அதானி மின்சார ஒப்பந்தத்தை வங்கதேசம் மறுபரிசீலனை செய்ய முயல்வது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முன்னி அக்தர்
- பதவி, பிபிசி வங்கமொழி சேவை
அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யுமாறு வங்கதேச அரசுக்கு அந்நாட்டு மின்சார மேம்பாட்டு வாரியம் கடிதம் எழுதியுள்ளது. இந்தக் கடிதத்தை அரசு பரிசீலித்துவருவதாக நம்பப்படுகிறது.
அதானி குழும பிரதிநிதிகள் குழு இந்த மாத இறுதிக்குள் வங்கதேசம் வந்து இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்கும் என வங்கதேச மின்சாரத் துறையின் தலைமை இயக்குநர் முகமது ஹுசைன் கூறியுள்ளார்.
"அந்த நேரத்தில் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடக்கும். பேச்சுவார்த்தை நடத்த அதுவே சிறந்த வழியாக இருக்குமென நினைக்கிறேன்" என்று முகமது ஹுசைன் கூறினார்.
இதற்கிடையே, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ராவின் வங்கதேச பயணத்தின் போது, அதானி குழுமத்துடனான மின் கொள்முதல் ஒப்பந்தம் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்ட்டில் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியான செய்தியின்படி, இந்திய ஒழுங்குமுறை நிறுவனத்திற்கு அதானி பவர் அனுப்பிய கடிதத்தில் வங்கதேசத்துடன் மின்சார வணிகத்தில் ஈடுபடுவது தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதானி குழும செய்தித் தொடர்பாளர்களை மேற்கோள் காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்தப் பிரச்னையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது வங்கதேசத்துக்கு சிக்கலை ஏற்படுத்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
நிலக்கரி விலை அதிகரிப்பு
இது குறித்து பேசிய எரிசக்தி நிபுணர் பத்ருல் இஸ்லாம், "அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது செலவு மிக்கதாக இருக்கும். ஏனெனில் அதானி குழுமம் நிலக்கரியின் விலையை டன்னுக்கு 400 டாலர்களாக நிர்ணயித்துள்ளது`` என்கிறார்.
அவரது கூற்றுப்படி, இந்த விலைக்கு வாங்கினால் மின்சார விலையை வங்கதேசம் அதிகரிக்க வேண்டியிருக்கும். இது அந்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
வங்கதேசம் தற்போதைய ஒப்பந்த விதிமுறைகளை ஏற்றுக்கொண்டால் அது பயனளிக்காது என்றும் பத்ருல் இஸ்லாம் கூறுகிறார்.
"வங்கதேசத்தில் உள்ள உள்நாட்டு சந்தையை விட அதானி குழுமத்திடம் இருந்து வாங்கப்படும் மின்சாரம் யூனிட்டுக்கு ஒன்று அல்லது ஒன்றரை ரூபாய் அதிகமாக இருக்கலாம்`` என்கிறார் எரிசக்தி நிபுணர் எம். தமீம்.
எரிபொருள் விநியோக நன்மை
அதானி குழுமத்துடனான மின் கொள்முதல் ஒப்பந்தம் ஒரு வகையில் நல்லது என்கிறார் எரிசக்தி நிபுணரும், வங்கதேச பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியருமான எஜாஸ் அகமது.

பட மூலாதாரம், Getty Images
அவரது கருத்துப்படி, மின் நிலையங்களை உருவாக்குவதில் வங்கதேசம் சிறப்பாக செயல்பட்டாலும், அவற்றுக்கு எரிபொருள் வழங்குவதில் அதன் செயல்பாடு தோல்வியடைந்துள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, அதானி குழும ஒப்பந்தத்தின் கீழ், மின் நிலையங்கள் கட்டப்படுவதோடு, அங்கு எரிபொருளும் வழங்கப்படும்.
ஆனால், இந்த உடன்பாடு எட்டப்பட்டபோது தற்போதைய சூழல் இல்லை என்பதுதான் பிரச்சனையின் மையமாக உள்ளது. குறிப்பாக, சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உச்சத்தைத் தொடவில்லை. எனவே, குறிப்பிட்ட சூழ்நிலையில் எரிபொருள் விலை எப்படி இருக்கும் என்பது தொடர்பாக எந்த திட்டமும் வகுக்கப்படவில்லை.
கோடா மின் நிலைய ஒப்பந்தத்தின்படி, நடைமுறையில் உள்ள சந்தை விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையை வங்கதேசம் செலுத்த வேண்டும். ரஷ்யா-யுக்ரேன் போருக்குப் பிறகு நிலக்கரியின் விலை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
வங்கதேசத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு ஒப்பந்த விதிமுறைகள் மறுபரிசீலனை செய்யப்படாமல் வங்கதேசத்தின் மீது திணிக்கப்பட்டால் அந்த நாடு பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்கிறார் மொஹம்மது ஹுசைன்.
தற்போதைய சிக்கல்கள்
பொதுவாக எரிபொருள் விலை Newcastle குறியீட்டின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது. சாதாரண சூழ்நிலையில் இதனால் எந்த பிரச்னையும் இருக்காது என எரிசக்தி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த குறியீட்டின் மூலம் எந்த எரிபொருளின் விலையையும் புரிந்துகொள்வது கடினம் என்பதால் தற்போதைய சூழலில் இது வங்கதேசத்திற்குப் பயனளிக்காது.
கோடா மின் நிலையத்தில் பயன்படுத்தப்படும் நிலக்கரி அதானியின் தனிப்பட்ட உற்பத்தி தளத்திலிருந்து அவரது கப்பல் மூலம் கொண்டுவரப்படும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி கூறுகிறது. அதானி குழுமத்திற்கு சொந்தமான துறைமுகத்திற்கு அவை கொண்டுவரப்பட்டு, பின்னர் அதானி கட்டிய ரயில் பாதை வழியாக கொண்டு செல்லப்படும்.
இந்த மையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம், அதானி நிறுவனம் உருவாக்கிய உயர் மின்னழுத்த பாதை மூலமாக கொண்டுசெல்லப்படும். வங்கதேச அரசுடன் செய்யப்பட்ட ஒப்பந்தப்படி, முழு செலவையும் வங்கதேசம் ஏற்க வேண்டும்.
இந்த மின்சாரத்தை வங்கதேசம் ஐந்து மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கும்.
நிலக்கரியின் விலை பழைய விலைக்கு குறைந்தாலும், அதானியின் ஒரு கிலோவாட் மின்சாரம் உள்ளூர் சந்தையை விட 33 சதவிகிதம் அதிகம்.
"தற்போதைய சூழலில், அதானி குழுமம் வங்கதேசத்தின் மீது இந்த விலையை விதித்தால், தற்போது மின்சாரத்தை வாங்குவதற்கு பதிலாக எரிபொருள் விலை குறையும் வரை வங்கதேசம் காத்திருப்பதே சரியாக இருக்கும்" என்கிறார் எஜாஸ் அகமது.
ஆனால், இந்தச் சமயத்தில் கொள்திறன் கட்டணத்தை வங்கதேசம் செலுத்த வேண்டியிருக்கும்.
"அழுத்தம் அதிகரித்தால் ஒப்பந்த விதிகளை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு அதானி குழுமம் தள்ளப்படும்" என்கிறார் ஹுசைன்.
நிபந்தனைகள் மறுபரிசீலனை செய்யப்பட்டால் இந்த ஒப்பந்தம் வங்கதேசத்திற்கு பயனளிக்கும் என்பது அவரது கருத்து.
அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய அனைத்து ஒப்பந்தத்திலும் அதற்கான வாய்ப்பு இருக்கும். எனவே, இந்த ஒப்பந்தத்தையும் மறுபரிசீலனை செய்யலாம் என்கிறார் ஹுசைன்.

