You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
''கறுப்பியை எடுத்துவிட்டால் பரியேறும் பெருமாள் இல்லை'' - மாரி செல்வராஜ் பேட்டி
- எழுதியவர், மு. நியாஸ் அகமது
- பதவி, பிபிசி தமிழ்
தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள், மறக்கவே நினைக்கிறேன் போன்ற தொடர்கள் மூலம் இலக்கிய உலகத்தில் தடத்தை பதித்தவர் மாரி செல்வராஜ். இலக்கியம் என்பதை கடந்து எழுத்தின் மூலம் ஆழமான அரசியலை பேசி வரும் செல்வராஜ், தற்போது `பரியேறும் பெருமாள்` உடன் திரைத்துறைக்கு வருகிறார்.
அண்மையில் வெளியிடப்பட்ட, `பரியேறும் பெருமாள்` திரைப்படத்தின், ஒற்றை நாய் தலையுடன் வரும் `கருப்பி என் கருப்பி` பாடல் பரவலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த பாடலின் வரிகள் குறித்து பலர் சமூக ஊடகங்களில் விவாதித்தனர்.
இச்சூழலில், திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் பிபிசி தமிழிடம் பேசினார்.
`சிறுகதைகளின் தொகுப்பு`
பரியேறும் பெருமாள் எது குறித்து பேசும் படம்? என்ற கேள்விக்கு, "தட்டையாக ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால், மனித வாழ்வு குறித்து பேசும் படம். இன்னும் விரிவாக சொல்லவேண்டுமென்றால் நம்ப முடியாத அல்லது நாம் நம்ப மறுக்கும் விஷயத்தை குறித்து பேசும் படம். சமூகத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் நாம் சுலபமாக கடந்து விடுகிறோம். நுண் உணர்வுகளை கவனிக்க தவறிவிடுகிறோம். அந்த உணர்வுகளை எனக்கு தெரிந்த காட்சி மொழியில் மொழிபெயர்த்து இருக்கிறேன். இன்னும் சுருங்க சொல்ல வேண்டுமென்றால் உணர்ச்சி ததும்பும் பல சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த பரியேறும் பெருமாள்" என்று மாரி செல்வராஜ் தெரிவித்தார்.
இதில் எப்படி அந்த `கருப்பி` வந்து சேர்ந்தாள். யார் அந்த கருப்பி?
"கருப்பியின் தடத்தில்தான் இந்த பரியேறும் பெருமாள் பயணிக்கிறது. கருப்பி வழியாக நான் மொத்த கதையையும் சொல்லி இருக்கிறேன். கருப்பியை குறியீடாக வைத்து வலிமையான விஷயத்தை பேசி இருக்கிறேன். கருப்பியை எடுத்துவிட்டால் இந்த பரியேறும் பெருமாள் இல்லை" என்கிறார் மாரி செல்வராஜ்.
`என்கதை அல்ல... நானும் இருக்கிறேன்`
"மாரி செல்வராஜும் பி.ஏ.பி.எல், பரியேறும் பெருமாளின் நாயகனும் பி.ஏ.பி.எல்., இது உங்கள் கதையா? என்ற நம் கேள்விக்கு, "இல்லை... இல்லை... மாரி செல்வராஜ் பி.எல் -ஐ முடிக்காமல் சென்னை ஓடிவந்துவிட்டான். இயக்குநராகவும் ஆகிவிட்டான். ஆனால், பரியேறும் பெருமாளின் நாயகன் திருநெல்வேலியிலேயே இருந்து, அனைத்தையும் எதிர்கொண்டு பி.எல் முடித்துவிட்டான்.
எனக்கு நன்கு புலப்பட்ட... எனக்கு நன்கு பழக்கப்பட்ட வாழ்க்கையை இதில் சொல்லி இருக்கிறேன்.இது என் கதையல்ல. ஆனால், இதில் நானும் எங்கோ ஓரிடத்தில் இருக்கிறேன். எனக்கு தெரிந்த மனிதர்களை கதைக்குள் கொண்டு வந்திருக்கிறேன்." என்று விவரிக்கும் செல்வராஜ், தன் அனைத்து படைப்புகளும் புற அழுத்தங்களிலிருந்து விடுபட... தன்னை இலகுவாக்கி கொள்ளத்தான் என்கிறார்.
