You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டெல்லி சாலையில் உருண்டு விவசாயிகள் போராட்டம்; அய்யாக்கண்ணு மயக்கம்
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகள், கை, கால்களைக் கட்டிக் கொண்டு நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தி வரும் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு திடீர் மயக்கமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 22 நாட்களாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான விவசாயிகள் மூத்தவர்கள். எண்பது வயதுக்கும் மேற்பட்ட விவசாயிகளும், பெண் விவசாயிகளும் இதில் அடங்குவார்கள்.
கடந்த இரு தினங்களுக்கு பாதி தலையில் மொட்டியடித்தும், அதற்கு அடுத்த நாள் பாதி மீசையை மழித்தும், அரசின் கவனத்த ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தினர். நேற்று தலைகீழாக நின்று போராட்டம் நடத்தினர்.
இன்று, ஜந்தர் மந்தர் பகுதியில் சாலையின் நடுவே ஒரு விரிப்பை விரித்து, கை, கால்களைக் கட்டியபடி சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பெண் விவசாயிகளும் கலந்துகொண்டார்கள்.
சுமார் இரண்டு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றது. அப்போது, கடும் வெப்பம் காரணமாக, பல விவசாயிகள் மிகுந்த சோர்வடைந்தனர். போராட்டக் குழுத் தலைவர் அய்யாக்கண்ணு, அந்தப் போராட்டத்துக்குத் தலைமையேற்று முதலில் சாலையில் உருண்டு கொண்டிருந்தார். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு அவர் சோர்வடைந்து, பிறகு திடீரென மயக்கமடைந்தார்.
பிறகு, காவல் துறை வாகனத்தில் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
முன்னதாக, பிபிசி தமிழிடம் பேசிய அய்யாக்கண்ணு, நேற்றிரவு டெல்லியில் மழை பெய்த போதிலும், அதில் விவசாயிகள் அனைவரும் நனைந்து அவதிப்பட்டதாகவும், இன்று காலையில் வெயில் கொளுத்துவதால் பலர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஆனால் தங்களது வேதனைகளை அரசு புரிந்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.
எவ்வளவு சோதனைகள் வந்தாலும், தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லியை விட்டு நகரப் போவதில்லை என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
விவசாயிகளின் போராட்டத்துக்கு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் மு.க..ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ் மாநில காங்கிரஸ், மதிமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர்.
மேலும் சில செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்