அதானி - ஹிண்டன்பெர்க்: ஷார்ட் செல்லிங், ஷெல் நிறுவனம், சந்தை மூலதனம் - எளிய விளக்கம்

அதானி - ஹிண்டன்பெர்க் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மான்சி கபூர்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

அதானி - ஹிண்டன்பெர்க் சர்ச்சை தொடர்பான செய்திகளுடன் நிதி மற்றும் பங்குச்சந்தை தொடர்பான பிரத்யேக வார்த்தைகள் சிலவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுக்கு என்ன அர்த்தம் என்பதை இங்கே பார்ப்போம்:

ஷார்ட் செல்லிங் என்றால் என்ன?

ஒரு நிறுவனம் நல்ல வளர்ச்சி அடையும், எதிர்காலத்தில் அதன் பங்குகளின் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்குகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்போதைய விலைக்கு வாங்கும் நீங்கள், அதன் பங்கு விலை அதிகரிக்கும்போது விற்று லாபம் ஈட்டுவீர்கள்.

அதற்கு மாறாக, ஒரு நிறுவனத்தின் பங்குகள் மிகையாக மதிப்பிடப்படுகிறது என்றோ அல்லது அதன் பங்குகள் எதிர்காலத்தில் சரியும் என்றோ கணிக்கிறீர்கள். அந்தச் சூழலில், நீங்கள் அந்தப் பங்குகளை வாங்க மாட்டீர்கள். மாறாக, அந்தப் பங்குகளை குறித்த நேரத்தில் தரகர் அல்லது கடன் வழங்குநர் மூலமாக கடனாகப் பெறுவீர்கள். பின்னர் அந்தப் பங்குகளை தற்போதையை விலைக்கு விற்று லாபம் ஈட்டுவதைத்தான் 'ஷார்ட் செல்லிங்' என்கிறோம்.

எடுத்துக்காட்டாக, இந்த முறையில் தரகர் அல்லது கடன் வழங்குநர் மூலமாக 'ஏ' எனும் நிறுவனத்தின் 100 பங்குகளைக் கடனாக வாங்கினால், அதை பங்குச்சந்தையில் ஒரு பங்குக்கு 100 ரூபாய் என்ற தொகைக்கு விற்பார்கள். அதன்பின், பங்கின் விலை குறையும் வரை காத்திருந்து, ஒரு பங்குக்கு 60 ரூபாய் என்ற தொகைக்கு 100 பங்குகளை வாங்குவார்கள். பின்னர், அந்த 100 பங்குகளை கடன் வழங்கியவருக்கு திருப்பி அளித்து, ஒரு பங்குக்கு 40 ரூபா வீதம் 4,000 ரூபாய் லாபம் ஈட்டுவர்.

ஷார்ட் செல்லிங் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது என்றாலும் அதிக ஆபத்து நிறைந்ததாகவும் சிக்கலான வணிக உத்தியாகவும் பார்க்கப்படுகிறது. சில அபாயங்களுக்கு இடையேதான் ஷார்ட் செல்லிங்கில் ஈடுபடுபவர் லாபம் ஈட்ட முடியும். ஷார்ட் செல்லிங் மூலம் அதிக லாபத்தையும் ஈட்ட முடியும் அல்லது அதிகமான இழப்பையும் சந்திக்க நேரிடும் (அதாவது பங்கின் விலை குறையாமல், அதிகரித்தால் நஷ்டம் ஏற்படும்). அதனால், இந்த முறை பொதுவாக நிபுணர்களால் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.

அதானி - ஹிண்டன்பெர்க் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

ஷார்ட் செல்லிங் முறையில் பங்குகள் ஏன் கடன் வாங்கப்படுகின்றன?

பங்குகளை வாங்கும்போது நீங்கள் அதற்கான நிலையான விலையைச் செலுத்துகிறீர்கள். அதேநேரம், நீங்கள் பங்குகளை கடன் வாங்கும்போது, ​​கடனாக வாங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கைக்கான பொறுப்பு, விலையில் உள்ள நெகிழ்வுத்தன்மையைப் பயன்படுத்திக் கொள்ள உங்களை அனுமதிக்கிறது.

ஐபிஓ - இனிஷியல் பப்ளிக் ஆஃபர் என்றால் என்ன?

தனியாருக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் பணம் திரட்ட விரும்பினால், அதன் பங்குகளை பொதுமக்களுக்கு விற்கலாம். நிறுவனத்தின் பங்குகளை முதல்முறையாக பொதுமக்களுக்கு விற்கும் இந்த மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட செயல்முறை இனிஷியல் பப்ளிக் ஆஃபர் (ஐபிஓ) அல்லது ஆரம்ப பொது சலுகை என்று அழைக்கப்படுகிறது. ஐபிஓவுக்கு பிறகு, நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு வர்த்தகத்திற்குக் கிடைக்கும்.

அதானி - ஹிண்டன்பெர்க் சர்ச்சை

பட மூலாதாரம், ADANI

எஃப்பிஓ - ஃபாலோ ஆன் பப்ளிக் ஆஃபர் என்பது என்ன?

பங்குச்சந்தையில் இருந்து பொதுமக்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் பணத்தைத் திரட்ட இனிஷியல் பப்ளிக் ஆஃபரை நிறுவனங்கள் முதலில் கொண்டு வருகின்றன. அதேபோல, நிறுவனங்கள் தங்கள் முன்னேற்றத்திற்குத் தேவையான கூடுதல் பணத்தைத் திரட்ட FPO-ஐ கொண்டு வருகின்றன. இதன்மூலம், கடனை திருப்பிச் செலுத்தவோ அல்லது விரிவாக்கத்திற்காகவோ கூடுதல் பணத்தைத் திரட்ட விரும்பினால், பொதுமக்களுக்கு புதிய பங்குகளை விற்க முடியும்.

ஐபிஓவை விட எஃப்பிஓ ஆபத்து குறைவானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், குறிப்பிட்ட நிறுவனத்தின் நிதி நிலைமை குறித்த தகவல்கள் ஏற்கெனவே பொதுத்தளத்தில் உள்ளன.

ஷெல் நிறுவனம் என்றால் என்ன?

ஷெல் நிறுவனம் என்பது எந்தவொரு வணிக செயலிலும் ஈடுபடாத. ஆனால் ஆவணங்களில் மட்டுமே இருக்கும் ஒரு நிறுவனம். இந்தியாவில் ஷெல் நிறுவனத்தை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல. ஏனெனில் இது பல்வேறு வணிக மற்றும் நிதி விளைவுகளை ஏற்படுத்துவதற்கான சட்டபூர்வ நிறுவனமாகச் செயல்படுகிறது.

எனினும், இந்த நிறுவனங்கள் பெரும்பாலும் வரி ஏய்ப்பு மற்றும் பங்குகளில் திருகு வேலை செய்தல் போன்ற சட்டவிரோத நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. கையகப்படுத்துதல் மற்றும் சந்தைக்குப் பட்டியலிடுதல் போன்ற நடவடிக்கைகளின்போது குறிப்பிட்ட நிறுவனத்தின் உரிமையாளரின் பெயரை வெளிப்படுத்தாமல் இருப்பது போன்ற சட்டபூர்வமான நோக்கங்களுக்காகவும் ஷெல் நிறுவனங்களைப் பயன்படுத்தலாம்.

பங்குச்சந்தையில் திருகு வேலை என்பது என்ன?

ஒரு பங்கின் விலை அதற்கான தேவை மற்றும் பங்கு விநியோகத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஒரு பங்கை விற்பதைவிட அதை வாங்குவதற்கு மக்கள் விரும்பினால், அதன் விலை அதிகரிக்கும். ஒரு நிறுவனத்தின் பங்குக்கான தேவை என்பது, அந்நிறுவனத்தின் செயல்பாட்டுடன் தொடர்புடையது. ஒரு நிறுவனம் நன்றாகச் செயலாற்றினால் அல்லது வருங்காலத்தில் நன்றாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்டால் அந்நிறுவனத்தின் பங்குகளுக்கான தேவை அதிகரிக்கும், இதன்மூலம் பங்குகளின் விலையும் உயரும்.

ஆனால், பங்கு விநியோகம் மற்றும் அதற்கான தேவையை செயற்கையாக யாராவது பாதிக்கும்போது, பங்கின் விலை வியக்கத்தக்க அளவில் உயரும் அல்லது குறையும். இதுவே பங்குச்சந்தையில் திருகு வேலை எனக் குறிப்பிடப்படுகிறது. ஒரு நிறுவனம் குறித்து தவறான தகவலைப் பரப்புவதன் மூலம் இத்தகைய திருகு வேலைகளைச் செய்ய முடிகிறது. இந்த நடைமுறை சட்ட விரோதமானது. இதைக் கண்டுபிடிப்பதோ நிரூபிப்பதோ மிகவும் கடினம். ஷெல் நிறுவனங்கள் மற்றும் நேர்மையற்ற தரகர்கள் மூலம் இத்தகைய திருகு வேலைகள் நடத்தப்படுகின்றன.

பங்குச்சந்தை

பட மூலாதாரம், Getty Images

நிறுவனத்தின் சந்தை மதிப்பு என்பது என்ன?

ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு அல்லது சந்தை மூலதனம் என்பது அந்நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளின் மொத்த மதிப்பு. ஒரு பங்கின் விலையுடன் அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளின் எண்ணிக்கையைப் பெருக்கி இந்த மதிப்பு கணக்கிடப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 10 கோடி பங்குகளை உடைய ஒரு நிறுவனம் ஒரு பங்கை 100 ரூபாய்க்கு விற்றால், அதன் சந்தை மதிப்பு 1,000 கோடி ரூபாயாகும்.

முதலீட்டாளர்கள் ஒரு நிறுவனத்தின் அபாயத்தை மதிப்பிடவும், அந்த நிறுவனத்தில் தங்கள் முதலீட்டுக்கான வருமானத்தை மதிப்பீடு செய்யவும் சந்தை மதிப்பைப் பயன்படுத்துகின்றனர். பொதுவாக ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு பங்குகளின் விலையைப் பொறுத்து மாறுகிறது, ஆனால் நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடும்போதும் அதன் சந்தை மதிப்பு மாறலாம்.

ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு வீழும்போது என்ன நடக்கும்?

நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் சந்தை மதிப்பை நிதி திரட்டுவதற்காகப் பயன்படுத்துகின்றன. சந்தை மதிப்பு வீழ்ச்சியடையும்போது, ​​இழப்பை ஈடுகட்ட நிறுவனம் கூடுதல் நிதியை வழங்க வேண்டியிருக்கும்.

வரி புகலிடம் என்றால் என்ன?

வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீதான வரி பூஜ்ஜியமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ இருக்கும் நாடுகளே வரி புகலிடம் என்றழைக்கப்படுகின்றன. வரி புகலிடமும் சட்டப்பூர்வமானதே. தனிநிறுவனங்கள் அல்லது பெரும்பணக்காரர்கள் பெரும்பாலும் வரி தவிர்ப்பு, பணமோசடி போன்ற சட்டவிரோத நோக்கங்களுக்காக அவற்றைப் பயன்படுத்துகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: