அதானி குழுமத்தின் மெகா திட்டங்களில் ஹிண்டன்பர்க் அறிக்கை ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன?

அதானி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜுபைர் அஹமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்

சில நாட்களுக்கு முன்பு, அதானி குழுமத்திற்கு எதிராக, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம், கணக்கு மோசடி மற்றும் பங்கு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது, அதானி குழும நிறுவனங்களின் பங்கு விலைகள் வேகமாக வீழ்ச்சியடையத் தொடங்கின. இது குறித்து நிபுணர்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

இப்போது இந்தக் குற்றச்சாட்டுகள் குழுமத்தின் முடிக்கப்படாத மற்றும் புதிய மெகா திட்டங்களுக்கு நிதி திரட்டுவதைப் பாதிக்குமா என்பது ஒரு முக்கியமான கேள்வி.

தன் பரந்த அளவிலான தயாரிப்புகள் மூலமாகவோ அல்லது துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் முதலீடு செய்வதன் மூலமாகவோ அதானி குழுமத்தின் தடம் இந்தியாவில் எல்லா இடங்களிலும் பதிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடிக்கு முன்பு, அதானி குழுமம் தன்னை 260 பில்லியன் டாலர்கள் மதிப்புவாய்ந்த குழு என்று கூறிக்கொண்டது. ஆனால் அதன் தற்போதைய திட்டங்கள் அல்லது அதன் வரவிருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், சில ஆண்டுகளில் இதன் மதிப்பு இரட்டிப்பாகும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, பங்குச் சந்தை மற்றும் நாணய சந்தை நிபுணர் வைஷ்ணவ் வசிஷ்ட் கூறுகையில், அதானி குழுமத்தின்மீது மட்டுமல்லாமல் மோதி அரசின் பல பெரிய திட்டங்களும் ஆபத்தில் உள்ளன என்றார்.

"சரியோ தவறோ, தற்போதைய அரசாங்கம் அதன் உள்கட்டமைப்பு, தற்சார்பு பாரதம் சார்ந்த திட்டங்கள், விவசாயம் போன்றவற்றில் அதானி போன்ற குழுக்களிடம் பல லட்சியத் திட்டங்களை ஒப்படைத்துள்ளது," என்று அவர் கூறுகிறார்.

மும்பையில் உள்ள கௌதம் அதானியின் வாழ்க்கை வரலாற்றை மூத்த பத்திரிகையாளர் ஆர்.என்.பாஸ்கர் எழுதியுள்ளார், அது சமீபத்தில் வெளியிடப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு வரை இந்தியாவின் பணக்கார தொழிலதிபராக இருந்த அதானி சாதாரணமானவராக இருந்த 2007 கால கட்டம் தொடங்கி அறிந்தவர் அவர்.

அதானி குழுமத்திற்கு மூலதனப் பற்றாக்குறையோ அல்லது கடன் பற்றாக்குறையோ ஏற்படாது என்று அவர் கூறுகிறார்.

ஆ.என்.பாஸ்கர்

பட மூலாதாரம், R.N. Bhaskar

படக்குறிப்பு, அதானியின் சுயசரிதையை எழுதிய ஆர். என். பாஸ்கர்

"அதானி குழுமம் பெருமளவு பாதிப்பைச் சந்திக்கும் என்று நான் நினைக்கவில்லை. பிரெஞ்சு எரிசக்தி நிறுவனமான 'டோட்டல்' சில நாட்களுக்கு முன்பு அதானி மற்றும் அவரது திட்டங்களுக்கு ஆதரவாகத் தனது நிறுவனம் நிற்பதாகக் கூறியது. வில்மர் அதானிக்கு ஆதரவளிப்பதாகக் கூறியுள்ளார்."

இருப்பினும், டோட்டல் குழுமம் சமீபத்தில், அதானி குழுமத்துடனான ஹைட்ரஜன் திட்டங்களை தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாகக் கூறியுள்ளது.

அதானியின் தற்போதைய திட்டங்கள்

இதுகுறித்து ஆழ்ந்து பார்ப்பதற்கு முன்பாக, அடுத்து வரவுள்ள அதானியின் சில முக்கியமான திட்டங்கள் மற்றும் வணிகங்களைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

தாராவி மறுசீரமைப்புத் திட்டம்: அதானி குழுமம் கடந்த ஆண்டு நவம்பரில் ரூ.20,000 கோடியில் தாராவி மறுசீரமைப்புத் திட்டத்துக்கு ஏலம் எடுத்தது.

6.5 லட்சம் குடிசைவாசிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் இத்திட்டத்தை ஏழு ஆண்டுகளில் முடிக்க வேண்டும். இந்தத் திட்டம் மும்பையின் மையத்தில் உள்ள லட்சக்கணக்கான சதுர அடி குடியிருப்பு மற்றும் வணிக இடத்தை விற்பனை செய்வதன் மூலம் அதானி குழுமத்திற்குப் பெரும் லாபம் ஈட்ட உதவும்.

பசுமை ஆற்றல்: கடந்த ஆண்டு செப்டம்பரில், கெளதம் அதானி அடுத்த பத்தாண்டுகளில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்வதாக அறிவித்தார். அதில் 70 சதவீதத்தை பசுமை எரிசக்திக்காகச் செலவிடுவதாகவும் உறுதியளித்தார்.

அதானி மற்றும் நெட் ஆண்டர்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதானி மற்றும் நெட் ஆண்டர்சன்

பசுமை ஆற்றலுக்கான குழுவின் தீவிர முயற்சியானது, பெட்ரோலிய எரிபொருட்கள் மீதான சார்பைப் பெருமளவு குறைக்கும் இந்திய அரசாங்கத்தின் லட்சியங்களுக்குத் துணை செய்யக்கூடியது.

அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ்: அதானியின் பாதுகாப்பு தயாரிப்பு நிறுவனமான 'அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ்' தனது ட்ரோன்கள் உட்பட சில பாதுகாப்புத் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது.

ஆளில்லா விமானங்களைத் தயாரிக்கச் சில இஸ்ரேலிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. "தற்காப்பு மற்றும் விண்வெளியில் உலகளாவிய சாதனை படைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இந்தியாவை உலகத்தரம் வாய்ந்த, உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு உற்பத்திக்கான இலக்காக மாற்றுவதற்கு உதவுகிறோம். இது தற்சார்பு பாரதம் திட்டத்தின் கீழ் வருகிறது," என்று இந்நிறுவனத்தின் இணையதளம் குறிப்பிடுகிறது.

2016-20க்கு இடையில் ராணுவ இறக்குமதிக்காக இந்தியா 332 பில்லியன் டாலர் செலவிட்டதாக ஆர்.என்.பாஸ்கர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

இந்தியா தனது பாதுகாப்பு இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. எனவே இதில் தனியார் துறையை ஈடுபடுத்துவது புத்திசாலித்தனமான செயல்.

ஏர்லைன்ஸ் மற்றும் எம்ஆர்ஓ: இந்தியாவின் பயணிகள் மற்றும் சரக்கு விமான நிறுவனங்கள் 700க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்டுள்ளன.

இது தவிர, அவ்வப்போது பராமரிப்பு மற்றும் சேவை தேவைப்படும் இந்திய விமானப்படை விமானங்களும் உள்ளன.

இந்தப் பணியை அதானி நிறுவனம் மேற்கொள்கிறது. அண்டை நாடுகளின் சில விமான நிறுவனங்களும் இந்த வசதியைப் பயன்படுத்துகின்றன.

அதானி கனெக்ஸ் டேட்டா சென்டர்: அதானி குழுமம் மற்றும் எட்ஜ் கனெக்ஸ் (உலகின் மிகப்பெரிய தனியார் டேட்டா சென்டர் ஆபரேட்டர்) ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அடுத்த பத்தாண்டுகளில் 1 ஜிகாவாட் டேட்டா சென்டர் திறன் கொண்ட டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கும் பணி திட்டமிடப்பட்டுள்ளது.

அதானி குழுமத்தின் இணையதளம் இந்தக் கூட்டு முயற்சியை, "ஒவ்வொரு நிறுவனத்தின் தரவுகளையும் அவற்றின் டிஜிட்டல் மாற்றத்தையும் விரைவுபடுத்துவது மற்றும் அவர்களுக்குத் தேவையான வெளிப்படைத்தன்மை, தரநிலைகள், பாதுகாப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை வழங்குவதே எங்கள் நோக்கம்," என்று மேற்கோள் காட்டியுள்ளது.

Steve H. Hanke

பட மூலாதாரம், CATO INSTITUTE

படக்குறிப்பு, ஸ்டீவ் ஹெச். ஹன்க்

கோடா அனல் மின் நிலையம்: பங்களாதேஷுக்கு மின்சாரம் வழங்குவதற்காகக் கட்டப்பட்டு வரும் 1,600 மெகாவாட் திறன் கொண்ட கோடா அனல் மின் நிலையத்தைச் சுமார் ஆறு மாதங்களில் தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

அதானி நிறுவனம் எதிர்கொள்ளும் நெருக்கடி, குழுமத்தின் புதிய திட்டங்களை பாதிக்குமா அல்லது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வார்களா, இல்லையா, கடன் கொடுக்கும் வங்கிகள் அதற்குக் கடன் தருமா இல்லையா என்பது குறித்து நிபுணர்கள் பிளவுபட்டுள்ளனர்.