"நிலவும் அரசியல் சூழ்நிலை அழுத்தம் தருவதாக இருக்கிறது. மன உளைச்சல் தருகிறது. அதிலிருந்து விடுப்பட்டு என்னை லேசாக வைத்துக் கொள்ளதான் தொடர்ந்து இயங்குகிறேன். அதுமட்டுமல்ல, நான் தொலைந்துவிடவில்லை என்பதை நிரூபிக்க வேண்டி இருக்கிறது. அந்த நிரூபித்தல் எனக்காக மட்டும் அல்ல. என்னை போல எங்கிருந்தோ புறப்பட்டு வந்து, தன் மீது வெளிச்சம் பாயும் என்று இருக்கும் பலரின் நம்பிக்கைகாகவும் இந்த நிரூபித்தல் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதற்காக இங்கு என் இருப்பை தக்கவைக்க தொடர்ந்து எழுத்து, சினிமா என தொடர்ந்து இயங்குகிறேன்." என்கிறார் மாரி செல்வராஜ்.
`உரையாடலை நிகழ்த்தும்`
ரஞ்சித்தின் கைகளுக்கு எப்படி பரியேறும் பெருமாள் சென்றது என்ற நம் கேள்விக்கு, செல்வராஜ், "ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் எங்கிருந்து வந்தாலும் அதை கூர்ந்து கவனிப்பவர் ரஞ்சித். அதுபோலதான் என் எழுத்துகளையும் தொடர்ந்து கவனித்து வந்திருக்கிறார். அழைத்து பேசினார். சிறுகதை எழுதுவது போல சினிமா எடுத்து விட முடியாது என்றெல்லாம் நினைக்காதே... நீ நினைக்கும் விஷயத்தை சினிமாவாக எடு என்று ஊக்கம் கொடுத்தார். அவர் அளித்த நம்பிக்கைதான் இந்தப் படம். எல்லோரும் ரஞ்சித்தை சண்டைக்காரர் என்று நினைக்கிறார்கள். அது துளியும் உண்மை அல்ல. அவர் உரையாடலை விரும்புகிறார். அவர் விரும்பும் அந்த உரையாடலை நிச்சயம் பரியேறும் பெருமாள் நிகழ்த்தும்" என்று குறிப்பிட்டார்.
உங்களுடைய இயக்குநர் ராம் படத்தை பார்த்துவிட்டாரா, அவர் என்ன சொன்னார்? என்று கேட்டோம். அதற்கு அவர், "நான் ஐந்து ஸ்கிரிப்ட் எழுதினேன். ஐந்தையும் அவரிடம் கொடுத்தேன். அவர் தேர்ந்தெடுத்ததுதன் இந்த படம். `நீ யார் என்று மூன்றாவது படத்தில் எல்லாம் நிரூபித்துவிட முடியாது. முதல் படத்திலேயே நிரூபிக்க வேண்டும். இந்த கதை நீ யார் என்று நிரூபிக்கும்' என்று சொல்லி இந்த கதையை தேர்ந்தெடுத்தார். படத்தை பார்த்தவர், 'நான் மாரி செல்வராஜ் என்னவாக வேண்டுமென்று நினைத்தேனோ. அவன் எப்படியான படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்தேனோ. அதை எடுத்திருக்கிறாய்' என்றார் ஒரு தகப்பனின் வாஞ்சையுடன்"
திரைப்படத்தின் மூலம் அரசியல் பேசுவது குறித்து செல்வராஜ், "பாதிக்கப்பட்டவர்களின் நியாயத்தை கலையின் மூலமாக பேசி இருந்தால் தீர்வு கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் கனவை கலையின் வடிவாக பேசினால் அனைவராலும் புரிந்துக் கொள்ள முடியும் என்று நம்புகிறேன். களத்தில் நிற்பது எவ்வளவு முக்கியமோ, கலை தளத்தில் நிற்பதும் அவ்வளவு முக்கியம். இப்போது நான் அங்கு நிற்கிறேன்" என்கிறார்.
`கனவை சுமத்தல்`
பரியேறும் பெருமாள் படக்குழு குறித்து பேசிய செல்வராஜ், "ஒரு வாழ்க்கையை பேசும் படம் இது. அதை ஒரு அறிமுக இயக்குநர் 47 நாட்களில் முடிப்பது எல்லாம் அவ்வளவு எளிதல்ல. ஆனால், முடித்து இருக்கிறோம். உடலில் கட்டிக் கொண்டு இயக்க வேண்டிய ஒரு கேமிராவை படம் முழுவதிலும் பயன்பத்தி இருக்கிறோம். ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் அதை நாள் முழுவதும் கட்டிக் கொண்டு சுமந்தார். கலைப்படமாக மட்டும் அறியப்பட்டிருக்கும் ஒரு படத்திற்கு இசை மூலமாக வேறு நிறம் தந்தார் இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். செல்வா படத்தொகுப்பு படத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்து சென்றுள்ளது. என் கனவை மொத்த குழுவும் சுமந்து இருக்கிறார்கள். என் மீது கோபப்பட்டுக் கொண்டே, என்னிடம் அவர்களை ஒப்புக் கொடுத்து இருக்கிறார்கள்." என்கிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்