You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உத்தர பிரதேசம்: அகிலேஷ் யாதவின் பள்ளிப்பருவம், கல்லூரி வாழ்க்கை, குடும்ப அரசியல் கதை
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி செய்தியாளர்
உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 2017 தேர்தலை விடவும் கூடுதல் இடங்களில் முன்னிலை பெற்றாலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சி அமைக்கத் தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
"புதிய காற்று வீசுகிறது, புதிய சமாஜ்வாதி வந்து விட்டது," என்று அவர் கூறுவது உண்மையாகவில்லை. ஆனால் அகிலேஷ் யாதவ் கடந்த இரண்டு மூன்று மாதங்களில் செய்த முயற்சிகள், உத்தர பிரதேச தேர்தல் களத்தை கடுமையான போட்டிச்சூழல் நிறைந்ததாக ஆக்கியது. ஆனால், இன்று வெளியாகி வரும் முடிவுகளை அகிலேஷின் தீவிர ஆதரவாளர்கள் கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆட்சியை பாஜக தக்க வைக்கும் வேளையில், மாநிலத்தில் மோதி-யோகி தலைமைக்கு எதிராக ஒரு வலுவான எதிர்கட்சியாக அகிலேஷின் சமாஜ்வாதி கட்சி உருவாகவிருக்கிறது.
அரசியலில் மிகவும் பொருத்தமான அனுபவமாக கருதப்படும் ஐந்து ஆண்டுகள் ஆட்சி மற்றும் ஐந்தாண்டுகள் எதிர்கட்சியாகவும் இருந்த அனுபவம் அவருக்கு இப்போது உள்ளது. பல ஆண்டுகளுக்குப்பிறகு அவர் மாநில சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட்டார்.
ஆனால் 'திப்பு' மீண்டும் 'சுல்தான்' ஆவார் என்ற அவரது கனவு இப்போது நிறைவேறவில்லை.
அகிலேஷ் யாதவ் எப்படி 'திப்பு' ஆனார்?
அகிலேஷ் யாதவின் செல்லப்பெயர் 'திப்பு'. இந்த பெயரிடலுக்கு பின்னால் ஒரு கதை உள்ளது.
முலாயம் சிங் யாதவின் குடும்ப நண்பரும் அவரது மூதாதையரும், சைஃபை கிராமத்தின் தலைவருமான தர்ஷன் சிங், முலாயமின் மகனுக்கு திப்பு என்று பெயரிட்டார். திப்பு என்று பெயரிடப்பட்டவுடன், பூசாரியை அழைத்து முறையாக பெயரிடும் வைபவம் நடத்தும் தேவையை குடும்பத்தில் யாரும் உணரவில்லை.
'அகிலேஷ் யாதவ் - விண்ட்ஸ் ஆஃப் சேஞ்ச்' என்ற அகிலேஷ் யாதவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சுனிதா ஆரோன் இவ்வாறு கூறுகிறார்.
"முலாயம், எஸ்.என். திவாரியின் மிக நெருங்கிய நண்பர். அவர் முலாயமின் நான்கு வயது மகனை பள்ளியில் சேர்க்க அழைத்துச் சென்றபோது, அங்கிருந்த ஆசிரியர் அவனது பெயரைக் கேட்டார். திப்பு' என்று அந்த சிறுவன் பதிலளித்தான். ஆனால் அதை படிவத்தில் எழுத முடியாது என்று ஆசிரியர் சொன்னார். அப்போது திவாரி சிரித்தபடி திப்புவிடம் சில பெயர்களை பரிந்துரைத்து, 'உனக்கு அகிலேஷ் என்ற பெயர் பிடிக்குமா?' என்று கேட்டார். குழந்தை தலையை ஆட்டியது. அப்போது முதல் திப்பு, அகிலேஷ் யாதவ் ஆனார்."
அகிலேஷ் யாதவ் எட்டாவாவில் உள்ள செயின்ட் மேரிஸ் பள்ளியில் 3ம் வகுப்பு வரை படித்தார். அப்போது அவரது மாமா ராம்பால் சிங் அவரை சைக்கிளில் பள்ளிக்கு அழைத்து வருவார். சைக்கிள் பின்னர் சமாஜ்வாதி கட்சியின் தேர்தல் சின்னமாக மாறியது. அந்த காலத்தில் திப்புவுக்கு மரம் ஏறுவதில் விருப்பம் இருந்தது.
