You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
யுக்ரேன் போர்: "எவருக்கும் சாக விருப்பமில்லை" - ஆயுதமேந்திய ராணுவ தன்னார்வ சிறார்களுடன் பிபிசி சந்திப்பு
- எழுதியவர், ஜெரெமி போவன்
- பதவி, பிபிசி நியூஸ், கீயவ்
ஒரு வாரத்திற்கு முன்பு, யுக்ரேனுக்காகப் போராடுவதற்காக கீயவில் உள்ள ஒரு மையத்தில் திரண்ட தன்னார்வ இளைஞர்கள் குழுவை நான் சந்தித்தேன்.
அவர்களில் பெரும்பாலானோர் பதின்ம வயதினர். பலர் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். மூன்று நாட்கள் அடிப்படைப் பயிற்சி பெற்ற பிறகு தாங்கள் போர் முன்னரங்குக்கோ அதற்கு வெகு அருகேயோ அனுப்பி வைக்கப்படுவோம் என்று அவர்கள் அப்போது சொன்னார்கள்.
மக்சிம் லுட்சிக் என்ற 19 வயது உயிரியல் மாணவர், ஒரு வார பயிற்சிக்குப்பிறகு ஒரு சிப்பாய் ஆக மாற தான் பயப்படவில்லை என்று என்னிடம் கூறினார்.
பள்ளியில் சாரணர் இயக்கத்தில் ஐந்து வருடங்கள் சேவையாற்றிய அனுபவம் இவருக்கு இருக்கிறது. எனவே, முகாமில் இருக்க தரப்படும் அடிப்படை பயிற்சி மட்டுமின்றி இங்கு சில ஆயுத பயிற்சிகளையும் இவர் கற்கிறார்.
2014இல் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுடன் யுக்ரேன் நீண்ட மோதலைத் தொடங்கியபோது இவருக்கு 10 வயது.
இப்போது... தான் படிக்கும் அதே பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படிக்கும் தமது நண்பர் டிமிட்ரோ கிசிலென்கோவுடன் ஆயுதம் ஏந்தியிருக்கிறார் மக்சிம் லூட்சிக்.
இவர்களைப் போல ராணுவத்துக்காக ஆயுதமேந்த வந்த இளம் பட்டாளம், இனி தாங்கள் சிறார் கிடையாது என முடிவு செய்துள்ளனர். யாராவது இவர்களிடம் தைரியமாக இருப்பது போல முயற்சிக்கவோ பயத்தை வெளிக்காட்டாதே என்றோ கூறினால், பலமாக சிரிக்கிறார்கள்.
கால் மூட்டைப் பாதுகாக்கும் கவச கப்புகளை அணிந்து கொண்டு இந்த சிறார்கள் நிற்பதைப் பார்க்கும்போது, ஏதோ தங்களுடைய 12ஆவது வயதில் ஸ்கேட்டிங் செய்ய வந்தவர்களைப் போல காட்சியளித்தனர்.
சிலர் தோளில் உறைவிட போர்வை ஆடையுடன் கூடிய பையை சுமந்திருந்தனர். சிலர் கையில் தானியங்கி துப்பாக்கிகள் இருந்தன. ஒருவரிடம் யோகா மேட் இருந்தது. பயிற்சித் தளத்திற்கு அழைத்துச் செல்லப் போகும் பேருந்திற்காக இவர்கள் மையத்தின் வெளியே காத்திருந்தபோது, ஒரு சுற்றுலா அல்லது திருவிழாவுக்கு செல்லும் நண்பர்கள் குழு போல இருந்தது. இந்த குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கலாஷ்னிகோவ் தானியங்கி துப்பாக்கிகள் தரப்பட்டிருந்தன.
நான் டிமிட்ரோ மற்றும் மக்சிம்முடனும் பிற தன்னார்வலர்களுடனும் தொடர்பில் இருந்தேன். இந்த வார இறுதியில், நகரின் கிழக்கு விளிம்பில் இருந்த நிலைகளில் இருந்த அவர்களை நான் பார்க்கச் சென்றேன். அங்கு அவர்களுக்கு சீருடைகள், உடல் கவசம், முறையான ராணுவ ஷூக்கள் மற்றும் ஹெல்மெட்கள் வழங்கப்பட்டன.
ஒத்திகையின் அங்கமாக ஒரு சோதனைச் சாவடி வழியாக செல்லும்போது தடங்கல் ஏற்பட்டால் எப்படி தற்காத்துக் கொள்வது என்ற நிகழ்வை மணல் மூட்டைகள் மற்றும் எஃகு பொறிகள் நிறைந்த தடைகளை கடந்து செல்லும் பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்பட்டது. தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை அவர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர்.
டிமிட்ரோ என்னிடம் பேசும்போது, "நான் எனது துப்பாக்கியுடன் பழகிவிட்டேன். போரில் சுடுவது மற்றும் எப்படிச் செயல்படுவது என்பதை கற்றுக்கொண்டேன், மேலும் ரஷ்யர்களுடனான சண்டையில் மிகவும் முக்கியமான பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன்," என்றார்.
என்னிடம் பேசும் விஷயங்களை ஒரு கணம் நினைத்து அவரே தமது நிலையை எண்ணி கற்பனை செய்து சிரிக்கிறார்.
இதேவேளை, மக்சிம் மிகவும் அவசரமாக இயங்கக் கூடியவராகவும் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துள்ள அனுபவசாலி மாணவனைப் போலவும் தோன்றினார்.
"நான் முன்பு இருந்ததை விட அதிக நம்பிக்கையுடன் உணர்கிறேன், ஏனென்றால் போர் தந்திர முறைகள், தற்காப்புக் கலைகள், மருத்துவம் மற்றும் போர்க்களத்தில் எப்படி நடந்து கொள்வது போன்ற ஞானத்தை இங்கே பெறுகிறோம்," என்று பாதி நகைச்சுவை கலந்து தொனியில் மக்சிம் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினில் யுக்ரேனிய கொடி பறப்பதை பார்க்க இவர் விரும்புகிறார்.
இங்குள்ள அனைவரின் மனதிலும் உள்ள கேள்வி, கீயவில் போர் நடக்குமா நடக்காதா என்பதுதான். ஆனால், அது நிச்சயம் நடக்கக் கூடியது என்கிறார் டிமிட்ரோ.
"நாங்கள் ரஷ்ய படையினரை இங்கேயே தடுத்து நிறுத்த வேண்டும், ஏனென்றால் கீயவுக்குள் அவர்கள் வந்து விட்டால் இந்த போர் முடிந்துவிடும்," என்கிறார் அவர்.
இந்த இரு தன்னார்வலர்களும் ஷெல் தாக்குதலுக்கு உள்ளான ரஷ்ய எல்லைக்கு அருகிலுள்ள ஒரே நகரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது குடும்பங்கள் இன்னும் அங்கேயே இருக்கின்றன. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பற்றியும் பெற்றோர் என்ன நினைக்கிறார்கள் என்றும் நான் அந்த சிறார்களிடம் கேட்டேன்.
ஒரு தங்குமிடத்தில் இருந்தபடி உணவு சமைத்து சாப்பிடும்படி எனது தாயார் அறிவுறுத்தியதாக மக்சிம் கிண்டலாக பதிலளித்தார். ராணுவத்துக்காக ஆயுதம் ஏந்திய தகவல் பெற்றோருக்கு தெரிந்தால் அவர்கள் கவலைப்படலாம் என்பதால் இந்த விஷயத்தை அவர்களிடம் கூறாமல் தவிர்த்திருக்கிறார் மக்சிம்.
ஆனால், டிமிட்ரோவின் பெற்றோருக்கு அவர் என்ன செய்கிறார் என்பது தெரியும். மொலோடோவ் காக்டெய்ல் (பெட்ரோல் குண்டு) தயாரிக்க தன்னார்வ குழுவில் சேர்ந்த அவர் பிறகு பிரதேச ராணுவப்படையில் தன்னார்வலராக சேரும் முடிவு குறித்து தனது தந்தையிடம் கூறியிருக்கிறார்.
ஹீரோ ஆவதற்கு அதிக முயற்சி செய்ய வேண்டாம் என்று தனது தந்தை அறிவுறுத்தியதாக நம்மிடம் தெரிவித்தார் டிமிட்ரோ.
நான் இங்கு செய்வதை நினைத்து எனது பெற்றோர் பெருமிதம் கொள்கிறார்கள் என்றார் அவர்.
இனி என்ன நடக்கும் என்று பயப்படுகிறாயா என்று அவரிடம் கேட்டேன்.
