பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்

இராக்கில் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்ட 39 இந்தியர்களின் மரணமும் மரபணு சோதனைக்குப் பின் உறுதி செய்யப்பட்டுவிட்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.

இராக்கில் உள்ள மொசூல் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பினரால் 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். இதையடுத்து அவர்களை மீட்பதற்கு இந்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டது.

இது தொடர்பாக 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், போதிய ஆதாரம் இல்லாமல் ஒருவர் இறந்துவிட்டார் என்று கூறுவது பாவத்திற்குரிய செயலாகும் என்று கூறி இருந்தார்.

அவர்கள் கடத்தப்பட்டதிலிருந்து, இந்திய அரசு அவர்கள் உயிருடன் இருப்பதாகவே கூறி வந்தது. அவர்களை உயிருடன் மீட்பதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றது.

இப்படியான சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக சுஷ்மா ஸ்வராஜ் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூறி உள்ளார்.

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 உடல்களில், டி.என்.ஏ பரிசோதனையில் 38 உடல்கள் இந்தியர்களுடையது என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒரு உடல் காணாமல் போனவரின் உடலுடன் 70 சதவீதம் மட்டுமே பொருந்துகிறது.

இதில் 31 பேர் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள், 4 பேர் இமாச்சல பிரதேசத்தை சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பீகார் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.

என்ன நடந்தது?

இராக்கில் 2014 ஆம் ஆண்டு 80 பேர் ஐ.எஸ் அமைப்பால் கடத்தப்பட்டார்கள். அதில் 40 பேர் இந்தியர்கள்; 40 பேர் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள்.

இந்த விவகாரம் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு வந்தது. கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

கடைசியாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா உறுப்பினர் பிரதாப் சிங் பஜ்வா, ஜூலை 27, 2017ஆம் தேதி இது தொடர்பாக கேள்வி எழுப்பினார். உறுதியான ஆதாரங்கள் கிடைக்கும் வரை, அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறு முடியாது என்று அரசு கூறியது.

இதே ஆண்டு சுஷ்மா ஸ்வராஜ், கடத்தப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே. சிங்கும் உடன் இருந்தார்.

அதன் பிறகு வி.கே. சிங், இராக் பயணமானார்.

தப்பியவரின் வாக்குமூலம்

அப்போது மொசூலில் இருந்து தப்பி இந்தியா வந்த ஹர்ஜீத் மஸீஹ், அனைவரும் ஐ. எஸ் அமைப்பால் தலையில் சுடப்பட்டு கொல்லப்பட்டதாக 2015 ஆம் ஆண்டு கூறினார். ஆனால், இது பொய் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியது.

இராக் பயணமான வி.கே.சிங் அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் தலைவரை சந்தித்தார்.

மொசூலை ஐ.எஸ் அமைப்பு கைப்பற்றிய பின் அனைவரையும் அங்கிருந்து வெளியேற சொன்னார்கள், ஆனால், அவர்கள் அங்கிருந்து செல்லவில்லை. ஒரு நாள் உணவருந்திக் கொண்டு இருந்த போது ஐ.எஸ் அமைப்பினர் அவர்களை பார்த்துவிட்டனர். இனி இவர்கள் அங்கே தங்க கூடாது என்று சொன்ன ஐ.எஸ் அமைப்பினர். அனைவரையும் ஒரு துணி ஆலையில் தங்க வைத்துள்ளனர்.

பின் அங்கிருந்து வங்க தேசத்தினரை மட்டும் இர்பில்லுக்கு அழைத்து சென்றனர். வங்க தேசம் சென்ற குழுவுடன் ஹர்ஜீத்தும், அலி என்ற பெயரை மாற்றி சென்றார் என்று சுஷ்மா ஸ்வராஜ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பின் ஹர்ஜீத் கைது செய்யப்பட்டார். ஆறு மாத சிறை தண்டனையும் அனுபவித்தார்.

பிபிசியிடம் பேசிய ஹர்ஜீத், "நான் அப்போதே 39 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றேன். ஆனால், நான் பொய் சொல்கிறேன் என்றார்கள். என்னை சிறையிலும் அடைத்தார்கள். இப்போது அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்று சுஷ்மா ஸ்வராஜே சொல்கிறார். அரசு அனைவரையும் தவறாக வழிநடத்தி உள்ளது. நான் எந்த பொய்யும் சொல்லவில்லை. அரசுதான் பொய் சொல்லி இருக்கிறது என்று நம்புகிறேன்." என்று தெரிவித்தார்.

மொசூல் நகரத்தின் கதை

2014 ஆம் ஆண்டு, ஐ.எஸ் அமைப்பு இராக்கின் இரண்டாவது பெரிய நகரமான மொசூல் நகரத்தை கைப்பற்றியது.

இராக் ராணுவம், குர்து போராளிகள், பழங்குடிகள் ஐ,எஸ்-க்கு எதிராக போராடினர். அமெரிக்க வான்படையும் ஐ.எஸ்-க்கு எதிராக போராடியது.

ஐ.எஸ் அமைப்பு மொசூல் நகரத்தை முழுவதுமாக சிதைத்தது. கட்டடங்களை தகர்த்தது.

மில்லியன் கணக்கான மக்கள் அந்த நகரத்திலிருந்து தப்பி சென்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லபட்டனர்.

ஒரு நீண்ட போருக்குப் பின் 2017 ஆம் ஆண்டு, இராக் பிரதமர் ஹைதர் அல்- அபைதி, மொசூல் நகரம் மீட்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார்.

ஒரு பில்லியன் டாலர் தேவை

மீண்டும் நகரத்தை நிர்மாணிக்க ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படும் என்று ஐ.நா அமைப்பு கூறி இருந்தது.

சர்வதேச அகதிகள் நிறுவனம் ஏறத்தாழ எட்டு லட்சம் மக்கள் வீடுகளை விட்டு,, வேறு இடங்களுக்கு குடிபெர்யர்ந்துள்ளதாக கூறுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :