அதானிக்கு செக் வைத்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனர் ஆண்டர்சன் நாயகனா? வில்லனா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி

- 2017ம் ஆண்டு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை ஆண்டர்சன் நிறுவினார்
- அமெரிக்க நிறுவனங்கள் பலவற்றை ஹிண்டன்பர்க் குறி வைத்திருக்கிறது
- நாஜி ஜெர்மனியின் தோல்வியடைந்த விண்வெளித் திட்டத்தின் பெயரை இந்நிறுவனம் கொண்டுள்ளது
- அதானி ஆய்வறிக்கை ஹிண்டன்பர்க் வெளியிட்ட 19வது அறிக்கையாகும்
- அதானி குழுமம் தங்களது 88 கேள்விகளில் 62 கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை என்று ஹிண்டன்பர்க் கூறுகிறது

ஹிண்டன்பர்க் போன்ற ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் அவை கூறுவது போல, தங்களது ஆய்வறிக்கைகள் மூலம் முதலீட்டாளர்கள் நஷ்டமடையாமல் காக்கின்றனவா? அல்லது பங்கு சந்தையில் மாற்றங்களை செய்து அதன் மூலம் தங்களது பாக்கெட்டை நிரப்பிக் கொள்கின்றனவா?
ஹிண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் சட்டப்படி செயல்படக் கூடிய அமெரிக்காவில் இந்த விவாதம் பல ஆண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது. அவரை விரும்புபவர்களும் உண்டு. அதேவேளையில், எதிரிகளுக்கு பஞ்சமில்லை.
அதானி குழுமம் குறித்த ஆய்வறிக்கைக்கு, "கார்பரேட் வரலாற்றில் மிகப்பெரிய மோசடி" என்று மிகவும் பரபரப்பான தலைப்பை ஹிண்டன்பர்க் கொடுத்தது. இதனை அதானி குழுமம் பொய் என்று கூறுகிறது.
ஹிண்டன்பர்க்கை விமர்சிப்போர், அதன் அறிக்கை 'வேகமாக முன்னேறும் இந்தியாவை கீழே இழுக்கும் முயற்சி' என்று குற்றம்சாட்டுகின்றனர்.
பங்குச்சந்தையில் பொதுவாக பங்குகளின் மதிப்பு உயரும் போது முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால், ஷார்ட் செல்லிங்கைப் பொருத்தவரை, பங்குகளின் மதிப்பு சரியும் போதுதான் லாபம் கிடைக்கும். ஒரு குறிப்பிட்ட பங்கின் மதிப்பு வீழும் என்ற கணிப்பின் அடிப்படையில் கட்டப்படும் பந்தயம் இது.
உண்மையில், ஹிண்டன்பர்க் போன்ற ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகள் வீழும் என்று பந்தயம் கட்டுகின்றன. பின்னர், அந்நிறுவனங்களை குறிவைத்து ஆய்வறிக்கைகளை வெளியிடுகின்றன.
- இந்தியாவில் கேள்விக்குறியாகும் வீட்டுப்பணியாளர்களின் பாதுகாப்பு - செய்ய வேண்டியது என்ன?
- தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பட்டியலினத்தோர் மீதான தாக்குதல்கள்: காரணம் என்ன?
- ரசாயனம் ஏற்றிவந்த ரயில் தடம்புரண்டு விபத்து: 'செர்னோபிள்' அனுபவம் என்று கூறும் உள்ளூர் மக்கள்
- அயலி கதை களவாடியதா? இலங்கை எழுத்தாளர் ஏன் அப்படி சொல்கிறார்? இயக்குநர் விளக்கம் என்ன?
எந்த நிறுவனத்தின் பங்குகள் உண்மையான மதிப்பை விட மிக அதிகமாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்களோ அந்த நிறுவனத்தையே இதற்காக அவர்கள் தேர்வு செய்கிறார்கள். முதலீட்டாளர்களை ஏமாற்றுவதாக கருதும் நிறுவனங்களையும் அவர்கள் குறிவைக்கிறார்கள்.

பட மூலாதாரம், FANATIC STUDIO
சம்பந்தப்பட்டவர்கள் என்ன செய்கிறார்கள்?
2017-ம் ஆண்டு ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தை ஆண்டர்சன் நிறுவினார்.
அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு ஷார்ட் செல்லிங் நிறுவனமான ஸ்கார்பியன் கேபிட்டலின் தலைமை முதலீட்டு அதிகாரி கெய்ர் கேலன் கூற்றுப்படி, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நம்பகத்தன்மை வாய்ந்தது, அதன் ஆய்வு முடிவுகள் நம்பத்தகுந்தவை. அமெரிக்காவில் பல தருணங்களில் மோசடி செய்த நிறுவனங்கள் மீது ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் இருந்து செயல்படும் எட்வின் டோர்சி, "தி பியர் கேவ்" என்ற தலைப்பில் ஷார்ட் செல்லிங் குறித்து எழுதியுள்ளார். ஹிண்டன்பர்க் போன்ற ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் ஆய்வறிக்கைகளை வெளியிட 2 முக்கிய காரணங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். முதலாவதாக, தவறுகளை வெளிக்கொணர்வதன் மூலம் பலனடைவது; இரண்டாவதாக நீதியையும், பொறுப்புணர்வையும் உறுதிப்படுத்துவது.
"பங்குதாரர்களின் இழப்பில் சிலர் பணக்காரர்களாவதையும், மோசடி செய்வதையும் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஷார்ட் செல்லிங் நிறுவனங்களின் ஆய்வறிக்கைகள் புலனாய்வு பத்திரிகையியல் வகையைச் சேர்ந்தது. அதில் இருககும் லாப நோக்கம் சற்று மாறுபட்டது. நெட் மற்றும் ஹிண்டன்பர்க் ஆகியோரை நான் உயர்வாக மதிக்கிறேன்," என்கிறார் எட்வின் டார்சி.
பங்குச்சந்தையை தீர்மானிப்பதில் ஷார்ட் செல்லர் ஆய்வறிக்கைகளும், சமூக ஊடகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், சாதாரண முதலீட்டாளர்கள் ஷார்ட் செல்லிங் நிறுவனங்களை விரும்புவதில்லை. ஏனெனில், அவை அவர்களின் முதலீடு மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
பல நிறுவனங்களும் கூட ஷார்ட் செல்லிங் நிறுவனங்களை விரும்புவதில்லை என்பதில் ஆச்சர்யம் இல்லை. 2021ம் ஆண்டு, ஷார்ட் செல்லிங் என்பதே ஒரு மோசடி என்று உலகின் முதல் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் விமர்சித்தார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
ஸ்கார்பியன் கேபிட்டல் ஷார்ட் செல்லிங் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி கெய்ர் கேலன், அதானி விவகாரத்தை இந்தியாவின் 'என்ரான் தருணம்' என்று வர்ணிக்கிறார்.
"அதானி, என்ரான் ஆகிய இரண்டுமே உள்கட்டமைப்பு நிறுவனங்கள் என்பதோடு வலுவான அரசியல் தொடர்புகளைக் கொண்டிருந்தன என்பது கவனம் ஈர்க்கும் விஷயம்," என்கிறார் அவர்.
பெரும் நிதி இழப்புகளை மறைத்து வந்த என்ரான் நிறுவனம் 2001-ம் ஆண்டில் திவாலானது, அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், என்ரான் தலைவர் கென் லே மற்றும் நிறுவன நிர்வாகிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.
அதானி குழுமத்தின் நிதிநிலை என்ரானைப் போல இல்லை என்றாலும் கென் லேவைப் போல அதானியும் அரசு நிர்வாகத்துடன் மிக நெருக்கமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறார்.
"ஸ்திரமான, நேர்மையான நிறுவனங்கள் ஷார்ட் செல்லிங் ஆய்வறிக்கைகள் குறித்து கவலைப்படாது. கூகுள், பேஸ்புக், மைக்ரோசாஃப்ட் குறித்து யாரும் இதுபோன்று எழுதினால் மக்கள் சிரிப்பார்கள். அந்நிறுவனங்களின் பங்குகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது" என்பது கெய்ர் கேலன் கூற்று.
ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் பற்றிக் குறிப்பிடுகையில், "அவரது செயல்பாடுகளுக்கு நற்சான்றுகள் உள்ளன. அவரது ஆராய்ச்சியில் நம்பகத்தன்மை உள்ளது. அவர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார்," என்கிறார் கெய்ர் கேலன்.
கொலம்பியா சட்டப் பள்ளி பேராசிரியர் ஜோஷூவா மிட்ஸ் பிரபல 'Short and Distord' இதழில் ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் குறித்து விமர்சித்துள்ளார்.
"ஆண்டர்சன் அவரைப் பற்றி மிகவும் வெளிப்படையாக பேசுகிறார் என்பதே வால் ஸ்ட்ரீட்டில் பலரும் அவரை மதிக்கக் காரணம். வெளிப்படையாக பேசுவோர் உண்மையை பேசுகிறார்கள் என்று அர்த்தம் கிடையாது. சிலர் அவரை விமர்சித்துளளனர், கேள்வி எழுப்பியுள்ளனர். அமெரிக்காவின் மிகப்பெரிய வதந்திகளுள் ஒன்றை அண்மையில் அம்பலப்படுத்தியுள்ளது"என்று ஜோஷூவா கூறுகிறார்.
"முதலீட்டாளர்களின் பணத்தை என்ன செய்கிறார்கள் என்பதில் நிறுவனங்கள் வெளிப்படையாக, நேர்மையாக இருக்க வேண்டும் என்று கூறுகிறோம். அதேபோல், ஷார்ட் செல்லிங் செய்வோரும் வெளிப்படையாகவும், நேரடியாக பேசுபவராகவும் இருக்க வேண்டும் என்று கூற வேண்டும்" என்று அமெரிக்க நீதித்துறைக்கு ஜோஷூவா மிட்ஸ் அறிவுறுத்துகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஹிண்டன்பர்க்கின் மிகவும் பிரபலமான ஆய்வறிக்கை
ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளியிடப்பட்ட நேரம், அவர்களுக்கு கிடைத்த பலன் ஆகியவை குறித்தும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து ஆண்டர்சனை தொடர்பு கொண்டோம். ஆனால் அவர் பதில் அளிக்கவில்லை.
ஹிண்டன்பர்க் இணையதளத்தின்படி, அதானி ஆய்வறிக்கை உள்பட மொத்தம் 19 அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், மிகவும் பிரபலமான அறிக்கை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம், அமெரிக்க எலக்ட்ரிக் வாகன நிறுவனமான நிகோலாவின் மோசடிகள் அம்பலமாயின.
2015-ம் ஆண்டு உருவான நிகோலா நிறுவனம் 30 பில்லியன் டாலர் சந்தை மூலதன மதிப்பைக் கொண்டிருந்தது. 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் நெடுஞ்சாலை ஒன்றில் பேட்டரியில் இயங்கும் 'நிகோலா ஒன் செமி-டிரக்' ஓடும் வீடியோவை வெளியிட்டதன் மூலம் கார்பன் உமிழ்வே இல்லாத எதிர்காலம் குறித்த கற்பனையை அந்நிறுவனம் விதைத்தது.
ஹிண்டன்பர்க் தனது புலனாய்வின் முடிவில், அந்த செமி-டிரக் உண்மையில் மலை உச்சிக்கு இழுத்துச் செல்லப்பட்டு சரிவான பாதையில் விடப்பட்டு படம் பிடிக்கப்பட்டது என்று கூறியது.
அந்த குற்றச்சாட்டுகளை நிகோலா நிறுவனம் மறுத்தது. ஆனால், பின்னர் அதன் தலைவர் டிரெவார் மில்டன் பதவி விலக நேரிட்டது. ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை வெளிவந்ததுமே நிகோலா நிறுவன பங்குகள் 24 சதவீதம் வீழ்ந்தன. நிகோலா நிறுவனத்திற்கு 120 மில்லியன் டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
2021-ம் ஆண்டு மில்டன் மீதான மோசடிப் புகார்கள் நிரூபிக்கப்பட்டன.
- பிரபாகரன் சர்ச்சை: இலங்கை 13வது திருத்தம் அமலாக்க முயற்சியில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
- அஜித் தோவலின் வெளிநாடு பயணம் பாகிஸ்தானில் அதிகம் விவாதிக்கப்படுவது ஏன்?
- "உயிரோடு பிரபாகரன்": இந்த வாதம் ராஜபக்ஷ குடும்பத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துமா?
- அதானி - ஹிண்டன்பெர்க்: ஷார்ட் செல்லிங், ஷெல் நிறுவனம், சந்தை மூலதனம் - எளிய விளக்கம்
அதானி குழுமத்தைப் பொருத்தவரை, அதுவும் ஹிண்டன்பர்க் முன்வைக்கும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கிறது. தங்களது 88 கேள்விகளில் 62-க்கு பதில் தரவில்லை என்ற ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டிற்கு அதானி குழுமத்தின் பதில் இதுவே.
