You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திராவிட ஆட்சி - ’தமிழகம் சறுக்கியது என்ன... சாதித்தது என்ன?‘
- எழுதியவர், வ கீதா
- பதவி, எழுத்தாளர்
( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி கடந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ் வெளியிட்டது. அதை மீண்டும் வாசகர்களுக்கு வழங்குகிறோம்)
கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற சூழ்நிலையில் இத்தகைய மதிப்பீட்டை நாம் மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலம் என்று நாம் கூறிக்கொண்டாலும், எம்.ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதிக காலம் ஆட்சி செலுத்தியுள்ளது.
திமுகவின் ஆட்சிக்காலத்தை எடுத்துக் கொண்டால் அது தொடக்கத்தில் மக்கள்நலம் சார் ஆட்சியாக அமையும் என்ற பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. மாநில சுயாட்சி, நீதியான பொருளாதார வளர்ச்சி, வகுப்புரிமையை பாதுகாக்க தேவையான சட்டத்திட்டங்கள், சாதி கலக்காத பண்பாட்டு உருவாக்கம் என்று பல விஷயங்கள் இங்கு சாத்தியப்படும் என்று பலர் அன்று நினைத்தனர்.
பொருளாதாரக் கொள்கையில் காங்கிரசைப் பின்பற்றிய திமுக
பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் முன் ஆட்சி புரிந்த காங்கிரஸ் ஆட்சி பின்பற்றிய வளர்ச்சி, உற்பத்திசார் திட்டங்களை திமுகவும் பின்பற்றியது.
குறிப்பாக வேளாண்துறையில் தொடங்கப்பட்டிருந்த பசுமைப் புரட்சியை இக்கட்சியின் ஆட்சியுமே தொடர்ந்து வளர்த்தது, விரிவுப்படுத்தியது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை அதிகார வலிமை கொண்டும் சமரச நடவடிக்கைகளின் மூலமும் இக்கட்சி எதிர் கொண்டது.
விவசாய தொழிலாளர்களின் கோரிக்கைகளை சமன்படுத்துவதிலும் நிலவுடைமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதையும் திமுகவினர் கைவிடவில்லை - வெண்மணி படுகொலை இதற்கு முக்கிய சான்று.
தொழில் வளர்ச்சிக்கு வித்திட்ட காங்கிரஸ் கொள்கைகளை பின்பற்றிய அதே வேகத்தில் தொழிலாளர்களின் போராட்டங்களை அடக்கியொடுக்கவும் திமுக ஆட்சியாளர்கள் தயங்கவில்லை.
அன்று முக்கிய தொழிலாளர் தலைவராக இருந்த வி.பி. சிந்தனுக்கு நேர்ந்த கதியை அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. எந்த மாணவர்களின் போராட்டத்தை சாதகமாக்கிக் கொண்டு ஆட்சிக்கு வந்ததோ இதே மாணவர்களின் போராட்டங்களை மூர்க்கமாக கையாளவும் திமுக தயங்கவில்லை.
அதே சமயம் வளர்ச்சி, மக்கள் நலம் என்ற இரண்டு விஷயங்களிலும் தனக்குள்ள "அக்கறை"யை ஆட்சியாளர்கள் வெளிபடுத்திக் கொண்டும் வந்தனர்.
எடுத்துக்காட்டாக, சாலை, போக்குவரத்து துறைகளில் முதலீடு செய்தது, போக்குவரத்துத் துறையை அரசுடைமையாக்கியது.
1990களில் புதிய பொருளாதாரக் கொள்கை அமலுக்கு வந்த பிறகு சிறப்பு பொருளாதார மண்டலங்களை அமைக்க தோதான திட்டங்களை திமுகதான் செயல்படுத்தியது.
சமூக நீதிக்கு உத்தரவாதம்
இதையெல்லாம் செய்த அதே வேளை, வகுப்புரிமையை உத்திரவாதப்படுத்தியது.
குடிசை மாற்று வாரியத்தின் செயல்பாடுகளை விரிவுப்படுத்தி நகரப் புற வறிய பிரிவினருக்கான வீட்டுவசதிகளை செய்து கொடுத்தது.
மாநில சுயாட்சி தொடர்பான விவாதங்களை பொது வெளியில் தொடர்ந்து நடத்தியது.
