடந்த மாதம் "கல்லெறி வீரன்" ஒருவனை ராணுவ ஜீப்பின் முன்புறம் கட்டிவைத்து கலவரம் தூண்டிய அதே காஷ்மீரின் சாலைகளில் கம்பீர நடைபோட்டு சென்றனர் ராணுவத்தினர். நாட்டின் வளர்ச்சிக்கு பங்கம் விளைவிக்க உள்நாட்டு அமைதியை சீர்குலைக்கச் செய்தால் தக்க பதிலடி கொடுக்க மோதியால் மட்டுமே முடியும் என்பதற்கு இது உதாரணம். அத்தோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானின் வசம் உள்ள காஷ்மீர் பகுதிக்கு உள்ளேயே சென்று, எல்லைதாண்டி வருவதற்காகப் பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தான் நிலைகளை சுட்டுப் பொசுக்கியதும் மோதி அரசு தான்.
நிர்வாகம்
நல்லாட்சி என்ற தாரக மந்திரத்தை குறிக்கோளாகக் கொண்டுள்ளது பா.ஜ.க. அதை வழங்க ஒரு சிறந்த நிர்வாகம் தேவை என்பதை இந்த அரசு உணர்ந்துள்ளது. சிறந்த நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக, பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற விடாமல் இடைமறிக்கும் தடைக்கற்களை அகற்ற, பிரதமர் நரேந்திர மோதி, மாதந்தோறும் "பிரகதி" எனும் சிறப்பு கூட்டத்தை நடத்தி வருகிறார். பிரதமரின் இந்த அதிரடி நடவடிக்கையால், ரூ. 4 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் புத்துயிர் பெற்று, துரிதகதியில் நடந்து வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோதி, கடந்த மார்ச் முதல், அறிவிக்கப்படும் அரசு திட்டங்களை நிறைவேற்றுவதில், தனிக் கவனம் செலுத்தி வருகிறார். மாதந்தோறும், நான்காவது புதன் கிழமை, மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகாரிகளுடன், 'வீடியோ கான்பரன்சிங்' முறையில் பேசி திட்டங்களை விரைவுபடுத்தி வருகிறார் பிரதமர். அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டும் உயர் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்பவும் மோதி அரசு தயங்கவில்லை. கடந்த ஒரு ஆண்டில் மட்டுமே மொத்தம் 129 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வுஅளிக்கப்பட்டுள்ளது. "திறமையுடன் உழைக்கும் அதிகாரிகளுக்கு மட்டுமே அரசில் இடமுண்டு; மற்றவர்கள் அரசுக்கு பாரமில்லாமல் வீட்டுக்கு செல்வதே உசிதம்" என்பதை உணர்த்தியுள்ளது.
நேரடி பண பரிமாற்றம்
மக்களுக்கு வழங்கும் மானியங்களும், சலுகைகளும் நேரடியாக பணமாக வழங்குவது ஊழலுக்கு வழிவகுப்பதால் பயணாளிகளுக்கு நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில்வரவு வைத்து வெளிப்படைதன்மையை அரசு கொண்டுவந்துள்ளது. 2016-17 ஆம் ஆண்டில் 132 திட்டங்களில் சுமார் 74,502 கோடி ரூபாயை 33.33 கோடி பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
இதற்கு உதவியாக ஆதார் அட்டையை அரசு பயன்படுத்தியுள்ளது. ஏப்ரல் 30, 2017 வரை 114 கோடி ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது இது நாட்டின் மொத்த ஜனத்தொகையில் 92% ஆகும். மேலும் 39 கோடி வங்கி கணக்குகள் ஆதார் அட்டையுடன் இனைக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு பிரதமரின் சுதந்திர தின உரையில் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 2018க்குள் மின்சாரம் வழங்கப்படும் என கூறியிருந்தார். அவர் கூறிய போது நாட்டில் 18,452 கிராமங்கள் மின் இணைப்புக்காக காத்திருந்தன. தற்போது 4051 கிராமங்கள் மட்டுமே மீதம் உள்ளன. மீதமுள்ள இந்த கிராமங்களும் அடுத்த ஆண்டுக்குள் மின் இணைப்பு பெற்றுவிடும்.
தூய்மை பாரதம்
நாட்டின் பொது இடங்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த தினத்தில் துவங்கபட்டது தான் "தூய்மை பாரதம்". இந்தத் திட்டம் நாட்டில் உள்ள மக்களிடையே அதிக வரவேற்பு பெற்றது மட்டுமல்லாமல் தற்போது 63.90% இந்தியா திறந்த வெளியில் கழிப்பதை நிறுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
குறுந் தொழில் பிரிவுகள் வளர்ச்சி மற்றும் மறுசீரமைப்பு நிதி முகமை 20,000 கோடி ரூபாய் முதலீட்டுடன், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் குறுந்தொழில் முனைவர்களின் தொழில் மேம்பாட்டிற்கும் மறுநிதி வசதிக்கும், பத்து இலட்சம் ரூபாய் வரை கடன் வழங்க, 8 ஏப்ரல் 2015 அன்று இதன் முதல் கிளையை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி டெல்லியில் துவக்கி வைத்தார்.
