யேமன் -- ஐந்து முக்கிய தகவல்கள்

திங்கட்கிழமை யேமனில் அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தம், அந்த நாட்டில் ஓராண்டு காலமாக நடந்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கிலானது. அடுத்த வாரம் குவைத்த்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடக்கவிருப்பதற்கு முன்னதாக இந்த போர் நிறுத்தம் வருகிறது. யேமன் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டிய ஐந்து தகவல்களைத் தருகிறது பிபிசி.

சானா நகரில் யேமனியர்கள் நடந்து செல்லும் காட்சி

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, யேமனின் மக்கள் தொகையில் குறைந்தது 80 சதவீதத்தினர் உணவுக்காக உதவியை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கின்றனர் ( ஈபிஏ படம்)

1)அரபு நாடுகளிலேயே, யேமன் நாடுதான் மிகவும் வறிய நாடு. குறைந்து வரும் எண்ணெய் மற்றும் தண்ணீர் வளம் அதன் பிரச்சனைகள். மோதல் ஓராண்டுக்கு முன்னர் தொடங்கியதிலிருந்து, அதன் அடிப்படைக் கட்டமைப்பு நொறுங்கிவிட்டது. பொருளாதாரம் ஸ்தம்பித்துவிட்டது. அதன் 26 மிலியன் மக்கள் தொகையில் குறைந்தது 80 சதவீதத்தினராவது, உணவு உதவியை எதிர்நோக்கும் நிலையில் இருக்கின்றனர்.

2) அரசுக்கு விசுவாசமான படையினருக்கும், ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் 6,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். சுமார் 2.5 மிலியன் பேருக்கும் மேற்பட்டவர்கள் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்த நிலையில் வசிக்கின்றனர்.

ஏப்ரல் 10ம் தேதி சானாவில் யேமன் படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட ஒரு கிளர்ச்சிக்குழு உறுப்பினரின் உடல் கொண்ட சவப்பெட்டியை ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தாங்கிவருகின்றனர்

பட மூலாதாரம், EPA

படக்குறிப்பு, ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் யேமனின் முன்னாள் அதிபருக்கு விசுவாசமானவர்களின் ஆதரவில் இயங்குகின்றனர் (இபீஏ படம்)

3) யேமனில் , அதன் முன்னாள் அதிபருக்கு விசுவாசமான ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், அதன் தற்போதைய அதிபருக்கு ஆதரவான படைகள், வளைகுடா நாடுகளின் அரபுப் படைகள், அல் கயீதா மற்றும் இஸ்லாமிய அரசு என்றழைக்கப்படும் குழு ஆகிய போட்டி ஜிஹாதிக் குழுக்கள் என பல்வேறு குழுக்கள் போரிட்டு வருகின்றனர். அரசு ஊழல் மிகுந்ததாக இருப்பதாகவும், உத்தேசிக்கப்பட்ட ஒரு சமஷ்டி அமைப்பைக் கொண்டுவருவதன் மூலம் தங்களது நிலப்பரப்பை ஓரங்கட்டிவிட முயல்வதாகவும், கிளர்ச்சியாளர்கள் அரசு மீது குற்றம் சாட்டிவருகின்றனர்.

4) கடந்த 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் தலைநகர் சானா உட்பட யேமனின் பல பகுதிகளைக் கைப்பற்றி, அரசை நாடுகடத்திவிட்டனர். ஹுத்தி கிளர்ச்சியாளர்கள் வட பகுதி ஷியா முஸ்லீம் இனத்தைச் சேர்ந்தவர்கள்.

இதனையடுத்து சௌதி அரேபியா தலைமையிலான 9 நாடுகள் அடங்கிய கூட்டணி 2015 மார்ச்சிலிருந்து யேமன் மீது வான் தாக்குதல்களைத் தொடங்கியது. சௌதி தலைமையிலான கூட்டணியின் வான் தாக்குதல்களின் உதவியுடன், அரசுக்கு விசுவாசமான படையினரும் தென்பகுதி ஆயுதக்குழுக்களும் ஐந்து தென் பகுதி மாகாணங்களை மீண்டும் கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டன.

5)யேமன் மோதலை சிலர் பிராந்திய போட்டி நாடுகளான சௌதி அரேபியாவுக்கும் இரானுக்கும் இடையேயான மதக்குழு நிழல் யுத்தம் என்று கருதுகிறார்கள். சௌதி அரேபியா ஒரு சுன்னி இனப் பெரும்பான்மை நாடு. சௌதியின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் ஷியா பிரிவினர் தங்களை அரசு ஒதுக்கிவருவதாகவும், பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

இரான் ஒரு ஷியா பெரும்பான்மை நாடு. இந்த இரு நாடுகளும் மாறிவரும் மத்தியக் கிழக்குப் பகுதியில் தங்கள் செல்வாக்கை நிலைநிறுத்தவும், அதிகரிக்கவும் போட்டியிடுகின்றன.