கம்பட் அதாவது ஆரஞ்சு மிட்டாயின் ஆசையை காட்டினால்தான் அவர் மரத்தில் இருந்து இறங்கி வருவார். அகிலேஷின் தந்தை முலாயம் சிங் அந்த பகுதியில் பிரபலமான மல்யுத்த வீரர். மற்ற மல்யுத்த வீரர்களை தன் கைகளைப் பயன்படுத்தாமல் தலையால் அடித்த அவரது 'சர்க்கா தாவ்' பற்றி அவரது கிராமத்தில் உள்ள மக்கள் இப்போதும் நினைவு கூர்கின்றனர்.
1977ல் ராம் நரேஷ் யாதவ் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சராக முலாயம் சிங் யாதவ் பதவியேற்றபோது அவருக்கு வயது 38. அதே வயதில், அவரது மகன் அகிலேஷ் யாதவ், 2012ல் உத்தர பிரதேச முதல்வராக பதவியேற்றார். அப்போது அவரது ஆதரவாளர்கள் 'திப்பு பன்கயா சுல்தான்'(திப்பு சுல்தான் ஆகிவிட்டார்) என்று சிரித்துக்கொண்டே அழைத்தனர்.
அப்போது அகிலேஷ் நாகரிகமானவர், கண்ணியமானவர். நேர்மையானவர் என்று வர்ணிக்கப்பட்டார். சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் தலைவர் ஷாஹித் சித்திக், ' 'அகிலேஷ் மிகவும் நேர்மையானவராக இருந்தார். இதனால் அரசை நடத்துவதே மிகவும் சிரமமாக இருந்தது," என்றார்.
அவர் முதலமைச்சராக பதவியேற்றபோது, அதிகாரத்தின் உண்மையான திறவுகோல் அவரது தந்தை முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவ், ராம் கோபால் யாதவ் மற்றும் முலாயமின் நெருங்கிய நண்பர் ஆசம் கான் ஆகியோரிடம் இருக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் நம்பப்பட்டது.
அவரது ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்த பிறகும், அவரைப் பற்றிய அரசியல் விமர்சகர்களின் இந்த எண்ணம் மாறவில்லை. உத்தர பிரதேசத்தில் நான்கரை முதல்வர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்ற கேலிப்பேச்சு அப்போது உத்தர பிரதேசத்தில் பரவலாக இருந்தது. பின்னர், உத்தர பிரதேச செயலகத்தில் அதிக செல்வாக்கு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனிதா சிங் என்ற மற்றொரு பெயர் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது.
தோல்பூரில் உள்ள சைனிக் பள்ளியில்
தனது நண்பர்களில் ஒருவரான அவத் கிஷோர் பாஜ்பாயின் ஆலோசனையின் பேரில், முலாயம் சிங் யாதவ் அகிலேஷை தோல்பூரில் உள்ள சைனிக் பள்ளியில் படிக்க அனுப்பினார். அவரை சேர்க்க அவரது சித்தப்பா ஷிவ்பால் சிங் யாதவ் அங்கு சென்றார். சைனிக் பள்ளியில் அகிலேஷ் தங்கியிருந்த காலத்தில், முலாயம் அவரை இரண்டு முறை மட்டுமே சந்திக்கச் சென்றார்.
முலாயம் ஒருமுறை அவருக்கு ஒரு கடிதம் எழுதினார், அதை ஒரு தந்தி என்றுகூட சொல்லலாம். ஏனென்றால் அந்தக் கடிதத்தில் இரண்டு வாக்கியங்கள் மட்டுமே இருந்தன - ' கடினமாக உழைத்து படி. அது உனக்கு உதவிடும்.' சைனிக் பள்ளியில், அகிலேஷ் மற்ற சிறுவர்களைப் போலவே, தனது துணிகளைத் தானே துவைத்து, ஷூக்களை தானே பாலீஷ் செய்து கொள்வார். மாணவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 8 கிலோமீட்டர் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தோல்பூரில் இருந்து அகிலேஷ் பொறியியல் படிக்க மைசூர் சென்றார். இம்முறை முலாயம் சிங் யாதவின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா, அகிலேஷை கல்லூரியில் சேர்க்கச் சென்றார்.
இதே நிருபேந்திர மிஸ்ரா தான், சிறிது காலம் முன்பு வரை பிரதமர் நரேந்திர மோதியின் முதன்மை செயலராக இருந்தார். மைசூரில் உள்ள ஜெயச்சம்ரேந்திரா பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது, பிரபல வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத்துடன் அகிலேஷுக்கு நட்பு ஏற்பட்டது. 1996ல் பொறியாளர் பட்டத்துடன் அகிலேஷ் திரும்பி வந்தபோது, தேவேகெளடா அமைச்சரவையில் முலாயம் சிங் யாதவ் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார்.
சிட்னியில் சுற்றுச்சூழல் பொறியியல் படிப்பு
அதே ஆண்டில், சுற்றுச்சூழல் பொறியியலில் முதுகலைப் படிப்பதற்காக அகிலேஷ் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்பட்டார்.
அக்காலத்தில் சிட்னியில் அகிலேஷுடன் படித்த கிதேஷ் அகர்வால் இவ்வாறு கூறுகிறார்.
''நான் தயாரித்த 'கடக் சாய்' (ஸ்ட்ராங் தேநீர்) அகிலேஷுக்கு மிகவும் பிடிக்கும். அந்தக் காலத்திலும் அவர் வெகு சீக்கிரம் எழுந்துவிடுவார். நாங்கள் பெரும்பாலும் புலாவ் சமைப்போம். ஆனால் அதை புலாவ் என்று அழைக்காமல் 'தஹ்ரி' என்று அழைப்போம். அமிதாப் பச்சனை அகிலேஷுக்கு மிகவும் பிடிக்கும். மேலும் அவர் 'மெல்லிசை' பாடல்களை விரும்பினார். ஒருமுறை நாங்கள் கேன்பெர்ராவுக்குச் சென்றோம். அகிலேஷ் குலாம் அலியின் புகழ்பெற்ற 'தேரே ஷஹர் மே ஹம் ஆயே ஹை முசாஃபிர்'' பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தார்.
படிப்பதிலும், எழுதுவதிலும் அவர் அவ்வளவு வல்லவர் என்று சொல்ல முடியாது. ஆனால் மற்ற தலைவர்களின் பையன்களைப் போல் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அவர் புகை குடிக்க மாட்டார். மது அருந்தமாட்டார். அங்கு வாழ்வதற்கு எங்களுக்குக் குறைந்த பணமே கையில் கிடைத்தது. ஒவ்வொரு வாரமும் எனக்கு 120 டாலர்கள் கிடைக்கும். அதே சமயம் அகிலேஷ் 90 டாலர்களில் தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வார். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு முன்பே மொபைல் போன் வந்துவிட்டது. ஆனாலும்கூட அவரிடம் மொபைல் போன் இல்லை. ஆஸ்திரேலியாவில் தங்கியிருந்த இரண்டு வருடங்களில், அகிலேஷ் ஒருமுறை கூட இந்தியாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்லவில்லை."
டிம்பிள் ராவத்தை மணந்தார்
அகிலேஷுடன் டிம்பிள் ராவத்தின் முதல் சந்திப்பு, அவர் ஆஸ்திரேலியா செல்வதற்கு முன்பே ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் அகிலேஷ் இருந்தபோது, கடிதங்கள் மூலம் ஒருவரையொருவர் தொடர்பு கொண்டனர். அந்த நாட்களில் டிம்பிளின் தந்தை கர்னல் எஸ்.சி. ராவத் பரேலியில் பணியில் இருந்தார். 1999ஆம் ஆண்டு நவம்பர் மாதம் எம்பி ஆன பிறகு அகிலேஷ், டிம்பிளை திருமணம் செய்து கொண்டார். டிம்பிளுக்கு குதிரை சவாரி மற்றும் படிப்பது மிகவும் பிடிக்கும்.
