தாஜூதீன் மரணம்: சந்தேகநபர்களை கைதுசெய்ய உத்தரவு

தாஜூதீன்
படக்குறிப்பு, தாஜூதீன்

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ரக்பி வீரர் வாசீம் தாஜூதீனின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரக்பி அணி மூலம் மகிந்த ராஜபக்ஷவின் மகன்களுடன் நெருக்கமாக இருந்தவர் என்று கருதப்படுகின்ற தாஜூதீன், 2012-ம் ஆண்டில், வாகன விபத்தொன்றிலேயே உயிரிழந்ததாகவே அப்போது பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

ஆனால், ஆட்சி மாற்றத்தின் பின்னர் நடந்த புதிய மரண விசாரணையைத் தொடர்ந்து, இன்று தீர்ப்பை அறிவித்த நீதவான் நிஷாந்த பீரிஸ், தாஜூதீன் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவதாகக் கூறினார்.

கால்கள், மார்பு மற்றும் கழுத்து பகுதிகளில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த நீதவான், வாகன விபத்தொன்றின் மூலம் இவ்வாறான காயங்கள் ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார்.