'அதானி காயப்பட்டுள்ளார், வீழ்ந்து விடவில்லை'

ஸ்டீவ் எச். என்பவர், ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியராக உள்ளார். இவர் முன்னாள் அமெரிக்க அதிபர் ரீகனின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்.

அவர், "அதானி வீழ்ந்துவிடவில்லைதான், ஆனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். ஒருவரின் நற்பெயரைக் கெடுக்கும் ஒரு மோசடி வணிக பரிவர்த்தனையைவிட மோசமானது எதுவுமில்லை, ஒருவரின் நற்பெயரை விட முக்கியமானது எதுவுமில்லை," என்று கூறுகிறார்.

அதானி குழுமத்தின் பணப்புழக்கம் வலுவாக உள்ளதாக ஆர்.என்.பாஸ்கர் கூறுகிறார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை வருவதற்கு முன்னரே நான் அதானி குறித்த புத்தகத்தை எழுதினேன் என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறேன். ஆனால் அந்த அறிக்கை வந்த பிறகும் நான் அனாவசியமாகக் கவலைப்படவில்லை என்கிறார் அவர்.

அதற்கான காரணங்களையும் அவர் அடுக்குகிறார். "முதலாவதாக, அதானியின் பணப்புழக்கம் மிகவும் வலுவாக உள்ளது. அதன் இந்தியத் திட்டங்களில் பாதி ஒழுங்குபடுத்தப்பட்ட வணிகங்கள், ஏகபோகமாகக் கருதப்படுகின்றன. எரிவாயு விநியோக நெட்வொர்க்குகள் ஏகபோகங்களாகக் கருதப்படுகின்றன, மின் உற்பத்திப் பொருட்கள் ஏகபோகங்களாகக் கருதப்படுகின்றன, மின் பரிமாற்ற நெட்வொர்க் ஏகபோகமாகக் கருதப்படுகிறது மற்றும் அரசாங்கம் சீரான விகிதத்தில் அவற்றை வாங்கவும் செய்கிறது. எனவே, அதானி குழுமம் தொடர்ந்து வருவாய் ஈட்டுகிறது. செயல்திறன் மேம்படுவதால், குழுவின் லாபமும் மேம்படும்."

முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்க அதானி குழுமம் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இதன் காரணமாக வீழ்ச்சிக்குப் பிறகு அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் விலையில் பெரும் ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இக்குழுமம், ரூ.9,200 கோடி (சுமார் $1.11 பில்லியன்) கடனை திங்களன்று முன்கூட்டியே செலுத்தியது. அதானி குழுமம், தனது அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய மூன்று நிறுவனங்களில் ஈக்விட்டி பங்குகளை வெளியிடும் என்று அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

அதானி போர்ட்ஸ் தனது கடனில் சிலவற்றை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதாக அறிவித்துள்ளது. குழுமத்தின் மொத்தக் கடன்களில் 30% பொதுத்துறை வங்கிகளின் பங்களிப்பு, ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் இதில் மாற்றம் ஏதுமில்லை.

ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் நம்பர் ஒன் கம்பெனி

கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி குழுமத்தின் கடன் 1 லட்சம் கோடி ரூபாயில் இருந்து சுமார் 2 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது உண்மைதான். ஆனால் பல துறைகளிலும் வணிகங்களிலும் இக்குழுமம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.

உதாரணத்திற்கு:

  • நாட்டின் சமையல் எண்ணெய் வணிகத்தில் அதானி வில்மர் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது.
  • இமாச்சலத்திற்குப் பிறகு, காஷ்மீரின் ஆப்பிள் வர்த்தகத்தில் பங்குகொள்ள முயலும், ஆப்பிள்களின் மிகப்பெரிய விநியோகச் சங்கிலி குழுவாக உள்ளது.
  • இது ஏற்கெனவே தனியார் துறையில் மிகப் பெரிய தானிய சேமிப்பு நிறுவனமாக உள்ளது.

ஆர்.என்.பாஸ்கர் கூறும்போது, "கொல்கத்தா மற்றும் வேறு சில உள்ளூர் சந்தைகளில், அதானி தானியக் கிடங்குகள், மிகவும் பிரீமியம். அவர்கள் மிகவும் நவீனமான முறையில் சேமித்து வைப்பதே இதற்குக் காரணம்," என்று தெரிவித்தார்.

  • அதானி கேஸ் நெட்வொர்க், எரிவாயு விநியோகத்தில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனம்.
  • இக்குழுமம் மின் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் நாட்டின் மிகப்பெரிய தனியார் நிறுவனமாகத் திகழ்கிறது.
  • விமான நிலையக் கட்டுமானம் மற்றும் நிர்வாகத்தில் நாட்டின் மூன்று பெரிய நிறுவனங்களில் இது மிகப்பெரியது.
  • இது நாட்டின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமாக உள்ளது.