அகிலேஷுக்கு உணவு மிகவும் பிடிக்கும் என்பதால் திருமணத்திற்குப் பிறகு டிம்பிள் சமைக்கவும் கற்றுக்கொண்டார்.
கார்வான் இதழில், ' எவ்ரிபடீஸ் ப்ரதர்' என்ற அகிலேஷின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நேஹா தீட்சித், முதலில் அகிலேஷ் மற்றும் டிம்பிள் திருமணத்திற்கு முலாயம் எதிர்ப்பு தெரிவித்ததாக எழுதுகிறார்.
ஆனால் அகிலேஷ் ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது முலாயமின் நெருங்கிய நண்பரும் பின்னர் அவரை எதிர்த்தவருமான அமர்சிங்கிடம் இருந்து அகிலேஷுக்கு முழு ஆதரவு கிடைத்தது. ஆனால் பின்னர் அமர் சிங்குடன் முலாயமின் நட்பை எதிர்த்து போர்க்கொடி தூக்கியவர்களில் அகிலேஷும் ஒருவர். 'கயிற்றுக்கட்டிலில் தூங்கும் என் தந்தையை ஐந்து நட்சத்திர வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தினார்' என்று ஒரு பத்திரிக்கையாளரிடம் அவர் கூறியிருந்தார்.
ஜானேஷ்வர் மிஸ்ரா அகிலேஷின் குரு
"உண்மையில் அகிலேஷின் வாழ்க்கையில் ஒரு மூத்த ஆலோசகராக ஜானேஷ்வர் மிஸ்ரா இருந்தார்.முலாயம் சிங் யாதவ் அல்ல. அகிலேஷ் கட்சித் தலைவர் ஆனதும், ஜானேஷ்வர் மிஸ்ரா அவரிடம் இரண்டு ஆண்டுகள் கடினமாக உழைக்க வேண்டும் என்றும், அப்போது நானே உங்கள் பேரணிக்கு வந்து அகிலேஷ் ஜிந்தாபாத்' என்ற முழக்கத்தை எழுப்புவேன் என்றும், மற்ற கட்சியினரும் உங்களைத் தலைவராகக் கருதுவார்கள் என்றும் கூறினார்," என்று பிரபல பத்திரிகையாளர் பிரியா சேகல் தெரிவிக்கிறார்.
அகிலேஷ் யாதவுக்கு தனது அரசியல் வாழ்க்கையின் முதல் பாடத்தை கற்றுக்கொடுத்தவர் ஜானேஷ்வர் மிஸ்ரா. 35 வயது ஆன பிறகும் அகிலேஷ் கட்சியின் மூத்த தலைவர்களின் கால்களைத் தொடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
'இப்படியே அவர்களின் பாதங்களைத் தொட்டுக் கொண்டிருந்தால், அவர்களை யார் நெறிப்படுத்துவார்கள்? என்று மிஸ்ரா கேட்டார்.அப்போது அகிலேஷ் சிரித்துக்கொண்டே குறைந்தபட்சம் என் தந்தையின் பாதத்தையாவது தொடவிடுங்கள் என்றார். அகிலேஷ் முதல்வராக பதவியேற்றதும், லண்டனில் உள்ள ஹைட் பார்க் போல ஜானேஷ்வர் மிஸ்ராவின் நினைவாக லக்னோவில் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்காவை கட்டினார்.
'சைக்கிள் மீது நம்பிக்கை'
2009ல் அகிலேஷ் கன்னோஜ் மற்றும் ஃபிரோசாபாத் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டு இடங்களிலும் அவர் வெற்றி பெற்றார். பின்னர் அவர் ஃபிரோசாபாத் தொகுதியை கைவிட்டார். அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸின் ராஜ் பப்பர் அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவை தோற்கடித்ததால் அகிலேஷுக்கு அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
அகிலேஷ் 2011 அக்டோபரில் சைக்கிளில் மாநிலம் முழுவதும் பயணம் செய்தார். 'அகிலேஷ் தனது வெள்ளை குர்தா பைஜாமா மற்றும் சிவப்பு தொப்பியுடன் தனது சைக்கிளில் கிராமம் கிராமமாக சென்றார். அவரை நொய்டா-ஆக்ரா விரைவு சாலையில் செல்ல மாநில நிர்வாகம் அனுமதிக்கவில்லை. சேறும் சகதியுமாக இருந்த சர்வீஸ் லேனில் செல்ல அவர்முடிவு செய்தார்.
