டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ் இளைஞர்கள், பெண்கள் பேரணி
புதுடெல்லியில் கடந்த 20 நாட்களாக வறட்சி நிவாரணம் மற்றும் விவசாய கடன் தள்ளுபடி கோரி போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக, டெல்லியைச் சேர்ந்த தமிழ் இளைஞர்களும் பொதுமக்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தியுள்ளனர்.

கன்னாட் பிளேஸ் பகுதியில் துவங்கிய இந்த பேரணி, விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் ஜந்தர் மந்தர் பகுதி வரை சென்றடைந்து, அங்கு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் இணைந்து முழக்கமிட்டனர்.

பெண்களும், பலர் தங்களது குடும்பத்தினருடனும் இந்த பேரணியில் கலந்துகொண்டனர். பிரதமர் நரேந்திர மோதி விவசாயிகளின் போராட்டத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என அவர்கள் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கோஷங்களை எழுப்பினார்கள்.
காவிரி நதிநீர் பங்கீடு விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்பட மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று போராட்டத்தில் பங்கேற்ற இளைஞர்கள் தெரிவித்தனர்.

''காவிரி மேலாண்மை வாரியம் அளித்த தீர்ப்பை செயல்படுத்த ஏன் மத்திய அரசு முன்வர மறுக்கிறது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏன் இன்று வரை நிவாரணம் அளிக்கப்படவில்லை. இவர்களுக்கான ஆதரவை தெரிவிக்கும் வகையில் டெல்லியில் உள்ள தமிழ் இளைஞர்கள் ஒன்று இணைத்துள்ளோம்,'' என்று போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் தெரிவித்தார்.
பல விதங்களில் போராட்டம் நடத்திய பிறகும் மத்திய, மாநில அரசுகள் எந்த விதத்திலும் தங்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றாலும் இளைஞர்களின் இந்த ஆதரவு தங்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

''எங்களது நிலையை அரசுக்கு உணர்த்த எலிக் கறி, பாம்பு கறி ஆகியவற்றை சாப்பிட்டு போராட்டம் நடத்தினோம். அரை நிர்வாணம், பிச்சை எடுக்கும் போராட்டம் என பல வடிவங்களில் எங்களது போராட்டம் நடந்து வருகிறது. எங்களது போராட்டம் பிரதமர் மோதியின் கவனத்திற்கு ஏன் வரவில்லை என்று தெரியவில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி ஒருவர் தெரிவித்தார்.
ஜந்தர் மந்தர் பகுதியில், பேரணி நிறைவடைந்ததும், பெண்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்மியடித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு நாளும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள், இன்று தலையில் பாதி மொட்டை அடித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இதற்கு முன்பு, விவசாயி ஒருவரை சாலையின் நடுவில் படுக்க வைத்து, சடலத்தைப் போல மாலையிட்டு அலங்கரித்து ஒப்பாரி வைத்து அழுது போராட்டம் நடத்தினார்கள். பிறகு வாயில் கறுப்புத்துணி கட்டி போராட்டம் நடத்தினார்கள்.
இத்தகைய போராட்டங்கள் தொடரும் என, இப் போராட்டத்துக்குத் தலைமை தாங்கி நடத்தி வரும் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு பிபிசியிடம் தெரிவித்தார்.
காணொளி: கோவணம் கெத்தான உடை - இயக்குனர் பாண்டியராஜ்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்
டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்
இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்