குழுமத்தின் தற்போதைய நிறுவனங்கள் மற்றும் புதிய மெகா திட்டங்களுக்கு நிறைய நிதி தேவைப்படுகிறது. தனது திட்டங்களை முடிக்க அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர்கள் தேவை என்று அதானியே கூறுகிறார்.

இதுவரை அவர்களுக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் மற்றும் இந்திய அரசு வங்கிகள் மூலம் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் சமீபத்திய நெருக்கடிக்குப் பிறகு, இக்குழுமத்திற்கு, முன்பு போல கடன் கிடைக்குமா என்ற அச்சம் உள்ளது.

ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் ஸ்டீவ் எச். ஹான்கே கூறுகையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலும் அதன் நிறுவனங்களிலும் முதலீடு செய்வதற்கு முன் யோசிப்பார்கள் என்று கருத்து தெரிவித்தார்.

அவர், "அதானியின் நெருக்கடி இந்தியாவில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நிச்சயமாக ஓர் எச்சரிக்கைதான். சட்டத்தின் அமலாக்கம் மற்றும் சொத்து உரிமைகளைப் பாதுகாப்பது மிகவும் பலவீனமாக உள்ளது," என்கிறார்.

அதானிக்கு ஆதரவு

அதானி

பட மூலாதாரம், Getty Images

ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைக்குப் பிறகு, சற்றே சங்கடத்தில் உள்ள அதானி குழுமம் சில பின்னடைவுகளைச் சந்தித்திருந்தாலும் பெரும் ஆதரவையும் சில தரப்பிடமிருந்து பெற்றுள்ளது.

ஸ்டாண்டர்ட்ஸ் அண்ட் புவர் குளோபல் ரேட்டிங்ஸ் வெள்ளிக்கிழமை அதானி மின்சாரம் மற்றும் அதானி போர்ட்ஸ் மீதான அதன் மதிப்பீட்டுக் கண்ணோட்டத்தை நிலையானதிலிருந்து எதிர்மறையாகக் குறைத்தது.

மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ், "பாதகமான முன்னேற்றங்கள்" அதானி குழுமத்தின் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் நிதி திரட்டும் திறனைக் குறைக்கலாம் என்று எச்சரித்தாலும், குழு நிறுவனங்களில் அதன் மதிப்பீடுகளை அது பாதிக்காது என்று கூறியது.

ஃபிச் நிறுவனம், தன் அதானி குறித்த மதிப்பீட்டில் "உடனடி தாக்கம்" இல்லை என்று கூறியுள்ளது.

வரும் செவ்வாய்கிழமை முதல் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை அதன் நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்குவதாக எஸ்&பி டவ் ஜோன்ஸ் இன்டெக்ஸ் தெரிவித்துள்ளது.

பசுமையான ஹைட்ரஜன் உற்பத்தியில் பில்லியன் கணக்கான டாலர்களை பெறுவதில் இக்குழுமம் உறுதியுடன் இருந்தாலும், இது நிலைத்தன்மை நிதி முதலீட்டைத் தடுக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாகும்.

இந்தியாவின் தேசிய பங்குச் சந்தை அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றின் பங்குகளை "கூடுதல் கண்காணிப்பின்" கீழ் வைத்துள்ளது.

விசாரணைக்குக் கோரிக்கை

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மோடி அரசிடம் கோரியுள்ளன.

கடந்த காலங்களில் இதைவிடப் பெரிய மோசடிக் குற்றச்சாட்டுகள் வெளியானபோது அது ஏன் கூட்டுக் குழு விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்று கேள்வி எழுப்புகிறார் ஆர்.என்.பாஸ்கர்.

அவர், "யுடிஐ விவகாரத்தில், பங்குச் சந்தை 64 சதவீதம் சரிந்தது, சதவீதத்தின் அடிப்படையில் இது இன்றைய வீழ்ச்சியைவிட அதிகம். 2000ஆம் ஆண்டில் டாட் காம் இயக்கத்தின்போது சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி இன்றைய வீழ்ச்சியைவிட அதிகமாக இருந்தது. அங்கு ஜேபிசி விசாரணை நடத்தப்படவில்லை," என்று சுட்டிக்காட்டுகிறார்.

"தரகர்கள் மற்றும் பங்குச் சந்தை வர்த்தகர்களிடையே முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே ஜேபிசி விசாரணை நடக்கும். உற்பத்தியாளர்களுக்கு எதிராக விசாரணை செய்யப்படுவதில்லை."

நெருக்கடி தொடங்கியதிலிருந்து பங்கு விலைகள் வீழ்ச்சியடைந்ததில், இக்குழுமம் 100 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது. ஆனால் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் குழுமத்தின் நிறுவனங்களின் பங்கு விலை உயர்ந்ததால், நெருக்கடிச் சூழல் விலகியதான நம்பிக்கையை இந்தக் குழுமம் பெற்றுள்ளது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்