இந்த 'எக்ஸ்பிரஸ் வே'யை ஒரு நாள் நான் திறந்து வைப்பேன் என்று தனது ஆதரவாளர்களிடம் அவர் கூறினார். ஆட்சிக்கு வந்தபிறகு அதை செய்தும்காட்டினார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை ராகுல் காந்திக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே அவர் தொடங்கினார். அதன் பலன் தேர்தலில் அவருக்கு கிடைத்தது," என்று சுனிதா ஆரோன் எழுதியுள்ளார்.
2012ல் அதன் பலனைப் பெற்ற அவர், இம்முறை சைக்கிள் சவாரிக்கு பதிலாக ரோடு ஷோ செய்தார். சிறப்புத் தேர்தல் பயணத்திற்காக உருவாக்கப்பட்ட பேருந்தில் அவருக்குப் பின்னால் நீண்ட மக்கள் அணிவகுப்பு காணப்பட்டதுடன் மக்கள் அவரைப் பின்தொடர்ந்து ஓடுவதையும் காண முடிந்தது.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 'காம் போல்தா ஹை' ( என் வேலை பேசும்) என்ற தேர்தல் முழக்கத்துடன் அகிலேஷ் போட்டியிட்டார். ஆனால் இந்த முழக்கம், முடிக்கப்பட்ட பணிகளை விட திட்டங்களின் அடிக்கல்லை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. அவரது பதவிக்காலம் முடிவதற்குள், அவரது சொந்தக் கட்சியினரே பழைய தலைமுறையினருடன் சண்டையிட்டனர். அவர்களிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்ள அகிலேஷ் முயற்சிகளை ஆரம்பித்தார்.
அகிலேஷ் தனது சித்தப்பா ஷிவ்பால் யாதவுக்கு நெருக்கமான இரண்டு மாநில அமைச்சர்களை ஊழல் குற்றச்சாட்டின் பேரில் தனது அமைச்சரவையிலிருந்து நீக்கியபோது முதல் அம்பை எய்தார். முலாயமின் உத்தரவின் பேரில், அகிலேஷ் அவர்களை பின்னர் திரும்ப பதவியில் அமர்த்தினார். ஆனால் அவர் தனது தந்தைக்கு எதிரான கிளர்ச்சியின் சங்கை இதன்மூலம் ஊதிவிட்டார்.
டிசம்பரில், முலாயம் சிங் யாதவ் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டார். அதில் அகிலேஷ் அமைச்சரவையின் பல முகங்கள் இடம் பெறவில்லை. இதற்கு பதிலடி கொடுத்த அகிலேஷ் தனது பட்டியலை வெளியிட்டார். அதில் இவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
முலாயம் தனது மகனை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்தார். காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருந்தபோதிலும், கட்சியின் உட்பூசல் காரணமாக, உத்தர பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் அகிலேஷ் தோற்கடிக்கப்பட்டு, பாரதிய ஜனதாகட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
அப்போது உத்தர பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரசுக்கு 28 உறுப்பினர்கள் மட்டுமே இருந்தநிலையில், காங்கிரஸ் கட்சிக்கு 105 இடங்களை வழங்கிய அவரது முடிவை பல அரசியல் ஆய்வாளர்கள் விமர்சித்தனர். தோல்விக்குப் பிறகு, தன்னைத்தானே குற்றம் சாட்டிக்கொள்வதில் நேரத்தை வீணடிக்காமல், கட்சியின் மீதான தனது கட்டுப்பாட்டை முதலில் உறுதிப்படுத்தினார் அகிலேஷ். அப்போது அவர் தனது தந்தையின் பரம எதிரியான மாயாவதியை சந்தித்து, பாஜகவை தோற்கடிக்க நமது கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
மாயாவதி பிரதமராக விரும்பினால், அவருக்கு ஆதரவளிப்பதாகவும் அகிலேஷ் கூறினார்.
