செல்வந்தர்களின் வரி ஏய்ப்பு : பனாமா ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன

பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனமான மொஸாக் ஃபொன்செக நிறுவனத்திலிருந்து கோடிக்கணக்கான ரகசிய ஆவணங்கள் கசிந்து வெளியானதையடுத்து, உலகின் அதிகாரமிக்கவர்களும் செல்வந்தவர்களும் எப்படி தங்கள் செல்வத்தைப் பதுக்க, வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.

மொஸாக் ஃபொன்செக நிறுவனத்திலிருந்து 11 மில்லியன் ஆவணங்கள் அம்பலமாகியிருக்கின்றன.
படக்குறிப்பு, மொஸாக் ஃபொன்செக நிறுவனத்திலிருந்து 11 மில்லியன் ஆவணங்கள் அம்பலமாகியிருக்கின்றன.

பல நாடுகளின் இந்நாள் மற்றும் முன்னாள் அரச தலைவர்கள் 72 பேர் தொடர்புடைய ஆவணங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

ஜெர்மன் நாளிதழ் ஒன்றுக்குக் கிடைத்த இந்த ஆவணங்கள் பிபிசியின் பார்வைக்கும் வந்தன. அதன்படி, பல நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வரி ஏய்ப்புச் செய்வதற்கான இடங்களில், நிறுவனங்களை மொஸாக் ஃபொன்செக ஏற்படுத்திக் கொடுத்ததாக தெரியவருகிறது.

ஒரு ரஷ்ய வங்கி, பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணத்தை முறைகேடு செய்ததில் ஈடுபட்டிருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாகவும், அதில் அதிபர் புடினுக்கு நெருக்கமானவர்கள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்றும் இந்த ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக், லிபியாவின் முன்னாள் தலைவர் முவம்மார் கடாஃபி, சிரிய அதிபர் பஷர் அல் அஸாத் ஆகியோரது குடும்பத்தினர் மற்றும் நெருக்கமானவர்களோடு தொடர்புடைய ரகசிய வெளிநாட்டு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியான ஆவணங்களில் இருக்கின்றன.

ஆனால்,மொசாக் ஃபொன்செக நிறுவனம் , தாங்கள் 40 ஆண்டுகளாக இயங்கிவருவதாகவும் ஒருபோதும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டதில்லை என்றும் கூறியிருக்கிறது.

ஜெர்மனியிலிருந்து வெளியாகும் Suddeutsche Zeitung செய்தித் தாளுக்கு முதலில் இந்த ஆவணங்கள் கிடைத்தன. அவை பிறகு இன்டர்நேஷனல் கன்ஸார்ட்டியம் ஆஃப் இன்வெஸ்டிகேட்டிவ் ஜெர்னலிஸ்ட் அமைப்புடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன. பிபிசியின் 'பனோரமா' நிகழ்ச்சி உட்பட 78 நாடுகளில் உள்ள 107 ஊடக நிறுனங்கள் தற்போது இந்த ஆவணங்களை ஆராய்ந்துவருகின்றன. எங்கிருந்து இந்த ஆவணங்கள் கிடைத்தன என்பது பிபிசிக்குத் தெரியாது.