"உலகில் பெரும்பாலானோருக்கு ஒழுங்கான அறுவை சிகிச்சை மருத்துவம் கிடைப்பதில்லை"
உலகின் ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு பாதுகாப்பான அறுவை சிகிச்சைக்கோ அல்லது ஈடுகொடுக்கக்கூடிய விலையிலான அறுவை சிகிச்சைக்கோ வழியில்லாமல் இருக்கிறது என புதிய ஆய்வு ஒன்று காட்டியுள்ளது.

பட மூலாதாரம், AFP
நூறு நாடுகளில் ஓராண்டுகால நிலைமையை அவதானித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான நாடுகளில் ஏழைகள் மற்றும் நடுத்தரமான வருவய் உடையவர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு வழியில்லாத காரணத்தால், குடல்வால் வெடிப்பு, எலும்புமுறிவு, மகப்பேற்று கோளாறுகள் போன்ற எளிதில் குணப்படுத்தக்கூடிய பாதிப்புகளால் உயிரிழக்கின்றனர் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அறுவை சிகிச்சை மருத்துவ சேவை மோசமாக புறக்கணிக்கப்படுகிறது என்றும், அதில் கூடுதலான முதலீடுகள் தேவையென்றும் தி லான்செட் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வறிக்கையில், நிபுணர்கள் கோரியுள்ளனர்.
கூடுதலானோருக்கு அறுவை சிகிச்சையிலும், மயக்க மருந்து மருத்துவத்திலும், பெண்கள் நல மருத்துவத்திலும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் அதுவே பெரிய சவால் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.








