இமாச்சலப் பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமி: மறுவாழ்வு பெற்ற 4 பேர்

(இன்று (மார்ச் 11) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்)

இமாச்சலப் பிரதேசத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உறுப்புகள் நான்கு பேருக்கு பொருத்தப்பட்டது என, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மார்ச் 3 ஆம் தேதியன்று இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியைச் சேர்ந்த நய்னா தாக்கூர் என்ற 11 வயது சிறுமி சாலை விபத்தில் சிக்கினார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் மார்ச் 7 ஆம் தேதி அச்சிறுமி மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் குடும்பம், அவரது உறுப்புகளை தானம் செய்து நான்கு பேருக்கு மறுவாழ்வை அளித்துள்ளனர்.

அவரது இரண்டு சிறுநீரகங்களும் பொருத்தமான நபர்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன, அதே நேரத்தில் மாற்று அறுவை சிகிச்சையின் போது அவரது கருவிழிகள், இரண்டு பார்வையற்றவர்களுக்கு தானமாக அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக பிஜிஐஎம்இஆர், மருத்துவமனை தலைவர் டாக்டர் விபின் கவுஷல் கூறுகையில், "உறுப்பு தானம் தொடர்பாக அவரது குடும்பத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்களின் சம்மதத்தைத் தொடர்ந்து, அவரது சிறுநீரகங்கள் மீட்டெடுக்கப்பட்டு, நீண்ட காலமாக டெர்மினல் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் செய்து கொண்டிருந்த இரண்டு நோயாளிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டன. இதன் மூலம் அவர்களுக்கு மறுவாழ்க்கை கிடைத்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து மீட்டெடுக்கப்பட்ட கார்னியாக்கள், இரண்டு கண் பார்வையற்ற நோயாளிகளின் பார்வையை கொடுத்துள்ளன" என கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திலும் ஆட்சி அமைப்போம்: அண்ணாமலை

நான்கு மாநிலங்களில் வெற்றியடைந்து ஆட்சியைப் பிடித்ததுபோல தமிழகத்திலும் ஆட்சியை பிடிப்போம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக 'தினமணி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேசம், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்க உள்ளது. தேர்தல் வெற்றியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில் நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி வியாழக்கிழமை கொண்டாடினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "பாஜகவுக்கு மாற்று சக்தி எதுவும் இல்லை என்பது மீண்டும் ஐந்து மாநிலத் தேர்தலின் மூலம் தெரிய வந்துள்ளது. பிரதமர் மோதியுடன் தான் பயணிப்போம் என்று ஒருமித்த குரலில் மக்கள் தமது கருத்தைத் தெரிவித்துள்ளனர்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்து வரலாறு படைத்துள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த பிரதமர் மோதி எடுத்த நடவடிக்கைகளுக்கு இந்த வெற்றி பரிசாக அமைந்துள்ளது.

உத்தராகண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கப் போவதுபோல் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வந்தனர். ஆனால், மக்கள் தீர்ப்பு பாஜகவுக்கு ஆதரவாகவே வந்துள்ளது.

மணிப்பூரில் 2012 இல் பாஜகவுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை. 2017 இல் 21 இடங்களைப் பிடித்தோம். தற்போது தனிப்பெரும்பான்மையுடன் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ளோம்.

மணிப்பூர் மாநிலத்தைப் பொருத்தவரை 52 சதவீதம் சிறுபான்மை சமூகத்தினர் ஆவர். அங்கு பாஜக ஆட்சி வந்துள்ளது என்றால் அது சரித்திர சாதனை. கோவாவிலும் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். இது தமிழகத்திலும் நிகழும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. அது 2024-ம் ஆண்டிலா அல்லது 2026-ம் ஆண்டிலா என்பது தெரியாது. ஏனெனில், தேர்தல் ஆணையம் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராக இருப்பதாகக் கூறியுள்ளது. தமிழக பாஜகவும் தேர்தலுக்குத் தயாராக இருக்கிறது" என கூறியதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை காசாளர் தவறவிட்ட ரூ.50,000 தொகையை பத்திரமாக ஒப்படைத்த புதுச்சேரி ஆட்டோ ஓட்டுநர்!

மருத்துவமனை காசாளர் தவறவிட்ட ரூ.50,000 தொகையை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பத்திரமாக ஒப்படைத்த செய்தியை 'இந்து தமிழ் திசை' இணையதளம் வெளியிட்டுள்ளது.

புதுச்சேரி முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் காளியப்பன் தன்னுடைய மருமகளை மருத்துவப் பரிசோதனைக்காக புதுச்சேரி ஏனாம் வெங்கடாசலம்பிள்ளை வீதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் ஆட்டோவில் இருந்து இறக்கிவிட்டுள்ளார். பின்னர், ஆட்டோவை திருப்பியபோது எதிரில் இருசக்கர வாகனம் நிறுத்தி இருந்த பகுதியில் 500 ரூபாய் நோட்டு கட்டு சாலையில் கிடந்துள்ளது.

அதை எடுத்து பார்த்தபோது அது ரூ.50,000 கட்டு என்பது தெரிந்தது. அப்பணக்கட்டை எடுத்து அதை நேராக அந்த மருத்துவமனை அலுவலகம் சென்று இந்தப் பகுதியில் யாரேனும் பணம் தவற விட்டிருந்தால், இந்த போன் நம்பருக்கு தகவல் தெரிவிக்கவும், என்னிடம் அந்த பணம் உள்ளது என்று கூறி போன் நம்பரை கொடுத்துவிட்டு காளியப்பன் புறப்பட்டார்.

அதே மருத்துவமனையில் பணிபுரியும் காசாளர் ஞானவேல், மருத்துவமனை பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக எடுத்து சென்றபொழுது தவறவிட்டது தெரிந்தது. நீண்ட நேரமாகியும் காசாளர் மருத்துவமனைக்கு வராததால் அவரை மருத்துவமனையில் இருந்து தொடர்பு கொண்டுள்ளனர். அப்போது பணத்தை தவற விட்டுவிட்டேன்- மார்க்கெட் பகுதியில் தேடி கொண்டிருக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் பணத்தை கண்டெடுத்துள்ளதாக குறிப்பிட்டனர். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் காளியப்பனைத் தொடர்புகொண்டனர். அவர் நேற்று மாலை மருத்துவமனைக்கு வந்து காசாளர் ஞானவேலை சந்தி்ததார். அவரிடம் தொலைத்த தொகை விவரத்தையும், அதில் இருந்து நோட்டுகளையும் உறுதிப்படுத்திக்கொண்டு அத்தொகையை ஒப்படைத்தார். அதைத்தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து பரிசு தந்து கவுரவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: