`லிங்காயத்' சமூகத்துக்கு தனி மத அங்கீகாரம்: பாஜகவை வீழ்த்த காங்கிரஸின் வியூகமா?

    • எழுதியவர், இம்ரான் குரேஷி
    • பதவி, பிபிசி

இன்னும் ஏழு வாரங்களில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகாவில் `லிங்காயத்' சமூகத்தை தனி மதமாக அங்கீகரிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் நடக்க இருக்கும் சூழ்நிலையில் இது நிச்சயமாக பா.ஜ.கவுக்கு அசெளகர்யத்தை ஏற்படுத்தும்.

இதில் முரண் என்னவென்றால், ஐந்து ஆண்டுகளுக்கு முன் எடடியூரப்பாவே இதனை ஆதரித்து இருந்தார். ஆனால் இப்போது இந்த விஷயத்தில் வீரசைவ மஹாசபா வழிக்காட்டும் என்கிறார்.

லிங்காயத்துகள் கர்நாடகாவில் மட்டும் இல்லை. அவர்கள் மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருக்கிறார்கள். முன்னாள் மஹாராஷ்ட்ரா முதல்வர் பிரித்விராஜ் செள்கானும் இது போன்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு வழங்கி இருந்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

அதே சமயம், லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்து இட ஒதுக்கீடு வழங்குவதால், இட இதுக்கீட்டை பெற்று வரும் பிற சமூகங்களுக்கு நிச்சயம் எந்த பாதிப்பும் இருக்காது. கர்நாடக சட்ட அமைச்சர், ஜெயசந்திரா, "இதனால் பிற சமூகங்கள் பாதிக்கப்படாது" என்று தெளிவாக கூறி உள்ளார்.

யார் இந்த பசவேஷ்வரா?

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி பசவேஷ்வராவை பின்பற்றுபவர்கள்தான் லிங்காயத்துகளும், வீரசைவ லிங்காயத்துகளும்.

இவர்களுக்கு தனி சிறுபான்மை மத அங்கீகாரத்தை வழங்க கூறி நீதிபதி நாகமோகன் தாஸ் தலைமையிலாம குழு பரிந்துரை வழங்கி இருந்தது. இந்த பரிந்துரையை கர்நாடக அமைச்சகம் ஏற்றுள்ளது.

அதே நேரம், வீரசைவர்களாக மதம் மாறினாலும், பசவேஷ்வராவை பின்பற்றாமல் இருப்பவர்களுக்கு இந்த மத சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படமாட்டாது. ஏனெனில், அவர்கள் இன்னும் இந்து சமய நம்பிக்கையை பின்பற்றி அதை பின் தொடர்பவர்களாகவே கருதப்படுவார்கள்.

பிறப்பால் பிராமணரான பசவேஷ்வரா, இந்த சமயத்தில் உள்ள சாதிமுறைகளுக்கு ஏதிராக போராடினார். பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும், தலித் சமூகத்தவர்களும் பசவேஷ்வராவை பின் தொடர தொடங்கினர். லிங்காயஸ்துகளாக மாறினர்.

வரவேற்கப்பட வேண்டிய நகர்வு

லிங்காயத் சமூகத்தை சேர்ந்த மதகுருவான மதே மஹாதேவி, "இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. நாங்கள் இந்து மதத்தில் ஒரு சாதி பிரிவு இல்லை. நாங்களே தனி மதம்தான். மத சிறுபான்மையினர்" என்று பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

முன்னாள் தலைமை செயலாளர் மற்றும் லிங்காயத் தர்மா சமிதியின் ஒருங்கிணைப்பாளர், எஸ்.எம்.ஜாம்தார், "லிங்காயத்துக்களுக்கு தனி மத அந்தஸ்து வழங்குவதால் மற்ற மத சிறுபான்மையினர் நிச்சயம் பாதிக்கப்பட மாட்டார்கள். பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கப்படும். இத்தனை நாள் உயர்சாதிகளால் எடுத்துக் கொள்ளப்பட்ட பலன்கள் அனைத்தும் இனி பசவண்ணாவை பின் தொடர்பவர்களுக்கு கிடைக்கும்." என்கிறார்.

காங்கிரசுக்கு ஆதாயம் ?

இந்த நகர்வால், காங்கிரசுக்கு ஏதேனும் தேர்தல் ஆதாயம் கிடைக்குமா? பா.ஜ.கவின் வாக்கு வங்கி பாதிக்கப்படுமா?

"வட கர்நாடாகா மாவட்டங்களில் லிங்காயத்துகள் அடர்த்தியாக வசிக்கிறார்கள். அந்தப் பகுதியில் காங்கிரசுக்கு இது உதவியாக இருக்கும். அனால், இது தெற்கு மாவட்டங்களில் இது உதவி செய்யாமல் போகலாம். ஏனெனில், அந்த பகுதிகளில் மடங்கள்தான் ஆதிக்கம் செலுத்துகிறது." என்கிறார் அரசியல் ஆய்வாளரான மஹாதேவ் பிரசாத்.

பா.ஜ.க இந்த விஷயத்தில் காங்கிரஸை, `சமூகத்தை பிளவுப்படுத்துகிறது` என்று குற்றஞ்சாட்டி உள்ளது. "அரசு இந்த விஷயத்தை அரசியலாக்குவது துரதிருஷ்டமானது. வீரசைவ மஹாசபா மற்றும் மடாதிபதிகள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் இது" என்று கூறி உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: