இந்தியாவில் கேள்விக்குறியாகும் வீட்டுப்பணியாளர்களின் பாதுகாப்பு - செய்ய வேண்டியது என்ன?

தென்சாசி சம்பவம்
படக்குறிப்பு, படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி நியூஸ்

டெல்லியில் புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த 14 வயது சிறுமியை உடலில் காயங்களுடன் கடந்த வாரம் போலீஸாரும் சமூக ஆர்வலர்களும் மீட்டனர்.

இத்தகைய வீட்டுப் பணியாளர்கள் 'உழைப்பு சுரண்டலுக்கு' எளிதாக உள்ளாகின்றனர் என்றும் அவர்களுக்கு போதிய சட்ட பாதுகாப்பு இல்லாதது இதற்கு முக்கிய காரணம் என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

உடலில் ஏராளமான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அச்சிறுமி, வீட்டு எஜமானர்கள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தன்னை கொடுமை செய்து வந்ததாக போலீஸில் தெரிவித்துள்ளார்.

"மிகவும் பரிதாபத்திற்குரிய நிலையில் அந்த சிறுமி உள்ளார்" என்று ஊடகவியலாளரும் ஆவணப் பட இயக்குநருமான தீபிகா நாராயண் பரத்வாஜ் கூறுகிறார். சிறுமி குறித்து தனது நண்பர் மூலம் தகவல் அறிந்த தீபிகா, இது தொடர்பாக குழந்தை மீட்பு சேவைக்குத் தகவல் கொடுத்தார்.

இது குறித்து அவர் கூறும்போது, "எனது உறவினர்களை பார்ப்பதற்காக குர்கான் சென்றிருந்தேன். அப்போது குப்பைகளை வெளியே கொட்டச் செல்லும்போது இந்த சிறுமியை பார்த்ததாக எனது நண்பர் தெரிவித்தார். சிறுமியின் முகத்தில் ரத்தம் வழிந்ததோடு காயங்களும் இருந்ததாக அவர் என்னிடம் தெரிவித்தார்," என்று தீபிகா கூறினார்.

பாதிக்கப்பட்ட சிறுமியை தீபிகா மருத்துவமனையில் போய் சந்தித்தபோது, அவர் அனுபவித்த கொடுமைகள் குறித்து நேரடியாக கேட்டறிந்தார்.

சரியான நேரத்திற்குள் வேலையை செய்யவில்லை என்று கூறி தன்னை தினமும் அடிப்பார்கள். ஒரு நாளைக்கு பல தடவை கூட அடிப்பார்கள் என்றும் சிறுமி தெரிவித்ததாக தீபிகா குறிப்பிட்டார்.

வீட்டுப்பணியாளர்கள்

பட மூலாதாரம், DEEPIKA NARAYAN BHARADWAJ

படக்குறிப்பு, வீட்டு பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள குர்கானை சேர்ந் தம்பதி

சிறுமி வேலை செய்த வீட்டின் உரிமையாளர்களான மணிஷ் கத்தார் , அவரது மனைவி கமல்ஜித் கௌர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதோடு அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறுமியின் காயங்கள், சித்ரவதை காரணமாக ஏற்பட்டவை போன்று தோன்றுவதாக போலீஸார் கூறுகின்றனர்.

இது தொடர்பாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் போலீஸார் கூறுகையில், "சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி கருணையே இல்லாமல் சிறுமியை வீட்டின் உரிமையாளர்கள் அடித்து வந்துள்ளனர். சிறுமியின் உடலில் வெட்டு காயங்கள், தீக்காயங்கள் போன்றவை உள்ளன. எனவே, பிளேட் அல்லது சூடான இடுக்கி மூலம் அவர் தாக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம். முகம், கை, கால் என பல்வேறு பாகங்களில் அவருக்கு காயங்கள் உள்ளன. இது தொடர்பாக மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்," என்று தெரிவித்தார்.

பிபிசி பார்த்த புகைப்படங்களில் சிறுமியின் முகம் மற்றும் உடலில் வெட்டுக்கள் மற்றும் தீக்காயங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையில் சேர்க்க முடியாத அளவுக்கு அவை மிகவும் வேதனையை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன.

போலீஸாரிடம் சிறுமி அளித்த வாக்குமூலத்தில், துணி துவைக்கும்போதும் பிற வேலைகளைச் செய்யும்போது தனது ஆடைகளைக் கழற்றுமாறு தனது எஜமானர்கள் தன்னை வற்புறுத்தியதாகவும் சிறுமி குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே, போக்சோ சட்டத்தின் கீழும் அத்தம்பதி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. தற்போது போலீஸ் காவலில் உள்ள தம்பதி தங்கள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை. தம்பதியின் சட்ட ஆலோசகரை தொடர்புகொண்டு அவர்களின் கருத்தை அறிய பிபிசி முயன்றது. எனினும், கருத்துகளை பெற முடியவில்லை.

குற்றம்சாட்டப்பட்டுள்ள மணிஷ் கத்தார் பிரபல காப்பீடு நிறுவனம் ஒன்றில் துணை மேலாளராகவும் அவரது மனைவி மக்கள் தொடர்பு நிறுவனம் ஒன்றிலும் பணியாற்றி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிறுமியை கொடுமைப்படுத்தியதாக குற்றச்சாட்டு பரவத் தொடங்கியதுமே இருவரையும் அவர்களது நிறுவனங்கள் வேலையில் இருந்து நீக்கியுள்ளன.

"அவர்கள் சிறுமியை ஒரு அடிமை போல் நடத்தியிருக்கிறார்கள்,"என்று ஆட்கடத்தல் எதிர்ப்பு என்ஜிஓ-வான சக்தி வாஹினியின் நிர்வாக இயக்குனர் ரிஷி காந்த் கூறுகிறார். இந்த அமைப்புதான் தற்போது சிறுமிக்கு உதவிகரமாக இருந்து வருகிறது.

"சிறுமிக்கு போதுமான உணவு வழங்கப்படவில்லை, மேலும் குப்பைத் தொட்டியில் இருந்து சாப்பிட வேண்டிய கட்டாயமும் அவருக்கு ஏற்பட்டது. சிறுமியை குர்கானுக்கு அழைத்துவந்த உறவினர் யார் என்பதையும், அவருக்கு பணி வாய்ப்பு வழங்கிய நிறுவனம் எது என்பதையும் கண்டுபிடிக்கவும் நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். ஏனெனில், சிறுமியின் ஊதியம் என்ன ஆனது என்பதே தெரியவில்லை. அவர் வேலைக்கு சேர்ந்ததில் இருந்து ஊதியம் பெற்றதே இல்லை" என்றும் தெரிவித்தார்.

சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடூரங்கள் இந்தியாவை உலுக்கியுள்ள நிலையில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் மற்றும் குழந்தைகள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்), வசதியான மற்றும் நடுத்தர வர்க்க வீடுகளில் வேலையாட்களாகப் பணிபுரியும் நாட்டில் வீட்டுப் பணிப்பெண்களுக்கு நிகழ்த்தப்படும் துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டல் பற்றிய கூற்றுக்கள் அரிதாக இல்லை என்று இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருபவர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2013ஆம் ஆண்டு , தனது 15 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். சிறுமியின் தலையில் பலத்த காயம் மற்றும் உடலில் கடித்த காயங்கள் இருந்தன.

அதற்கு முந்தைய ஆண்டு, 13 வயது வீட்டுப் பணிப் பெண்ணை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றதாகக் கூறி டெல்லியைச் சேர்ந்த ஒரு தம்பதியை போலீசார் கைது செய்தனர். பால்கனியில் இருந்து உதவிக் கோரி சிறுமி கதறியதை கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.

இந்த மூன்று சம்பவங்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமை என்னவென்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைவருமே ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் உள்ள ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றாக ஜார்க்கண்ட் கருதப்படுகிறது.

"கடுமையான வறுமை காரணமாக, பருவம் எய்தியதுமே பெண் குழந்தைகள் பள்ளியில் இருந்து நிறுத்தப்படுகின்றனர். பின்னர், பதிவு செய்யப்படாத ஏமாற்று `வேலை ஏஜென்சிகளால்` டெல்லி மற்றும் பிற நகரங்களில் வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்" என்கிறார் சக்தி வாஹினியின் செய்தித் தொடர்பாளர் ரிஷி காந்த்.

இந்தியா

பட மூலாதாரம், DEEPIKA NARAYAN BHARADWAJ

"நகரத்தில், அவர்கள் பெரும்பாலும் சுரண்டல் சூழ்நிலைகள் இருக்கும் மக்களின் வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். பலர் தாக்கப்படுகிறார்கள், அவர்களுக்கான சுதந்திரம் என்பது சொற்ப அளவிலேயே உள்ளது," என்பதும் ரிஷியின் கருத்தாகும்.

அதிகாரபூர்வ தரவுகளின்படி, இந்தியாவில் 30 லட்சம் பெண்கள் உட்பட 40.75 லட்சம் வீட்டுப் பணியாளர்கள் உள்ளனர். ஆனால், உண்மையான எண்ணிக்கை 2 கோடி முதல் 8 கோடி வரை இருக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)மதிப்பிடுகிறது.

இந்தியாவில், வீட்டு வேலை என்பது கடுமையான வேலை பளுக்களை உள்ளடக்கியது. ஒருசில வீடுகளில் மட்டுமே, பாத்திரம் துலக்கும் இயந்திரம், வாக்கும் க்ளீனர், வாஷிங் மெஷின் போன்றவை உள்ளன. எனவே, இந்த வசதிகள் இல்லாத குடும்பங்கள் மற்றும் நடத்தர குடும்பங்கள் வீட்டை துடைப்பதற்கும், பாத்திரங்களை துலக்குவதற்கும், துணி துவைப்பதற்கும் சமையல் செய்வதற்கும் குழந்தைகளை பார்த்துகொள்ளவும் பணியாளர்களை அமர்த்துகின்றனர். 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளையும் வீட்டு வேலைக்கு அமர்த்தலாம் என்று சட்டம் கூறுகிறது. ஏனெனில் வீட்டு வேலைகள் அபாயகரமானதாக கருதப்படவில்லை.

போதிய அல்லது முற்றிலும் கல்வியற்றவர்களுக்கு வீட்டு வேலை மூலம் கிடைக்கும் ஊதியம் என்பது வாழ்க்கையை நடத்துவதற்கு அவசியமானதாக இருக்கிறது. எனினும், அனைத்து விதமான சுரண்டல்களுக்கும் அவர்கள் உள்ளாவதற்கும் இது வாய்ப்பாக இருக்கிறது என்று மீனாக்‌ஷி குப்தா கூறுகிறார். இவர், பணியாட்கள் மற்றும் முதலாளிகளை இணைக்கும் ஹெல்பர்4யூ என்ற ஆன்லைன் போர்ட்டலை நடத்தி வருகிறார்.

"குறைந்தபட்ச ஆதார ஊதியம் இல்லாமை, எந்தவித சட்டப்பூர்வ ஒப்பந்தங்களும் இல்லாமை ஆகியவை வீட்டுப் பணியாளர்களை சுரண்டலுக்கு ஆளாக்குகிறது. மேலும், பணியிடங்களில் பெண்களைப் பாதுகாக்கும் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு பொருந்தாது. மேலும், வீட்டை விட்டு வெகு தொலைவில் வந்து அவர்கள் வேலை செய்வதால் பெரும்பாலான பெண்களுக்கு ஆதரவும் கிடைப்பதில்லை. அவர்கள் அடிபட்டாலும் , உதவி செய்ய யாரும் கிடையாது" என்று மீனாக்‌ஷி கூறுகிறார்.

வீட்டு வேலை கொடுமைகள்

பட மூலாதாரம், Getty Images

வேலைக்கு அமர்த்தும் நபர்கள் மற்றும் வேலையை ஏற்பாடு செய்துதரும் ஏஜென்சி ஆகியவை மீது அபராதத்துடன் கூடிய கடும் நடவடிக்கை எடுக்க வழிவகை செய்யும் சட்டத்தை ஏற்படுத்தும் வரை இதுபோன்ற கொடுமைகள் தொடரத் தான் செய்யும் என்றும் அவர் தெரிவிக்கிறார்.

குழந்தைகள் குறிப்பாக அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்று கூறும் அவர், "வீடு ஆபத்தானது அல்ல, குழந்தைகள் வீட்டில் வேலை செய்யலாம் என்று அரசாங்கம் கூறினாலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஒரு வீடு உலகில் மிகவும் அபாயகரமான பணியிடமாக இருக்கும்" எனவும் குறிப்பிடுகிறார்.

ஏதாவது கொடூரமான சம்பவங்கள் தலைப்பு செய்திகளில் இடம்பெறாத வரையில், வீட்டுப்பணியாளர்களின் இடர்பாடுகள் குறித்து இந்தியாவில் மிகவும் அரிதாகவே விவாதிக்கப்படுகிறது.

வீட்டுப் பணியாளர்களை மிகவும் கண்ணியமான முறையில் நடத்துவது அவசியம் என்பது தொடர்பாக அனைத்து இந்தியர்களுக்கும் கூறவேண்டும் என்றும் மீனாக்‌ஷி அறிவுறுத்துகிறார்.

"அனைத்து விஷயங்களையும் நாம் மிகைப்படுத்துகிறோம். அப்படியிருக்கும்போது, வீட்டுப் பணியாளர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து மிகைப்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது," என்றும் அவர் கேள்வி எழுப்புகிறார்.

இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டுமானால், பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நிலுவையில் உள்ள ஆட்கடத்தல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்று ரிஷி கண்ட் கூறுகிறார்.

பாதிக்கப்படும் சூழலில் உள்ள பெண்களை அழைத்துவந்து உழைப்பு சுரண்டலுக்கான வாய்ப்புள்ள இடங்களில் பணியமர்த்தும் நபர்களை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.

சிறுமியை தாக்கியதாக கூறப்படும் தம்பதியினர் மீது தற்போது உள்ள சட்டங்களின் வாயிலாக நடவடிக்கை எடுப்பது என்பது எளிதானது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

"நமக்கு முன்னால் கடுமையான போர் காத்திருக்கிறது. இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் இவற்றில் பெரும்பாலானவை ஒன்றும் இல்லாமல் போகிறது. சில நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்கை முடித்துகொள்கின்றனர்."

2013ல், 15 வயது பணிப்பெண்ணை அடித்து துன்புறுத்தியதாக 50 வயது மதிக்கத்தக்க பெண் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் ஒரு மாதத்திற்கு பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது. அவரை குற்றவாளி என்று தீர்ப்பளிக்க நீதிமன்றத்துக்கு 4 ஆண்டுகள் தேவைப்பட்டது. இறுதியில் வெறும் 1000 ரூபாய் மட்டும் அவருக்கு அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: