"பத்திரிகைக்கு அரசு குடும்பத் தொலைபேசி டைரக்டரியைத் தந்தார் டயானா"

இளவரசி டயானா, இளவரசர் சார்லஸ் மற்றும் பிரிட்டிஷ் அரசி எலிசபத்துடன் ( பழைய படம்)

பட மூலாதாரம், BBC World Service

படக்குறிப்பு, இளவரசி டயானா, இளவரசர் சார்லஸ் மற்றும் பிரிட்டிஷ் அரசி எலிசபத்துடன் ( பழைய படம்)

தனது கணவர், இளவரசர் சார்லஸுடன் மோத, அரச குடும்பத் தொலைபேசி டைரக்டரியை பிரிட்டிஷ் பத்திரிகைக்கு, இளவரசி டயானா தந்தார் என்று பிரிட்டனின் மூடப்பட்ட "நியூஸ் ஒப் தெ வொர்ல்ட்" பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர், கிளைவ் குட்மேன், கூறியிருக்கிறார்.

பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை அப்பத்திரிக்கை ஒட்டுகேட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையின்போது, நீதிமன்றத்தில் சாட்சியமளித்த கிளைவ் குட்மேன் , தனது கணவருடனான மோதலில் , தனக்குப் பத்திரிக்கை உலகில் கூட்டாளிகளைத் தேடும் முயற்சியிலேயே இளவரசி டயானா இந்த வேலையைச் செய்தார் என்று கூறினார்.

குட்மேன் இந்த அரச குடும்பத் தொலைபேசி டைரக்டரியை போலிசாருக்குப் பணம் கொடுத்து சட்டவிரோதமாகப் பெற்றார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. அதை அவர் மறுக்கும்போதே இத்தகவலை வெளியிட்டார்.

தனது கணவர் இளவரசர் சார்லஸிடமிருந்து 1992ல், 11 ஆண்டு கால மணவாழ்வுக்குப் பின்னர் பிரிந்த இளவரசி டயானா, இந்தத் தொலைபேசி டைரக்டரியை தனது பத்திரிக்கை அலுவலகத்துக்கு அனுப்பினார் என்றும், அது தனது தபால் பெட்டியில் வந்து சேர்ந்தது என்றும் குட்மேன் கூறினார்.

இளவரசி டயானா அந்தக் காலகட்டத்தில் மிகவும் ஒரு சிரமமான மனோநிலையில் இருந்தார் என்று கூறிய க்ளைவ் குட்மேன், தன்னைச் சுற்றிலும், இளவரசர் சார்லஸுக்கு நெருக்கமான ஆட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் கருதியதாகக் கூறினார்.

தனது கணவரின் அலுவலகத்தில் இருந்த பணியாளார்களின் எண்ணிக்கையையும், தனது அலுவலகத்தில் மிகக்குறைவாக இருந்த பணியாளர்களின் எண்ணிக்கையையும் ஒப்புமை காட்டுவதே அவரது நோக்கமாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

இந்தத் தொலைபேசி டைரக்டரியை அனுப்பிய பின்னர், தன்னைத் தொலைபேசியில் அழைத்து, இந்தப் புத்தகம் கிடைத்துவிட்டதா என்பதை அவர் சரிபார்த்துக்கொண்டார் என்றும் குட்மேன் கூறினார்.

இளவரசர் சார்லஸும் இளவரசி டயானாவும் 1996ல் விவாகரத்து பெற்றனர்.

டயானா 1997ல் பாரிஸில் நடந்த கார் விபத்தொன்றில் மரணமடைந்தார்.