முத்ரா வங்கி மூலம் சிறு மற்றும் குறுந் தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிக கடைகள், பழம் மற்றும் காய்கறி விற்பனையாளர்கள், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் நிதியுதவி பெற்று வருகின்றனர். 2016-17 ஆம் நிதியாண்டில் நிர்னையிக்கப்பட்ட கடனான ரூ. 1.8 லட்சம் கோடியை தாண்டி விநியோகிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்கட்டமைப்பு
ஒரு நாட்டிற்கு இன்றியமையாதது சாலை, துறைமுகங்கள், ரயில்வே, உள்நாட்டு நதிநீர் போக்குவரத்து போன்ற உள்கட்டமைப்புகள் ஆகும். நாள் ஒன்றுக்கு133 கிமீ சாலைகள் வீதம், 2016-17ஆம் நிதியாண்டில் மட்டும் 48000 கிமீ சாலை போடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
நாட்டில் உள்ள துறைமுகங்களை மேம்படுத்த போடப்பட்டது தான் "சாகர்மாலா" திட்டம். உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தகம் மேம்படுத்த இந்த திட்டம் பேருதவியாக இருக்கும். நாட்டில் மொத்தமுள்ள 7000 கிமீ கடல் எல்லையில் உள்ள 200 துறைமுகங்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கம். இதன் மூலம் துறைமுகங்களை மேம்படுத்துதல், இரயில், சாலை, உள்நாட்டு நதிநீர் போக்குவரத்து போன்றவற்றை மேம்படுத்துவது மூலம் சரக்குகள் கையாள்வது எளிதாக்கப்படும். ஏற்றுமதி- இறக்குமதி சார்ந்த தொழில்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்குதல் போன்றவற்றை செயல்படுத்த ரூ.12 லட்சம் கோடியளவில் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சாலை மேம்பாடு ஒருபுரம் என்றால் இரயில்வே துறை மறுபக்கம் சப்தமே இல்லாமல் சாதித்து கொண்டிருக்கிறது. நாள் ஒன்றுக்கு 7.7 கிமீ பிராட் கேஜ் லைன் போடப்பட்டு வர்கிறது இது 2013 ல் 4.3 கிமீ ஆக இருந்தது. மூலதன செலவுஅள் தற்போது ரூ 94000 கோடி, இதுவே கடந்ஹ ஆட்சியில் செலவு செய்யப்பட்டுள்ளதை விட இரட்டிப்பாகும். கடந்த ஓராண்டில் மட்டும் 1730 கிமீ இரயில் தடங்கள் மின்சாரமயமாக்கப்பட்டுள்ளான. மக்கள் குறைகளை தீர்க்க எப்போதும் சமூக வலைதளங்களில் துடிப்பாக இருந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டுவருகின்றன. தூய்மை பாரதத் திட்டத்தின் ஒரு பகுதியாக தூய்மை இரயில் திட்டம் வகுக்கப்பட்டு இரயில்களில் தூய்மை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images
இரயில் சேவைகள் சார்ந்த அனைத்தும் ஆன்லைன் ஆக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆன்லைனில் இரயில்வே டிக்கெட் எடுக்க்ம் முறை எளிமையாக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளன, இந்தியாவின் முதல் அதிவேக இரயிலான காதிமான் எக்ஸ்பிரஸ், அதிநவீன ஆகாய விமானங்களுக்கிணையான வசதிகளுடன் தேஜஸ் எக்ஸ்பிரஸ் என இரயில்வே துறை வீவேகத்துடன் நவீனமயமாக்கப்படுகிறது. மேலும் 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் உள்ள 400 முக்கிய இரயில் நிலையங்களில் இலவச வை ஃபை வசதி ஏற்படுத்தப்படும். தற்போது 100 க்கும் மேற்பட்ட இரயில் நிலையங்களில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இவை மட்டுமல்லாமல் ஸ்மார்ட் சிட்டி திட்டம், டிஜிட்டல் இந்தியா திட்டம், ஸ்டார்ட் அப் திட்டம் என்று பல்வேறு திட்டங்கள் மூலம் பல லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் நாட்டின் பல்வேறு மூலைமுடுக்குகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டவண்ணமே இருக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
கடந்த மூன்று ஆண்டுகள் ஒருபுறம் வளர்ச்சி. மறுபுறம் நாட்டின் இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை, அண்டை நாடுகளோடு நல்லுறவு கொண்டாலும், தக்க சமயத்தில் அவர்களுக்கு பாடம் புகட்டவும் தயங்காத மோதி அரசின் அடுத்த இரண்டு ஆண்டுகளில், உலகமே வியக்கும் வண்ணம் நாடு முன்னேற்றப் பாதையில் மார்தட்டி, தோள் நிமிர்த்தி, கூரிய பார்வையோடு அணிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.
(கட்டுரையாளர் - ஆசீர்வாதம் ஆச்சாரி, பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் மற்றும் நூலக மற்றும் ஆவணப்படுத்தல் துறை உறுப்பினர்)
இதையும் படிக்கலாம்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்