முக்கியமாக தமிழ் சமுதாயத்தில் பார்ப்பன அறிவாளிகள் செலுத்தி வந்த மேலாண்மைக்கு முற்றுப்புள்ளி வைத்து திராவிட அறிவாளர்களின் வளர்ச்சியை சாத்தியப்படுத்தியது. தமிழ் அடையாளத்துக்கு செக்யூலர் உள்ளீட்டை வழங்கியதன் மூலம் தலித்துகளையும் கூட தன்வசப்படுத்தியது.
கையூட்டு அரசியலுக்கு அது வழிவகுத்த போதிலும், உள்கட்சி ஜனநாயகத்தை வளர்க்கத் தவறிய போதிலும் தேவைப்பட்ட போது மத்திய அரசுடனும் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடனும், ஏன் ஒரு கட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட அரசியல் கூட்டணி ஏற்படுத்திக் கொண்ட போதிலும் தன்னை தமிழர் நலம் காக்கும் கட்சியாக தொடர்ந்து நிலைநிறுத்திக் கொண்டது - இத்தனைக்கும் ஈழ விடுதலை போராட்டத்தை பொறுத்தவரை சந்தர்ப்பவாத நிலைப்பாட்டினையே அது மேற்கொண்டது.
திமுகவின் ஆட்சிக்காலத்தில்தான் சாதி இந்து சமுதாயங்களை சேர்ந்தவர்களின் ஒரு பிரிவினரின் ஒப்பீட்டளவிலான பொருளாதார, அரசியல் வளர்ச்சி என்பது சாத்தியப்பட்டது.
சாதி இந்துக்களின் வளர்ச்சி
அதே சமயம், இந்த வளர்ச்சியானது இச்சமுதாயங்களின் சாதிய தன்னிலையை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்தது.
வரலாற்று போக்கில் ஏற்பட்ட மாற்றங்கள் ஒருபுறமிருக்க, மறு புறம், சாதி எதிர்ப்பு என்பதை வகுப்புரிமையுடன் மட்டும் தொடர்புபடுத்திய அரசியல் சிந்தனையும் செயல்பாடும் இத்தகைய வளர்ச்சிக்கு வித்திட்டது எனலாம்.
மேலும், சாதியமைப்பை பத்திரப்படுத்தியுள்ள நிலவுடைமை முறை, சாதிய உளவியல், பண்பாடு, பொது வெளியில் சாதியை கடந்த உறவுகள் அவ்வப்போது சாத்தியப்பட்டாலும் பண்பாடு, காதல், குடும்பம் என்று வரும் போது சாதி அடையாளங்கள் தொடர்ந்து முன்நிறுத்தப்படுதல் ஆகியனவற்றை அரசியல் ரீதியாக அணுகுவதற்கான கருத்து நிலையும் அதையொட்டிய செயல்பாடும் முக்கியமானதாக கருதப்படவில்லை.
எனவே, சாதி இந்துக்களின் வளர்ச்சியானது ஒப்பீட்டளவில் ஜனநாயக பரவலாக்கத்தை சாத்தியப்படுத்திய போதிலும் சமுதாய வெளியிலும் நமது அரசியல் ஊடாட்டங்களிலும் ஜனநாயகம் ஆழமாக வேர் கொள்ள வித்திடவில்லை.
தலித்துகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெற்று வரும் வன்முறைகளும், சுய விமர்சனத்துக்கு இடங்கொடுக்காத "திராவிட" பெருமித அரசியல் சொல்லாடல்களும் ஒன்றுக்கு மற்றொன்று அரண்சேர்த்து உண்மையான ஜனநாயக வளர்ச்சியை தடுத்துள்ளன.
முக்கியமாக தலித்துகளுக்கு எதிராக செயல்படும் சாதி இந்து சமுதாயத்தினருக்கு அரசின் பாதுகாப்பு தொடர்ந்து இருந்து கொண்டே வந்துள்ளது.
ஜனநாயகப் பண்புகளைத் தூக்கி எறிந்த அதிமுக
அடுத்து அதிமுகவின் ஆட்சிகாலங்களை எடுத்துக் கொண்டால், தமிழகத்தின் அரசியல், சமுதாய வெளிகளிலிருந்து ஜனநாயகப் பண்புகள் முற்றிலுமாக தூக்கியெறியப்பட்ட ஆட்சிக்காங்களாக அவை இருந்தன என்று சொல்லலாம்.