ப்ளூம்பெர்க் அறிக்கைப்படி, ஹிண்டன்பர்க் உள்பட சுமார் 30 ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் முறைகேடான வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான தகவல்களை அமெரிக்க நீதித்துறை சேகரித்தது. என்றாலும், அmந்நிறுவனங்கள் அல்லது அவற்றின் கூட்டாளிகள் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை.

பட மூலாதாரம், ANI
அதானி குழுமத்தை ஹிண்டன்பர்க் தேர்ந்தெடுத்தது ஏன்?
ஹிண்டன்பர்க் அறிக்கை வந்தபோது ஆச்சரியமாக இருந்ததாக நியூயார்க் பல்கலைக் கழக பேராசிரியர் அஸ்வத் தாமோதரன் ஒரு வலைப்பதிவில் எழுதினார். ஏனெனில் ஹிண்டன்பர்க் கடந்த காலங்களில் சிறிய அல்லது அதிக தகவல்கள் கிடைக்காத நிறுவனங்களையே குறிவைத்திருந்தது. ஆனால் அதானி குழுமமோ, ஒரு பெரிய இந்திய நிறுவனம். எப்போதும் பேசப்படக் கூடிய இடத்தில் இருப்பது.
ஹிண்டன்பர்க்கின் பழைய அறிக்கைகள் அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்களைப் பற்றியவை. அப்படியானால், தனது 19வது அறிக்கைக்கு அதானி குழுமத்தை ஹிண்டன்பர்க் தேர்வு செய்தது ஏன்?
நியூயார்க்கில் தி பியர் கேவ் என்ற ஷார்ட் செல்லிங் இதழை நடத்தும் எட்வின் டோர்சி, "ஹிண்டன்பர்க் ஏன் அதானியை குறி வைத்தார் என்பது தெரியவில்லை, ஆனால். ஷார்ட் செல்லிங் செயல்பாட்டாளர்களுக்கு எங்கிருந்தோ, பெயர் குறிப்பிட விரும்பாத நபர்களிடம் இருந்து வரும் இமெயில்கள் மூலம் குறிப்புகள் கிடைக்கின்றன. அதனால் அவர்கள் அந்த நிறுவனத்தை உற்றுநோக்கத் தொடங்குகிறார்கள்." என்கிறார்.
"நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிக விரைவாக உயரும் போது, ஷார்ட் செல்லிங் செயல்பாட்டாளரின் கவனம் அதை நோக்கி செல்கிறது." என்று அவர் கூறுகிறார்.
2022ம் ஆண்டு ஏப்ரலில் ஒரு ஊடக அறிக்கைப்படி, கொரோனா பேரிடருக்கு நடுவேயும் அதற்கு முந்தைய 2 ஆண்டுகளில் அதானி குழு பங்குகள் 18-20 மடங்கு அதிகரித்திருந்தன.
"அதானி ஒரு தெளிவான இலக்காக இருந்தார். அதானி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மோசடி செய்து வருவதாக இந்தியாவில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அவை சரியா ஆராய்ந்து பார்த்தோம். அப்புறம் இதில் சொல்லும்படி எதுவும் இல்லை, எல்லாம் நன்றாகத் தெரியும் என்று நினைத்துக் கொண்டு கிளம்பினோம்." என்று கார்பியன் கேபிட்டலின் தலைமை முதலீட்டு அதிகாரி கெய்ர் கேலன் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவில் விசாரணை
அதானி குழுமம் தன் மீதான அனைத்து மோசடிப் புகார்களையும் எப்போதுமே மறுத்து வருகிறது.
கொலம்பியா சட்டப் பள்ளி பேராசிரியர் ஜோஷூவா மிட்ஸ் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் ஒழுங்குமுறை அமைப்புகளின் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால் அவர்கள் வளர்ச்சியடையாத நாடுகளின் சந்தைகளுக்கு திரும்பியுள்ளனர்.