"அதிகமாக பயம் இல்லை, ஆனால் பயப்படுவது மனித இயல்பு. நிச்சயமாக என் உள்ளத்தில் ஆழமாக கொஞ்சம் பயப்படுகிறேன். தேசத்துக்காகத்தான் இங்கு வந்துள்ளோம். ஆனாலும், இங்கு எவரும் சாக விரும்புவதில்லை. மரணம் எங்களுக்கு ஒரு விருப்பமும் அல்ல," என்று டிமிட்ரோ தெரிவித்தார்.
டிமிட்ரோவும் மக்சிமும் தங்களுடைய எதிர்கால கனவுகள், நண்பர்களுடன் வேடிக்கை பார்த்த நாட்கள், படிப்பை முடித்து விட்டு தொழில் செய்து குடும்பத்துடன் சேருவது பற்றி பேசினார்கள்.
ஐரோப்பாவின் பிற போர்களில் போராடுவதற்காகச் சென்ற முந்தைய தலைமுறை இளைஞர்களின் பெற்றோரைப் போலவே, இவர்களின் பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளின் திட்டங்கள், ஆற்றல் மற்றும் அவர்களின் வாழ்க்கை போரின் கொடூரத்தால் நசுக்கப்படக்கூடாது என்று நிச்சயமாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்க வேண்டும்.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களால் சில மைல்கள் தொலைவில் உள்ள போர் முன்னரங்கின் மறுமுனையில் இருக்கும் ரஷ்ய இளைஞர்களை அணுக முடியவில்லை.
அங்குள்ள பலரும் ஆயுதமேந்த கட்டாயப்படுத்தப்பட்டவர்கள் என்று நம்பப்படுகிறது, களத்தில் என்ன திட்டமிடப்பட்டது என்பது கூட அவர்களிடம் சரியாகக் கூறப்படவில்லை. இந்தப் போரில் பங்கெடுத்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள்.
போரில் பல இளம் ரஷ்யர்கள் டிமிட்ரோ, மக்சிம் போன்ற உயர் நம்பிக்கைகளைக் கொண்டுள்ளனர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
ஒரேயொரு வித்தியாசம். அவர்கள் சண்டையிடுவதற்கு குறைவான உந்துதலுடன் களமிறக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் அவர்களின் தரப்பை சரியாக தெரிவிக்க வாய்ப்பு இல்லாமல், உறுதிப்படுத்துவது கடினம்.
இரண்டு இளம் யுக்ரேனிய மாணவர்கள் சிப்பாய்கள் ஆக மாறி சோதனைச் சாவடியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு மைல் தூரத்தில் நிற்கும் தொழில்முறை ரஷ்ய ராணுவத்தினரை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில் இந்த யுக்ரேனிய ராணுவ தன்னார்வலர்கள் களத்தில் உள்ளனர்.
ரஷ்யர்கள் வந்தால், அனைத்து தன்னார்வலர்களையும் போலவே, மக்சிம் மற்றும் டிமிட்ரோ அகழிகளில் பதுங்கியபடி அவர்களை நோக்கிச் சுடுவார்கள், அங்கு குழியில் பதுக்கி வைத்துள்ள பெட்ரோல் குண்டு பாட்டில்களில் பற்றவைப்பதற்கான ஒரு துணியில் நெருப்பு மூட்டி ரஷ்ய படையினரை நோக்கி வீசுவார்கள்.
ஒருவேளை அவை வேலை செய்யவில்லை என்றால், நேட்டோ ராணுவ கூட்டணி ஆயிரக்கணக்கான அதிநவீன பீரங்கி எதிர்ப்பு ஆயுதங்களை குவித்திருக்கிறது. கீயவில் உள்ள அனைவரும் இந்த இடம் போரின் முக்கிய களமாக இருக்கக் கூடும் என்ற நினைப்பில் காத்திருக்கிறார்கள், வீரர்கள், பொதுமக்கள், சீருடை வீரர்கள், மக்சிம் மற்றும் டிமிட்ரோ என பலரும் ரஷ்ய படையினருடன் மோத ஆயத்தமாகியிருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி: மறுவாழ்வு பெற்ற 4 பேர்
- டிஜிட்டல் திரையில் வாசிப்பு - நம் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துகிறது?
- நான்கு மாநிலங்களில் ஆட்சியை தக்க வைக்கும் பாஜக - பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி
- அகிலேஷ் யாதவ்: தனக்குத் தானே பெயர் வைத்துக் கொண்ட தலைவர்
- யோகி ஆதித்யநாத்தின் அரசியலை விவரிக்கும் 10 புகைப்படங்கள்
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்