மக்களுக்கான ஆட்சியாக தன்னை அறிவித்துக் கொண்டாலும் மக்களை மதிக்காத, அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அவ்வப்போது அவர்களுக்கு சலுகைகளை வழங்கும் ஆட்சியாகதான் ஆதிமுதற்கொண்டே இக்கட்சியின் ஆட்சி அமைந்தது.
அறிவுபூர்வமாக சிந்தித்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு திட்டமிடுதலுக்குப் பதிலாக மாநிலத்தின் நிதியாதாரங்களை கட்சித் தலைமையின் சொந்த கருவூலத்துக்குரிய சொத்தாக பாவித்தே அக்கட்சித் தலைமை செயல்பட வந்தது.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்ட முக்கிய மதிப்புரை ஒன்று அவரின் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி முடக்கப்பட்டதன் விவரங்களையும், அவரின் ஜனநாயக விரோத செயல்பாடுகள் மாநிலத்தின் ஜனநாயக வாழ்வில் ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளையும் பட்டியலிட்டுக்காட்டியது.
அவரின் ஆட்சியில் நடந்த என்கவுண்டர் கொலைகள், ஊடகத்துறையை கட்டுப்படுத்தும் வகையில் இயற்றப்பட்ட சட்ட மாற்றங்கள், சிவில் உரிமைகளுக்காகப் பாடுபட்ட அமைப்புகளும் அவற்றின் உறுப்பினர்களும் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டது தொடர்பான செய்திகள் ஆகியவற்றை அந்த மதிப்புரை உள்ளடக்கியிருந்தது.
சத்துணவுத் திட்டம்- யார் கொண்டுவந்தது ?
எம்.ஜி.ஆர் அட்சியின் முக்கிய சாதனை சத்துணவுத் திட்டம்தான்.
அதை சிலாகித்து பேசுபவர்கள் அதற்கு வித்திட்டவர் காமராஜர் என்பதையும் அவருக்கு முன் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் சுப்பராயனின் அமைச்சரவை இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தது என்பதை சுட்டிக்காட்டுவதில்லை.
எம்.ஜி.ஆர் இத்திட்டத்தை பரவலாக்கினார் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இதை செய்ததன் மூலம் குழந்தைகள் பள்ளிக்கூடத்துக்கு வருவதற்கான பெரும் வாய்ப்பையும் வெளியையும் அவர் ஏற்படுத்தினார் என்று கொண்டாலும், கல்வி தொடர்பான அவரின் பிற கொள்கைகளுடன் இதனைத் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டும் - குறிப்பாக உயர் கல்வி தனியார் மயமாவதற்கான திட்டத்தை தீட்டியவர் அவர்தான்.
தனியார் கல்லூரிகளில் வகுப்புரிமையை பாதுகாக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டாலும், இங்குள்ள பிற்பட்ட, தலித் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அரசுக்கு இருக்க வேண்டிய முக்கிய பொறுப்பை அரசு கைவிடவும் இந்த முடிவு காரணமாக இருந்தது.
லஞ்சம்
கையூட்டு அரசியல் வளரவும் விரிவடையவும் புதிய பொருளாதார கொள்கை காரணமாக அமைந்தது (இதற்கு முன் ஆட்சிகளும் கட்சிகளும் கையூட்டு அரசியலை பின்பற்றவில்லை என்று கூறிட முடியாது - திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை ஆணையத்தின் முடிவுகள் அக்கட்சித் தலைமைக்கு சாதகமாக அமையவில்லை என்பது வரலாறு).
அக்கொள்கையைப் பின்பற்றி தமிழகத்தின் மூலவளங்களை சூரையாடும் மோசமான வளர்ச்சிப் போக்கை ஜெயலலிதா தலைமையில் பதவியேற்ற ஆட்சி முன்னெடுத்தது.
இத்தகைய சூறையாடுதல் என்பது "இயல்பானதாக" ஆக்கப்பட்டு அதனால் இலாபம் ஈட்டிய தொழிற்குழாம்களும் குடும்பங்களும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களாக தங்களை கருதிக் கொள்ளவும் அவரின் ஆட்சி வழிவகுத்தது.