"சந்தை ஒழுங்குமுறை அமைப்பு அமெரிக்காவை விட 5 அல்லது 10 ஆண்டுகள் பின்தங்கியிருந்தால் அல்லது அந்த அமைப்பு மிகவும் புத்திசாலி இல்லை என்றால் ஷார்ட் செல்லிங் நிறுவனங்களின் சுரண்டல்கள் மிகவும் சுவாரஸ்யமாகின்றன. கடந்த பத்தாண்டுகளில், ஷார்ட் செல்லிங் செயல்பாட்டாளர்கள் மேலும் மேலும் அதிகரித்து உலகளாவியதாக மாற வருகிறது என்பது உண்மைதான்" என்று அவர் கூறுகிறார்.
"தி பியர் கேவ்" இதழை வெளியிடும் எட்வின் டோர்சியின் கூற்றுப்படி, அமெரிக்காவில் ஷார்ட் செல்லிங்கில் முதல் பெரிய நிறுவனம் ஆண்ட்ரூ லெஃப்டால் நிறுவப்பட்ட சிட்ரான் ரிசர்ச் நிறுவனமே.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தரவுகளின்படி, 2001 மற்றும் 2014ம் ஆண்டுகளுக்கு இடையில் சிட்ரான் நிறுவனம் 111 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு சிட்ரான் அறிக்கையும் வெளியிடப்பட்ட பிறகு, அது குறிவைத்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு சராசரியாக 42 சதவீதம் குறைந்துள்ளது.
2013-ம் ஆண்டு டெஸ்லா நிறுவனத்தின் பங்கு விலை சற்று அதிகம் என்றும், எலக்ட்ரிக் கார் ஒரு ஃபேஷன் என்றும் ஆண்ட்ரூ கூறியிருந்தார். ஆனாலும், அதன் பிறகு டெஸ்லா பங்கு மதிப்பும், கார் விற்பனையும் அதிகரித்தது.
ஷார்ட் செல்லிங்கில் அடிபடும் மற்றொரு பெரிய பெயர் கார்சன் பிளாக் என்பதாகும். ஒழுங்குமுறை அமைப்புகளைக் காட்டிலும், கார்சன் பிளாக்கே மோசடிகளை அதிக அளவில் அம்பலமாக்கி முதலீட்டாளர்களின் பணத்தை மிச்சப்படுத்தியதாக அமெரிக்க சந்தைகளைக் கட்டுப்படுத்தும் SEC என்ற அமைப்பின் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஷார்ட் செல்லிங்கில் அசத்தும் புதிய நட்சத்திரமான ஆண்டர்சனும் இஸ்ரேலில் சிறிது காலத்தை செலவிட்டார். அமெரிக்க ஊடகங்களால் 'ராட்சதன்களை வீழ்த்துபவர்' என்று அவர் அழைக்கப்படுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
எட்வின் டோர்சி கூற்றுப்படி, ஷார்ட் செல்லிங் என்பது அமெரிக்காவில் 20-25 ஆண்டுகள் பழமையானது, அங்கு சுமார் 20 பெரிய நிறுவனங்கள் உள்ளன.
ஷார்ட் செல்லிங் பற்றிய அறிக்கைப்படி, 2022-ம் ஆண்டில் 113 புதிய மற்றும் பெரிய ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் இருந்தன. அவற்றுள், ஹிண்டன்பர்க் மிகவும் வெற்றிகரமான ஷார்ட் செல்லிங் நிறுவனமாக திகழ்ந்தது.
பெரிய நிறுவனங்களைத் தரைமட்டமாக்கும் ஷார்ட் செல்லிங் நிறுவனங்களை அமெரிக்கச் சட்டமும் கண்காணித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுவது வேடிக்கையான ஒன்று.
2018 ஆம் ஆண்டில், அமெரிக்க சந்தைகளை கட்டுப்படுத்தும் SEC, ஒரு ஹெட்ஜ் நிதி நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தது. இதனால், அந்நிறுவனம் நஷ்ட ஈடு செலுத்த வேண்டியிருந்தது.
கொலம்பியா சட்டப் பள்ளி பேராசிரியர் ஜோஷூவா மிட்ஸ் கூறுகையில், "சில தரப்பினர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், ஒட்டுமொத்த தொழில்துறை அல்லது ஒவ்வொரு தொழிலில் பங்கேற்பவர்களும் விசாரிக்கப்படுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை." என்றார்.
"இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள் இதைப் பற்றி கவலைப்பட்டால், அமெரிக்கா என்ன செய்கிறது என்பதை அவர்கள் பார்க்கலாம். அமெரிக்காவில் அரசாங்கத்தின் பல நடவடிக்கைகள் உள்ளன." என்று அவர் மேலும் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
ஹிண்டன்பர்க்கிற்கு எதிரான அதானியின் சவால் தாக்குப் பிடிக்குமா?
ஃபைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, ஹிண்டன்பர்க்கிற்கு எதிரான சட்டப் போராட்டத்திற்கு ஒரு பெரிய, அதிக செலவு பிடிக்கக் கூடிய அமெரிக்க சட்ட நிறுவனத்தை கௌதம் அதானி தேர்ந்தெடுத்துள்ளார்.
சட்டத்தின் வழியைப் பின்பற்றுவது பற்றி முன்னதாக ஒரு அறிக்கையில் அதானி குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில் அமெரிக்காவில் சட்டச் செயல்பாட்டின் போது நிறைய ஆவணங்களைக் கோரப் போவதாக ஹிண்டன்பர்க் கூறியிருந்தது.
நிபுணர்களின் கூற்றுப்படி, ஷார்ட் செல்லிங்கால் குறிவைக்கப்பட்ட நிறுவனங்கள், நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடுக்கின்றன, ஆனால் அங்கு வழக்கை நிரூபிப்பது சவாலானதாக இருக்கும்.
அமெரிக்காவில் சுதந்திரமாக பேசும் உரிமைக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்பே அதற்குக் காரணம்.
"அமெரிக்க நீதிமன்றங்கள் பேச்சு சுதந்திரம் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்கின்றன, பல ஷார்ட் செல்லிங் நிறுவனங்கள் தங்கள் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறி வழக்குகளை வென்றுள்ளனர். அவர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், பேச்சு சுதந்திரம் ஷார்ட் செல்லிங் நிறுவனங்களை கவசமாக காக்கிறது. அவர்களது அறிக்கை துல்லியமானது அல்ல என்று பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் நம்பினாலும் கூட இந்த முடிவு தவிர்க்க இயலாததாகி விடுகிறது" என்று கொலம்பியா சட்டப் பள்ளி பேராசிரியர் ஜோஷூவா மிட்ஸ் கூறுகிறார்.
" ஒரு ஷார்ட் செல்லிங் நிறுவனம் தனது செயல்பாடுகள் குறித்து வெளிப்படையாக இருக்காவிட்டால் அது நிச்சயமாக அந்நிறுவனத்திற்கு ஒரு சட்ட ரீதியான சுமையாக மாறக் கூடும்." என்றும் அவர் கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் ஷார்ட் செல்லிங் நிலை என்ன?
அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் குர்பச்சன் சிங்கின் கூற்றுப்படி, இந்தியாவில் ஷார்ட் செல்லிங் நடந்தாலும், பெரிய அளவில் இல்லை. செபியின் சிறு அறிக்கை, ஷார்ட் செல்லிங்கில் சாத்தியமுள்ள மோசடி வாய்ப்புகள் குறித்தும், இந்தியா அதை முறியடிப்பது குறித்தும் கூறுகிறது. 1998 மற்றும் 2011ம் ஆண்டுகளில் ஷார்ட் செல்லிங் தடை செய்யப்பட்டது.
ஹிண்டன்பர்க்கைப் போல இந்தியாவில் ஆய்வறிக்கைகளை தயாரிப்பது சவாலான காரியம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
செபியில் பதிவு செய்யப்பட்ட ஆய்வாளர் நிதின் மங்கல் கூறுகையில், "விமர்சனங்களை எதிர்கொள்வது எங்களுக்கு மிகவும் கடினம். விமர்சனத்தை நாங்கள் நேர்மறையாக எடுத்துக்கொள்வதில்லை. மக்கள் எனது ஆராய்ச்சியை அதிகம் விமர்சிக்கிறார்கள், ஆனால் நான் அதைப் பொருட்படுத்தவில்லை." என்கிறார்.
சட்ட ரீதியான காரணங்களால்தான் இந்தியாவில் அத்தகைய ஆராய்ச்சி நிறுவனங்கள் இல்லை என்று நிதின் மங்கல் கூறுகிறார்.
"இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் உங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம். உங்களுக்கு எதிராக அவர்கள் குற்ற வழக்குகளை பதிவு செய்யலாம். ஆனால், அமெரிக்காவில் செயல்முறை மிகவும் வித்தியாசமானது." என்று அவர் மேலும் கூறுகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













