கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்த மனித உரிமை ஆர்வலர் மீது சீனாவில் வழக்கு

பு ஸீகியங்கின் ஆதரவாளர்கள் அவரது விடுதலை கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, பு ஸீகியங்கின் ஆதரவாளர்கள் அவரது விடுதலை கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்

சீனாவின் முன்னணி மனித உரிமை வழக்குரைஞர்களில் ஒருவர், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த கருத்து ஒன்றுக்காக அவர் மீது பெய்ஜிங்கில் வழக்கு ஆரம்பித்துள்ளது.

பு ஸீகியங் மீதான வழக்கு விசாரணையை அவதானிக்க விரும்பிய அவருடைய ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள், ராஜீய அதிகாரிகள் போன்றோர் பொலிஸ் அதிகாரிகளால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

வழக்கு விசாரணை முடிந்துவிட்டது என்றும், சில வார காலத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் பெய்ஜிங்கில் உள்ள எமது செய்தியாளர் கூறுகிறார்.

நீதிமன்றங்கள் அரசாங்கத்தின் இறுக்கமான கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில், இந்த வழக்குரைஞர் விடுதலை செய்யப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே தெரிவதாகவும், அவருக்கு எட்டு ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை கொடுக்கப்படலாம் என்றும் பெய்ஜிங் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பு ஸீகியங் மீதான வழக்கு ஒரு அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று சர்வதேச மனித உரிமை குழுக்கள் வர்ணித்துள்ளன.