டயானா மரணத்தில் ராணுவத்துக்கு தொடர்பு இல்லை- லண்டன் போலிஸ் முடிவு

1997 ஆகஸ்டில், விபத்து நடந்த நாளன்று, தாங்கள் தங்கியிருந்த பாரிஸ் ரிட்ஸ் ஹோட்டலிலிருந்து இளவரசி டயானாவும் நண்பர் டோடியும், வெளியே வரும் காட்சி (ஹோட்டல் சி.சி.டி.வி படம்)
படக்குறிப்பு, 1997 ஆகஸ்டில், விபத்து நடந்த நாளன்று, தாங்கள் தங்கியிருந்த பாரிஸ் ரிட்ஸ் ஹோட்டலிலிருந்து இளவரசி டயானாவும் நண்பர் டோடியும், வெளியே வரும் காட்சி (ஹோட்டல் சி.சி.டி.வி படம்)

பிரிட்டிஷ் இளவரசி டயானா 16 ஆண்டுகளுக்கு முன்னர் பாரிசில் கார் விபத்தொன்றில் இறந்த சம்பவத்தின் பின்னணியில் பிரிட்டிஷ் ராணுவ ரகசிய அதிரடிப் படையின் வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்று எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு நம்பத்தகுந்த ஆதாரம் இல்லை என்று லண்டன் மெட்ரோபாலிட்டன் போலிசார் முடிவுக்கு வந்துள்ளனர்.

இந்த பாரிஸ் விபத்தில் பிரிட்டிஷ் இளவரசி டயானாவும், அவரது நண்பர் டோடி அல் பேயதும் கொல்லப்பட்டனர்.

இந்த விபத்தில் பிரிட்டிஷ் ராணுவ வீரர் ஒருவர் சம்பந்தப்பட்டிருந்தார் என்று எழுந்த புதிய குற்றச்சாட்டுகளை விசாரித்த லண்டன் பெருநகரப் போலிசாருக்கு ராணுவ அதிரடிப்படையின் ஆவணங்களைப் பார்வையிட முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாகவும், அந்த ஆவணங்களைப் பார்வையிட்ட பின்னரே இந்த முடிவுக்குத் தாங்கள் வந்ததாகவும் போலிசார் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

2008ம் ஆண்டில் நடந்த ஒரு மரண விசாரணை, இந்த ஜோடிகளை ஏற்றிச் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் , ஹென்ரி பால், குடிபோதையில் மிகவேகமாக, கவனக் குறைவாக ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டு அவர்கள் கொல்லப்பட்டதாக முடிவுக்கு வந்தது.

கொல்லப்பட்டபோது இளவரசி டயானாவுக்கு வயது 36
படக்குறிப்பு, கொல்லப்பட்டபோது இளவரசி டயானாவுக்கு வயது 36

டயானா 1997 ஆகஸ்டில் நடந்த இந்த விபத்தில் கொல்லப்பட்டார். அப்போது அவர் இளவரசர் சார்லஸிடமிருந்து விவாகரத்து பெற்றிருந்தார். கொல்லப்பட்டபோது அவருக்கு வயது 36.

அவரோடு பயணம் செய்த அவரது நண்பர் டோடி அல் பேயது, லண்டன் நகரில் பெரிய சூப்பர் மார்க்கெட்டான , ஹேரட்ஸ் நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளரான, மொஹமது அல் பேயதின் மகன். அவருக்கு அப்போது வயது 42.

இந்த இருவரும் நெருக்கமாக இருந்ததாக அப்போதைய பத்திரிகைச் செய்திகள் கூறின.

இந்த விசாரணை முடிவு பற்றி மொகமது அல் பேயது "ஏமாற்றமடைந்திருப்பதாக" மொகமது அல் பேயதின் சார்பில் அவரது வழக்கறிஞர் கருத்து தெரிவித்திருத்திருக்கிறார்.