உபி தேர்தல் முடிவுகள்: யோகி ஆதித்யநாத்தின் அரசியலை விவரிக்கும் 10 புகைப்படங்கள்

யோகி ஆதித்யநாத் - இந்தப் பெயர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் மட்டுமல்லாத உத்தர பிரதேச அரசியலில் பரவலாக எதிரொலித்து வருகிறது. காரணம், இந்த மாநிலத்தில் இரண்டாவது முறையாக முதல்வராக தேர்வாகும் நபராகவும் செல்வாக்கு மிக்க தலைவராகவும் உருவாகியிருக்கிறார் யோகி ஆதித்யநாத்.

உண்மையில் இவரது அரசியல் வாழ்க்கை 1996இல் தான் வேரூன்றத் தொடங்கியது. அதுநாள் வரை பாரதிய ஜனதா கட்சியின் மகாந்த் அவைத்யநாத்தின் தேர்தல் பிரசாரக்குழு பணிகளை நிர்வகித்து வந்தார் யோகி ஆதித்யநாத். 1998இல் அவைத்யநாத் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றபோது தமது அரசியல் வாரிசாகவும் அப்போது நாடு எதிர்கொள்ளவிருந்த மக்களவைத் தேர்தலில் தமது பிரதிநிதியாகவும் யோகி தேர்தலில் போட்டியிட ஆதரவை வழங்கினார் அவைத்யநாத்.

26ஆவது வயதில் கோரக்பூரில் இருந்து 1998ஆம் ஆண்டில் மக்களவைக்குத் தேர்வான யோகி, அந்த காலகட்டத்தில் நாட்டின் இளம் எம்.பிக்களில் ஒருவராக விளங்கினார். அவரைப் பற்றி விவரிக்கும் 10 புகைப்படங்கள், அவர் கடந்து வந்த அரசியல் பாதையை உணர்த்துகின்றன.

1.மக்களவையில் அழுத யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத் மக்களவை உறுப்பினராக இருந்தபோது அவர் மீது 2007ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் நடந்த கலவர சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டது. அந்த வழக்கில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் தலைமையிலான அரசின் ஆட்சி நடந்தது. இந்த விவகாரத்தில் காவல்துறை தனக்கு அநீதி இழைக்கிறது என்று மக்களவையில் கூறினார். இது தொடர்பாக மக்களவையில் பேசும்போது, திடீரென்று யோகி ஆதித்யநாத் அழ ஆரம்பித்தார். அவரை மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் பாஜக எம்.பி.க்கள் சமாதானப்படுத்தினர்.

2. கலவர வழக்கில் கைது

யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு, 2007ஆம் ஆண்டு ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். அப்போது அவர் எம்.பி ஆக இருந்தார். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் மனோஜ் சிங் விவரிக்கும்போது, "யோகி கைதுக்குப் பிறகு கோரக்நாத் கோயிலின் மாட்டுத் தொழுவத்தில் ஒரு மாடு அழுவதாக ஒரு ஹிந்தி மொழி நாளிதழ் விரிவாகச் செய்தி வெளியிட்டது," என்றார்.

3. உணவு சாப்பிடும் பிரசாரம்

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. பல மாதங்களாக நடந்த பிரசாரத்தின் போது, ​​யோகி ஆதித்யநாத் அனைத்து தரப்பு மக்களுடன் அடிக்கடி உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் வெளியாயின. அப்படி நடந்த ஒரு பிரசாரத்தில், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தர பிரதேச பாஜக தலைவர்கள் உணவு சாப்பிட்டனர்.

