தென் கொரியாவுக்கு தப்பியோடிய குழுவை திருப்பியனுப்ப வட கொரியா கோரிக்கை

பட மூலாதாரம், AP
இவ்வாண்டின் தொடக்கத்தில் நாட்டைவிட்டு தப்பி சோல் நகருக்கு சென்ற உணவகத் தொழிலாளர் குழு ஒன்றை திருப்பி அனுப்புமாறு வட கொரியா தென் கொரியாவிடம் கோரிக்கை வைத்திருக்கிறது.
இந்த தொழிலாளர் குழு சிறைக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் விடுத்த அறிவிப்பை அடுத்து, முதலாவது அதிகாரப்பூர்வ மறுமொழியாக வட கொரியாவிடமிருந்து இந்த கோரிக்கை வந்திருக்கிறது.
சீனாவில் நிங்போ நகரில், வட கொரிய அரசு நடத்துகின்ற உணவகத்தில் இருந்து 12 உணவகத் தொழிலாளர்களும், அவர்களின் மேலாளரும் ஏப்ரல் மாதம் தப்பியோடி தென் கொரியா வந்தடைந்தனர்.
இந்த குழு தென் கொரியாவின் உளவுத் துறையால் கடத்தப்பட்டனர் என்று வட கொரியா கூறுகிறது.
அதனை மறுத்திருக்கும் தென் கொரியா, நாட்டைவிட்டு தப்பியோட முயற்சிப்போரை வட கொரியா படுகொலை செய்வது உள்பட சாத்தியமாகும் பழிவாங்கும் செயலுக்கு எதிராக பாதுகாப்பு வழங்கி வருவதாக கூறியிருக்கிறது.