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்தின் எதிர்ப்பு
அதானி பவர் நிறுவனத்துடன் 2017ஆம் ஆண்டு வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம் கையொப்பமிட்ட 25 ஆண்டுகால ஒப்பந்தத்தில், எரிபொருளுக்கான இறக்குமதி மற்றும் போக்குவரத்து செலவுகளை வங்கதேசம் ஏற்கும் என்று கூறப்பட்டது. இந்த விலை அப்போதைய சந்தை விலைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும்.
அதானி பவர் நிறுவனத்திற்கு வங்கதேச மின்சார வாரியம் அனுப்பியுள்ள கடிதத்தில், நிலக்கரியின் விலை டன் ஒன்றுக்கு 400 அமெரிக்க டாலர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சந்தை விலையுடன் ஒப்பிடுகையில் இது மிக அதிகம்.
சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை தற்போது டன் ஒன்றுக்கு 250 அமெரிக்க டாலர்களாக உள்ளது. எனவே நிலக்கரி விலையை அதானி குழுமம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
வங்கதேச மின்சார மேம்பாட்டு வாரியம் தனது 2022ஆண்டறிக்கையில், அதானி மின் நிலையத்தின் கொள்திறன் கட்டணம் வங்கதேசத்தில் உள்ள மற்ற மின் நிலையங்களை விட 16 சதவிகிதம் அதிகம் என்று கூறியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
மேலும், அந்நாட்டின் பேரா அனல்மின் நிலையத்தை விட சுமார் 45 சதவிகிதம் அதிகம் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. எனவே அதானி குழுமத்திடம் இருந்து மின்சாரம் வாங்குவது இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சாரத்தை விட மூன்று மடங்கு அதிக செலவு கொண்டதாக இருக்கும்.
இந்தியாவில் இருந்து மின்சாரம் இறக்குமதி செய்ய ஒரு யூனிட்டிற்கு சுமார் ஏழு ரூபாய் செலவாகும் என்றும், அதே நேரம் அதானி குழுமத்திடம் இருந்து வாங்கினால் ஒரு யூனிட்டிற்கு சுமார் 18 ரூபாய் செலவாகும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அதோடு, கொள்திறன் கட்டணமாக ஒவ்வோர் ஆண்டும் சுமார் நான்காயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டும்.
இந்த ஒப்பந்தப்படி, கோடாவில் அமைந்துள்ள அதானி குழும மின் உற்பத்தி மையத்தில் இருந்து சுமார் 1500 மெகாவாட் மின்சாரம் வங்கதேசத்திற்கு வழங்கப்பட உள்ளது. இந்த விநியோகம் கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி முதல் தொடங்குவதாக இருந்த நிலையில், திட்டமிட்டபடி அது நடைபெறவில்லை.
"அடுத்த மாத இறுதிக்குள் முதல் யூனிட் மின்சாரம் கிடைக்கும். அதற்கு தேவையான உள்கட்டமைப்பு இங்கு உள்ளது. எனவே இதில் எந்தப் பிரச்னையும் இருக்காது" என்றார் முகமது ஹுசைன்.
முன்னதாக, இதற்கான காலக்கெடு மார்ச் முதல் வாரத்திலும், பின்னர் மார்ச் நடுப்பகுதியிலும் நிர்ணயிக்கப்பட்டது. மார்ச் முதலாம் வாரம் முதல் 750 மெகாவாட் மின்சாரம் கிடைக்கத் தொடங்கும் என வங்கதேசத்தின் எரிபொருள் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் நஸ்ருல் ஹமீத் தெரிவித்திருந்தார்.
ஆனால் இந்தக் காலக்கெடு பலமுறை தள்ளிப் போடப்பட்டுள்ளதால், தற்போது மார்ச் இறுதிக்குள் மின் விநியோகம் தொடங்குமா என்பதில் கூட சந்தேகம் எழுந்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













