You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதின் ஏன் சிரிக்கிறார்? : புதின் குறித்து கூகுளில் தேடப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்
ரஷ்ய அதிபராக இன்று பதவியேற்கவுள்ள விளாடிமிர் புதின், 2024 வரை ரஷ்ய அதிபராகத் தொடர உள்ளார். ரஷ்ய தலைவர் புதின் பற்றி நன்கு அறிந்திருந்தாலும், அவரை பற்றி இன்னும் நிறைய விஷயங்களை மக்கள் அறிந்துகொள்ள விரும்புகின்றனர்.
ஒரு சோதனை முயற்சியாக, கூகுள் தானாக பரிந்துரைக்கும் தேடல்களைக் காண, புதினைப் பற்றி சில கேள்விகளைத் கூகுளில் தட்டச்சு செய்யத் தொடங்கினோம். கூகுளில் நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடிவு செய்தோம் (சிலவற்றை மிகவும் வித்தியாசமானதாக இருக்கலாம்).
புதின் திருமணமானவரா?
இல்லை. எங்களுக்குத் தெரிந்தவரை இல்லை. புதினும், அவருடன் 30 வருடங்கள் மணவாழ்வில் இருந்த லுயூத்மிலாவும் 2013-ம் ஆண்டு ஜூன் மாதம் விவாகரத்து செய்தனர். இவர்கள் விவாகரத்து செய்வதற்கு சில மாதங்கள் முன்பு, பொதுவில் ஒன்றாக அரிதாகவே காணப்பட்டனர்.
முன்னாள் ஜிம்னாஸ்ட் வீராங்கனையும், அரசியல்வாதியுமான அலினா கபேவேவுடன் புதின் டேட்டிங் செய்ததாக வதந்திகள் உள்ளன. ஆனால், இது உண்மையா என்பதற்கு எந்த அறிகுறிகளும் இல்லை.
இடது கைக்காரரா?
இல்லை. இந்த படம் எடுக்கப்பட்ட ஜனவரி மாதத்திற்குப் பிறகு ஏதேனும் மாற்றங்கள் நிகழவில்லை என்றால், புதின் இடது கைக்காரர் இல்லை.
பணக்காரரா?
இந்த தேர்தலுக்கு முன்பு ரஷ்ய மத்திய தேர்தல் ஆணையத்தின் பதிவு செய்யப்பட்ட தகவலில் படி, புதினின் ஆண்டு சம்பளம் 1,12,000 டாலராகும்.
ஆனால், புதின் ஒரு ஊழல்வாதி என்றும், தனது சொத்துக்களை பல ஆண்டுகளாக மறைத்து வைத்துள்ளார் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அமெரிக்க கருவூல அதிகாரி பிபிசியிடம் கூறினார்.
''தனது நண்பர்களைப் பணக்காரர்களாக மாற்றுபவராக நாங்கள் அவரை பார்க்கிறோம். அவரது நெருங்கிய நண்பர்களும், நண்பர்களாக இருந்து அவரால் ஓரம்கட்டப்பட்டவர்களும் அரசின் சொத்துகளை பயன்படுத்துகின்றனர்'' என அப்போதைய அமெரிக்க கருவூல அதிகாரி ஆடம் சூபின் கூறுகிறார்.
இந்த குற்றச்சாட்டுகளை ''தூய கற்பனை'' என கிரெம்ளின் மாளிகை கூறுகிறது.
இருந்தாலும், 2007 ஆண்டின் ஒரு சிஐஏ குறிப்பு, புதினின் அப்போதைய தனிப்பட்ட சொத்து 40 பில்லியன் டாலர்கள் என கூறுகிறது. புதினின் சொத்து குறித்து 2012 ஆண்டு கருத்து கூறிய ஆய்வாளரும், டொனால்ட் டிரம்ப்பின் விமர்சகருமான ஒருவர், புதினின் சொத்து மதிப்பு 70 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது என்றார். இது அவரை உலகின் மிகவும் பணக்கார மனிதராக மாற்றியிருக்கும்.
இறந்துவிட்டாரா?
இல்லை. இந்த தேர்தல் வெற்றி அவர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரம்.