இருந்தும் மக்களின் நல்லாசியையும் ஆதரவையும் பெற எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஏற்றம் பெற்ற சலுகை அரசியலை இவர் அருங்கலையாக உருமாற்றினார் - குறிப்பாக ஏழைப் பெண்களைக் குறிவைத்து இவரின் சலுகை அரசியல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.
அதிமுகவின் ஆட்சிக்காலத்தில்தான் குறிப்பிட்ட சாதியினரின் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்ட அரசியல் வளர்ச்சி என்பது உத்தியாக கையாளப்பட்டது.
நமது ஜனநாயக அரசியலில் சாதி சமுதாயங்களின் நலனே மக்கள்நலனாக அறியப்பட்டு வரும் நிலைமையுள்ள போதிலும், குறிப்பிட்ட சாதியினரின் வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை மையமிட்ட அரசியலை அதிமுகதான் வெற்றிகரமாகவும் பட்டவார்த்தனமாகவும் கையிலெடுத்தது.
சாதி கட்சிகளின் வளர்ச்சிக்கான நியாயங்கள் எவ்வாறானதாக உள்ள போதிலும், அவற்றுக்கான அரசியல்ரீதியான ஒப்புதலை அதிமுகவின் செயல்பாடுகள் பெற்றுத் தந்தன.
இதை செய்த அதே வேளை தலித்துகளுக்கு எதிரான போக்கை அரசு மேற்கொள்வதையும் இக்கட்சிதான் "இயல்பா"க்கியது.
தன்பங்கிற்கு திமுகவும் ஆட்சியில் இருக்கையில் இந்த போக்கைக் கடைப்பிடிக்க தவறவில்லை.
பார்ப்பனரல்லாதார் இயக்கம் கண்டுள்ள மாற்றங்கள், அந்த இயக்கம் வழி உருவான அரசியல் கட்சிகளின் ஆட்சிக்காலங்கள் சாதித்தவை, செய்யாதவை, காலம் கிளர்த்தியுள்ள வரலாற்று பூர்வமான மாற்றங்கள் ஆகியவற்றை குறித்த துல்லியமான நுணுக்கமான ஆய்வுகள் நமக்குத் தேவை. அவற்றை மேற்கொள்ளும் மனநிலையும் அவசியம் .
வரலாற்றுப் பெருமிதங்களை கடந்து இத்தகைய ஆய்வுக்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும்.
பெரியார் நமக்கு வலியுறுத்தியவற்றை இங்கு நினைவுகூர்வது அவசியம் - சாதி, பார்ப்பனியம், இந்துமதம், பணக்காரத்தனம் அகிய அனைத்தும் ஒன்றோடு மற்றொன்று பின்னிப் பிணைந்துள்ளவையாகும் என்பதை அவர் சளைக்காமல் கூறிவந்தார்.
பார்ப்பனர்களின் மேலாண்மை, பணக்காரர்களின் ஆதிக்கம், இந்துமதம் சாற்றும் சாதிக்கொரு நீதி ஆகியவற்றை எதிர்ப்பதும், அவற்றுக்கு மாற்றீடாக பொதுவுடைமை, சமதர்மம், பகுத்தறிவு பேசும் அரசியல், சமுதாய செயல்பாடுகள் ஆகியன தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதும் அவசியம் என்பதை தன் வாழ்நாள் முழுக்க சுட்டிக் காட்டினார்.
அதற்கான செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவரின் வாதங்களை புதுப்பித்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்வதாக நமது ஆய்வுகளும் விவாதங்களும் அமைந்தால் பயனுள்ளதாக இருக்கும்.
(எழுத்தாளர் ஒரு இடது சாரி ஆய்வாளர், பெண்ணியவாதி)
பிற செய்திகள்
- ஆஃப்கன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் குண்டுவெடிப்பு: 29 பேர் பலி
- உங்கள் ஃபேஸ்புக் தகவல்களை தேர்தல் நேரத்தில் பாஜகவும் காங்கிரஸும் பயன்படுத்தியதா?
- இலங்கை: நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானக் கோரிக்கை
- மாணவிகளின் மார்பகங்களை தர்பூசணியுடன் ஒப்பிட்டு பேசிய பேராசிரியருக்கு எதிர்ப்பு
- பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்