ஆனால் இந்த கூட்டணியால் 2019 மக்களவைத் தேர்தலில் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. மாயாவதியின் எம்.பி.க்களின் எண்ணிக்கை 10ஐ எட்டியது. ஆனால் அகிலேஷ் யாதவின் கட்சிக்கு ஐந்து இடங்களே கிடைத்தன. அதன் பிறகு இந்த கூட்டணி நீண்ட காலம் நீடிக்கவில்லை.கூட்டணியை முறிப்பதாக மாயாவதி அறிவித்தார்.
இத்தகைய சூழ்நிலையில், 2022 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தேர்தல் களத்தில் அகிலேஷ் யாதவை எங்குமே பார்க்க முடியவில்லை. கோவிட் நெருக்கடி மற்றும் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பிரியங்கா காந்தி மிகவும் தீவிரமாகத் செயல்பட்டார்.
ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அகிலேஷ் யாதவ் முதலில் ஓம் பிரகாஷ் ராஜ்பரை தன்னுடன் இணைத்துக்கொண்டார். சுவாமி பிரசாத் மெளரியாவை பாஜக முகாமில் இருந்து உடைத்தார்.
சுவாமி பிரசாத் மௌரியாவைத் தவிர, தரம் சிங் சைனி மற்றும் தாரா சிங் செளஹான் போன்ற மாநிலத்தின் இரண்டு பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொண்டார். 12க்கும் மேற்பட்ட பாஜக எம்எல்ஏக்களை தன்னுடன் சேர்த்துக் கொண்டு மக்களை ஆச்சரியப்படுத்தினார்.
அகிலேஷ். இதையெல்லாம் வைத்து, மேற்கு உத்தர பிரதேசத்தில் ஜெயந்த் செளத்ரியின் ராஷ்ட்ரிய லோக் தளத்துடன் தனது கூட்டணியை தக்க வைத்துக் கொண்டார்.
இதுமட்டுமின்றி, சித்தப்பா ஷிவ்பால் யாதவுடன் அகிலேஷ் கைகோர்த்தார். இருப்பினும், இந்த முறை குடும்பத்தின் இளைய மருமகள் அபர்ணா யாதவ் வெளிப்படையாக பாஜகவுக்குச் சென்றார். ஆனால் பாஜக அவரை மாநிலத்தில் வேட்பாளராக நிறுத்தவில்லை.
இதன்பிறகு அவரது ரோடு ஷோவிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. தொகுதி விநியோகத்தில் கூட, குடும்பப் பாசத்தில் இருந்து வெளிவரும் அகிலேஷ் யாதவின் முயற்சி தெரிந்தது. பல சமூகங்களைச் சேர்ந்தவர்களை அவர் களத்தில் நிறுத்தினார். இத்தனைக்கும் மத்தியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொடர்ந்து தாக்கி வந்தார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் அவர் அரசு அமைக்கும் சாத்தியகூறு காணப்படவில்லை. ஆனால், அவர் அதிகாரத்தை உறுதிப்படுத்தும் நிலையை எட்டக்கூடும் என்று பல ஆய்வாளர்கள் கூறினர். கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது 47 இடங்களோடு மட்டுப்படுத்தப்பட்ட அக்கட்சி இம்முறையும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. இது அகிலேஷின் அரசியல் உத்திகள் மீதும் அவரது தலைமை மீதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிற செய்திகள்:
- யுக்ரேன்: மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யா குண்டுவீச்சு
- ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இந்தியாவுக்குச் சொல்லப்போகும் செய்தி என்ன?
- யுக்ரேன் போரை திரைக்குப் பின்னால் இருந்து இயக்கும் அதிபரின் மனைவி
- இஸ்லாமியரின் நிலத்துக்குள் அத்துமீறி பௌத்த விகாரை அமைக்க முயற்சி - மக்கள் கடும் எதிர்ப்பு
- ராமேஸ்வரத்தில் டாட்டூ போட வந்ததை போல் நடித்து இளைஞரை கடத்திய கும்பல்: என்ன நடந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்