4.ஈகை பெருநாள் கொண்டாட மறுத்த யோகி

பிகார் தொழில்துறை அமைச்சரும், பாஜகவின் மத்திய தேர்தல் குழு தலைவருமான ஷாநவாஸ் ஹுசேனுடன் ஆதித்யநாத் உள்ள இந்த படம் 2007இல் எடுக்கப்பட்டது. ஷாநவாஸ் ஹுசேன் சிறுபான்மை அணியின் தலைவராகவும் அப்போது இருந்தார். இருந்தபோதும் 2018ஆம் ஆண்டில் உத்தரபிரதேச சட்டப்பேரவையில் பேசிய யோகி ஆதித்யநாத்,''நான் ஒரு இந்து, அதனால் ஈகை பெருநாள் கொண்டாடுவதில்லை. அதற்காக நான் பெருமைப்படுகிறேன்'' என கூறினார்.

5.உத்தரபிரதேச வெற்றி டெல்லிக்கு வழிவகுக்குமா?

டெல்லியில் ஆட்சி அமைப்பதற்கு, உத்தர பிரதேசம் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தலைக் கருத்தில் கொண்டால், உத்தர பிரதேசத்தின் வெற்றி பாஜகவுக்கு முக்கியமானது. இந்த மாநிலத்தில் உள்ள ஒரு தொகுதியில் இருந்து பிரதமர் நரேந்திர மோதி மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவின் முன்னணி தலைவர்கள் மாநிலத்தில் பிரசாரம் செய்தார்கள். அப்போது பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹானும் காணப்பட்டனர்.

உத்தர பிரதேசத்தில் 2017இல் சமாஜ்வாதி கட்சியை வீழ்த்தி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்தது. உத்தர பிரதேசத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் பாஜக மற்றும் நாட்டின் அரசியலுக்கு புதிய பரிமாணத்தை கொடுத்தது.

7.யோகி ஆதித்யநாத் மற்றும் காவி அங்கி

உத்தர பிரதேசத்தில் மஹந்த் ஆதித்யநாத் யோகி முதலமைச்சராக பதவியேற்றதும், மத பலம் மட்டுமின்றி அரசியல் அதிகாரமும் அவர் கைக்கு வந்தது. அதுவரை முதல்வர் யோகியின் பெயர், ஆதித்யநாத் ஜி மகராஜ் என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால், அவரது பெயர் அரசு ஆவணங்களில் மஹந்த் என்றோ அல்லது மகாராஜ் என்றோ இடம் பெறவில்லை, முதல்வராக பதவியேற்ற பிறகும் காவி அங்கி அணிவதால் அவரது மத அடையாளம் மறையாமல் தொடர்கிறது. அவர் நாற்காலியின் பின்புறத்தில் ஒரு காவி துணியை எப்போதும் வைத்திருப்பார்.

8.பாபா ராம்தேவ் மற்றும் யோகி ஆதித்யநாத்

யோகி ஆதித்யநாத், யோகா குருவாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் அறியப்படும் பாபா ராம்தேவுடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தார். பாபா ராம்தேவின் யோகா பயிற்சி முகாம்களிலும் அவர் பங்கெடுத்தார்.

9.கோரக்பூரில் யோகி ஆதித்யநாத்

பாஜகவுடன் இணைந்து யோகி ஆதித்யநாத் இந்து யுவ வாஹினியை நிறுவினார். இந்து யுவ வாஹினி யோகி ஆதித்யநாத்தை பலப்படுத்தியது. ஒரு தலைவராக அவரது தோற்றம் கோரக்பூரில் உணரப்பட்டது.

10. பசுவதை தடை, மதமாற்றம் தொடர்பான சட்டம் கொண்டு வந்த யோகி ஆதித்யநாத்

உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்ற பிறகு பசு வதைக்கு எதிரான சட்டத்தை கடுமையாக்கினார். மத மாற்றம் தொடர்பாக புதிய சட்டத்தை அமல்படுத்தினார். கோரக்பூர் எம்.பி ஆக யோகி, ஐந்து தனி நபர் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். இதில் ஒரே மாதிரியான குடிமைச் சட்டம், இந்தியா என்ற பெயருக்கு பதிலாக ஹிந்துஸ்தான் என்று பெயர் மாற்றுதல், பசுவதைத் தடை, மதமாற்றம் தொடர்பான சட்டம் மற்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கோரக்பூர் பெஞ்ச் நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: