குண்டாக இருந்தால் விமானத்தில் கூடுதல் கட்டணம்

குட்டித் தீவு நாடான சமோ உடல் பருமனானவர்களுகாக பெரிய இருக்கைகளை தமது விமானங்களில் அறிமுகப்படுத்துகிறது.

சமோ ஏர் விமானம் ஒன்று
படக்குறிப்பு, சமோ ஏர் விமானம் ஒன்று

நியூசிலாந்துக்கு அருகில் இருக்கும் இந்தச் சிறிய தீவு நாட்டில் 130 கிலோ எடைக்கு மேல் உள்ளவர்கள் பயணிக்கும் போது அவர்களின் வசதிக்காக பெரிய இருக்கைகளை அறிமுகப்படுத்துகிறது.

இரண்டு அல்லது மூன்று பேர் அமரக்கூடிய ஒரு இருக்கை எப்படி இருக்குமோ அவ்வகையில் இந்த விமான இருக்கைகள் இருக்கும் என சமோ ஏர் விமான சேவை நிறுவனம் கூறியுள்ளது.

உடல் பருமன் காரணமாக பெரிய இருக்கைகளை பதிவு செய்துள்ளவர்கள் விமானத்தில் ஏறவும் அதிலிருந்து இறங்கவும் உதவி செய்வதற்காக தரையிலிருந்து ஒரு சாய்வுதளப் பாதை அமைக்கப்படும் எனவும் அந்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

இவர்களுக்கு சிறப்புச் சலுகை ஆனால் கூடுதல் கட்டணம்
படக்குறிப்பு, இவர்களுக்கு சிறப்புச் சலுகை ஆனால் கூடுதல் கட்டணம்

இந்த ஆண்டின் முற்பகுதியில் குறிப்பிட்ட கட்டணங்களுக்கு பதிலாக உடல் எடைக்கு ஏற்ப கட்டணங்களை வசூலிக்கும் முறையை அந்த விமான சேவை நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

உலக அளவில் கூடுதல் எடை பருமனைக் கொண்டவர்கள் அதிகம் வாழும் நாடுகளில் சமோவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது.

உடல் எடையின் அடிப்படையில் கட்டணங்களை வசூலிப்பதை சமோ எர் நிறுவனத்தின் தலைவர் நியாப்படுத்தியுள்ளார்.

விமான இருக்கைகளின் அடிப்படையின் விமான சேவைகள் நடைபெறுவது இல்லை என்றும், அவை எடையின் அடிப்படையிலேயே செயல்படுகிறது எனவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தமது முடிவு சில குடும்பங்கள் மற்றும் சிறார்கள் குறைவான கட்டணங்களை செலுத்த வழி செய்யும் எனவும் சமோ ஏர் நிறுவனத்தின் தலைவர் கூறுகிறார்.

இதன் மூலம் நாட்டில் உடல் பருமனை குறைக்க ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் எனவும் தாங்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமோ ஏர் பெரும்பாலும் உள்ளூர் சேவைகளையும் அருகிலுள்ள அமெரிக்க சமோவுக்கு மட்டுமே விமானங்களை இயக்குகிறது.