2015-ம் ஆண்டு 10 நாட்கள் பொதுவெளியில் அவர் காணப்படாததால், அவரது உடல் நலன் குறித்து ஊகங்கள் கிளம்பின.
புரட்சி மூலம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டரா? இறந்துவிட்டாரா? மீண்டும் தந்தையாகிவிட்டாரா? என அனைத்து விதமாக பேச்சுகளும் எழும். ஆனால், அவர் மீண்டும் வெளிவந்தது,'' வதந்திகள் இல்லையென்றால் வாழ்க்கை அலுப்பாக இருக்கும்'' என்று மட்டும் கூறுவார்.
புதின் ஏன் சிரிக்கிறார்?
அவர் நம்மில் இருந்து வேறுபட்டவர் அல்ல; நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, உங்கள் உடல் எண்டோர்பின் உருவாக்குகிறது, நரம்பு சமிக்ஞைகள் உங்கள் முக தசைகளுக்கு அனுப்பப்படுகின்றன. அவை சிரிப்பை உண்டாக்குகின்றன.
உக்ரைனை ஆக்கிரமிக்க நினைக்கிறாரா?
ஆம், அவர் ஏற்கனவே உக்ரைனை ஆக்கிரமித்துவிட்டார். கிரிமியாவை ரஷ்யாவுடன் இணைந்துகொண்டார்.
2014-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரேனில் மற்ற பகுதிகளுக்குள் நுழையவில்லை. ஆனால், அங்குள்ள ரஷ்ய ஆதரவு போராளிகளுக்கு, தங்கள் நாட்டு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்ததை ரஷ்யா ஒப்புக்கொண்டது. ஆனால், இந்த ராணுவ நடவடிக்கைக்குப் பின்னால் ரஷ்யா இருப்பதாக அனைவராலும் நம்பப்படுகிறது.
சிரியாவுக்கு ஆதரவளிக்கிறரா?
ரஷ்யாவுக்கு சிரியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும். அங்கு ரஷ்யாவுக்கு இரண்டு ராணுவ தளங்கள் உள்ளன. பஷர் அல்-அசாத்தின் அரசு சிறிது காலத்திற்கு ரஷ்யாவுடன் ஒரு முக்கிய நட்பு நாடாக இருந்தது.
2011 ல் சிரியாவில் யுத்தம் வெடித்தபோது, ரஷ்யா அசாத்தை ஆதரித்தது.; ஆனால் செப்டம்பர் 2015 வரை ரஷ்யா அங்கு போரில் ஈடுபடவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவைத் தனது ஆனைத்து இலங்குகளையும் அடையவிடாமல் போராட வைப்பது, அசாத்தை பதவியில் வைத்திருப்பதன் மூலம் சர்வதேச அளவில் தன்னை நிரூபிப்பது என்ற இரண்டு நோக்கங்களுக்காக ரஷ்யா சிரியாவில் உள்ளது.
புதினுக்கு மகன் உள்ளாரா?
இல்லை. ஆனால்,கேட்ரீனா, மரியா என இரண்டு மகள்கள் உள்ளனர் என அவர் ஒப்புக்கொண்டுள்ளார். முன்னாள் நடன கலைஞரான கேட்ரீனா மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். மரியா மருத்துவதுறையில் பணிபுரிவதாக நம்பப்படுகிறது.
அதிகம் அறியப்படாத அவர்களை பற்றி, புதினிடம் இருந்து எந்த தகவல்களையும் பெற முடியாது. ஆனால், கேட்ரீனாவும் அவரது கணவரும் பெரும் பணக்காரர்களாக உள்ளனர் என 2015-ம் ஆண்டு ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.
ஆங்கிலம் தெரியுமா?
ஆம். அவர் சரளமாக ஆங்கிலம் பேசும் காணொளி உள்ளது. தனது மொழிபெயர்ப்பாளர்கள், ஆங்கிலத்தில் சரியாக மொழிபெயர்க்கவில்லை என்றால் புதினே திருத்துவார் என அவரது செய்தி தொடர்பாளர் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
புதினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்பை பிடிக்குமா?
இது ஒரு சுவாரஸ்யமான கேள்வி. இதற்கு புதினால் மட்டுமே பதில் சொல்ல முடியும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்