தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளில் தடையற்ற வர்த்தகம்: உலக வர்த்தக அமைப்பு

ஒரு ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகளுக்கு இறக்குமதி வரியை நீக்குவதற்கான ஒப்பந்தத்தை உலக வர்த்தக அமைப்பு இறுதிப்படுத்தியுள்ளது.

18 ஆண்டுகளுக்குப் பிறகு தகவல்தொழில்நுட்பம் சார்ந்த ஒப்பந்தத்தில் உலக வர்த்தக அமைப்பு மாற்றம் செய்துள்ளது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, 18 ஆண்டுகளுக்குப் பிறகு தகவல்தொழில்நுட்பம் சார்ந்த ஒப்பந்தத்தில் உலக வர்த்தக அமைப்பு மாற்றம் செய்துள்ளது.

வரியில்லாமல் இறக்குமதி செய்வதற்கான தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகளின் ஒப்பந்தப் பட்டியலில் மேலும் 200 தயாரிப்புகளை உலக வர்த்தக அமைப்பு இணைத்துள்ளது.

வீடியோ கேம்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களைத் தயாரிப்பவர்களுக்கு இந்த ஒப்பந்தம் மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இரும்பு, எஃகு, ஜவுளி, ஆடைகள் ஆகியவற்றில் நடக்கும் ஒட்டுமொத்த வர்த்தகத்தின் மதிப்பு இது என உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதத்திற்குள் இந்த ஒப்பந்தம் முழுமையாக இறுதிப்படுத்தப்படும்.

இதற்கு முன்பாக, 1996ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐடி ஒப்பந்தம் என்ற ஒப்பந்தமே தகவல் தொழில்நுட்பத்தில் நடக்கும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தி வந்தது. ஆனால், அதற்குப் பிறகு உருவாக்கப்பட்ட, கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் குறித்து இந்த ஒப்பந்தத்தில் ஏதும் இல்லை என்பதால், அதை மிகக் காலாவதியான ஒப்பந்தமாக பலரும் கருதினர்.

உயர்தொழில்நுட்பம் கொண்ட கம்ப்யூட்டர் சிப்புகள், ஜிபிஎஸ் கருவிகள், மருத்துவ உபகரணங்கள், பிரிட்டர்களுக்கான கேட்ரிட்ஜுகள், வீடியோ கேம்கள் போன்றவை இந்தப் புதிய ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

ஜெனரல் எலெக்ட்ரிக், இன்டெல், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ரூமெண்ட், மைக்ரோசாஃப்ட், நின்தென்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் பயனடையும் என நம்பப்படுகிறது.

பழைய ஒப்பந்தத்தை மேம்படுத்தும் பணிகள் 2012ஆம் ஆண்டில் துவங்கின.