தென் சீனக் கடல் பிரச்சனை: சீனாவுக்கு எதிராக சர்தேசத் தீர்ப்பாயம் தீர்ப்பு
சர்வதேசத் தீர்ப்பாயம் ஒன்று , தென் சீனக் கடல் எல்லை மீது சீனா உரிமை கோருவதை எதிர்த்து பிலிப்பைன்ஸ் தொடுத்த வழக்கில், சீனாவுக்கு எதிராக தீர்ப்பளித்திருக்கிறது.

சீனா, தென் சீனக் கடலின் நீர் மற்றும் வளங்கள் மீது பிரத்தியேக ஆளுமை செலுத்தியதற்கான எந்த வரலாற்று பூர்வமான ஆதாரமும் இல்லை என்று இந்த நிரந்தர நடுவர் தீர்ப்பாயம் கூறியிருக்கிறது.
சீனா இந்த தீர்ப்பை ''தவறான அடிப்படையில் அமைந்தது'' என விவரித்துள்ளது.

பட மூலாதாரம், Reuters
சீனா, கடல் பவழப்பாறைகள் மற்றும் தீவுகள் உட்பட ஏறக்குறைய ஒட்டுமொத்த தென் சீன கடல் முழுவதையுமே சொந்தம் கொண்டாடுகிறது. இந்தக் கடல் பகுதி மீது பிற நாடுகளும் உரிமை கோருகின்றன.
'தி ஹேக்' நகரில் உள்ள தீர்ப்பாயம் சீனா, பிலிபைன்ஸின் இறையாண்மை உரிமைகளை மீறியுள்ளது என்றும்,செயற்கையான தீவுகளைக் கட்டுவதன் மூலம் பவழப் பாறைகளுக்கு தீவிரமான கெடுதலை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளது.

பட மூலாதாரம், AP
ஐ.நா.சபையின் கடல் சட்டம் குறித்த உடன்பாட்டின் கீழ் செயல்படும் தீர்ப்பாயம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. சீனாவும், பிலிபைன்ஸும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்துதிட்டுள்ளன.
இந்த தீர்ப்பு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது ஆனால், இந்த நிரந்தர நடுவர் தீர்ப்பாயத்திற்கு இத்தீர்ப்பை அமலாக்கும் அதிகாரங்கள் இல்லை.
இந்த தீர்ப்புக்கு முன்னதாகவே, அமெரிக்கா, விமானம் தாங்கி மற்றும் ஜெட் போர் விமானங்களை பிரச்சனைக்கு உட்பட பகுதிக்கு அனுப்பியது குறித்து, 'குளோபல் டைம்ஸ்' என்ற தீவிர தேசியவாத பத்திரிக்கை, சீனா அரசாங்கத்தால் நடத்தப்படும் நாளிதழில், கோபமாக தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அந்த தலையங்கம் அமெரிக்காவை ராணுவ மோதலுக்கு தயாராக அழைப்புவிடுத்தது.
இதற்கிடையில், சீனாவின் கடற்படை சர்ச்சைக்குரிய பாராசெல் தீவுகளுக்கு அருகில் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.












