யுக்ரேன் ஆய்வகங்களில் உயிரி ஆயுதங்கள் தயாரிப்பா? ரஷ்யா சொல்வது உண்மையா?

    • எழுதியவர், ஓல்கா ராபின்சன், ஷயன் சர்தாரிசாதே மற்றும் ஜேக் ஹார்டன்
    • பதவி, பிபிசி உண்மை கண்டறியும் குழு மற்றும் பிபிசி மானிடரிங்

அமெரிக்காவின் ஆதரவுடன் யுக்ரேனில் உள்ள ஆய்வகங்களில் உயிரி ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக ரஷ்ய கூறுகிறது.

யுக்ரேனில் ரஷ்ய படைகள் 17வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், யுக்ரேனின் உயிரி ஆயுதத் திட்டத்தை மறைப்பதற்காக இப்போது ஆதாரங்கள் அழிக்கப்படுவதாகவும் ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. ஆனால் இது, "முற்றிலும் முட்டாள்தனமானது" என்றும் யுக்ரேனில் அதன் நடவடிக்கைகளை நியாயப்படுடுத்த ரஷ்யா தவறான கதைகளை உருவாக்குகிறது என்றும் அமெரிக்கா கூறுகிறது.

இம்மாதிரியான சில கூற்றுகளில் ஏதேனும் உண்மை உள்ளதா என்று அறிய அதற்கான ஆதாரங்கள் குறித்து பிபிசி ஆராய்ந்தது.

யுக்ரேனில் உயிரி ஆயுத ஆராய்ச்சிக்கு அமெரிக்க நிதியளிக்கிறதா?

அமெரிக்கா மற்றும் யுக்ரேன் இணைந்து, யுக்ரேன் முழுவதும் 30 ஆய்வகங்களில் "ஆபத்தான தொற்றுநோய்களின் நோய்க்கிருமிகளில்" ஆய்வு செய்வதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. தொற்றுநோயை உண்டாக்கக்கூடிய நுண்ணுயிரிகள் நோய்க்கிருமிகள் எனப்படுகின்றன.

யுக்ரேனில் பல பொது சுகாதார ஆய்வகங்கள், ஆபத்தான நோய்களின் அச்சுறுத்தல் மற்றும் அந்த அச்சுறுத்தலைத் தணிப்பது குறித்த ஆராய்ச்சிகளைச் செய்து வருகின்றன.

இந்த ஆய்வகங்களில் சில, பல்வேறு நாடுகளில் இருப்பதைப் போலவே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிலிருந்து நிதி மற்றும் பிற ஆதரவைப் பெற்றுச் செயல்படுகின்றன.

இவை "ரகசிய ஆய்வகங்கள்" என்று ரஷ்யா கூறிய போதிலும், அமெரிக்க ஈடுபாடு பற்றிய விவரங்களை அமெரிக்க தூதரகத்தின் இணையதளத்தில் காணலாம்.

கூடுதலாக, சோவியத் யூனியனின் வீழ்ச்சியைத் தொடர்ந்து யுக்ரேன் உள்ளிட்ட நாடுகளில் கைவிடப்பட்ட உயிரி ஆயுதங்களால் ஏற்படக்கூடிய ஆபத்தைக் குறைக்க 1990-களில் அமெரிக்கா தனது "உயிரி அச்சுறுத்தல் குறைப்பு திட்டத்தை" உருவாக்கியது.

இந்தத் திட்டத்தின் கீழ், சில ஆய்வகங்கள் நவீனமயமாக்கல் மற்றும் உபகரணங்களுக்காக, அமெரிக்காவிடமிருந்து நிதியைப் பெறுகின்றன. ஆனால், அவை நிர்வகிக்கப்படுவது அமெரிக்காவால் இல்லை, உள்நாட்டு நிர்வாகத்தால் தான்.

உங்களது கதையை சொல்ல விரும்புகிறோம்: நீங்களோ அல்லது நண்பரோ, உறவினரோ யுக்ரேனில் இருக்கிறீர்களா?

தற்போது யுக்ரேனில் இருக்கும் தமிழர்களை தொடர்பு கொள்ள விரும்புகிறோம். அங்கு நீங்கள் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள்? அல்லது யுக்ரேனில் இருந்து வெளியேறி அண்டை நாடுகளில் இருக்கிறீர்களா? உங்களது அனுபவங்களை கீழே உள்ள படிவத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். பிபிசி தமிழில் இருந்து விரைவில் உங்களை தொடர்பு கொள்கிறோம். உங்கள் அனுபவங்களை பிபிசி தமிழ் இணையதளத்தில் பிரசுரிக்கலாம்.

உங்கள் கேள்விகளுக்கு பதில்: யுக்ரேன் மோதலில் இந்தியாவின் மீதான தாக்கம்

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அந்த மோதலின் தாக்கம் உலக அளவிலோ அல்லது உங்களது அன்றாட வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தைப் பற்றியோ நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பலாம். உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். அதன் அடிப்படையில் அடுத்துவரும் செய்திகளை உங்களுக்கு வழங்குகிறோம்.

நாட்டின் பொது சுகாதார ஆய்வகங்களை மேம்படுத்துவதற்காக 2005-ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பாதுகாப்புத் துறை, யுக்ரேனின் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

அமெரிக்கா தொழில்நுட்ப ஆதரவை வழங்குகிறது. அதோடு யுக்ரேனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் கூற்றுப்படி, "அது, உலகின் மிகவும் ஆபத்தான தொற்றுநோய்களின் பரவல் குறித்த (வேண்டுமென்றே, தற்செயலாக அல்லது இயற்கையான) அச்சுறுத்தலை எதிர்கொள்ள நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படுகிறது."

அவர்கள் உயிரி ஆயுதங்களைத் தயாரிக்க முயல்கிறார்கள் என்பதற்கு எந்த ஆதரமும் இல்லை. ஜனவரியில் அமெரிக்கா தனது திட்டம் இந்தக் கூற்றுக்கு நேர்மாறாகச் செயல்படுவதாகவும் உண்மையில் "உயிரி ஆயுதங்கள் பெருக்கத்தின் அச்சுறுத்தலைக் குறைப்பதையே" நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் கூறியது.

ரஷ்யாவின் அண்டை நாடுகளில் இயங்கும் அமெரிக்க ஆதரவு உயிரி ஆய்வகங்கள் பற்றி, கடந்த காலங்களிலும் இதுபோன்ற ஆதாரமற்ற கூற்றுகள் ரஷ்யாவால் முன்வைக்கப்பட்டுள்ளன.

2018-ஆம் ஆண்டில், அண்டை நாடான ஜார்ஜியாவில் அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்ட ஆய்வகத்தில் குடிமக்களுக்கு சோதிக்கப்படாத மருந்துகள் வழங்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

பிபிசி நேரடியாகச் சென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நபர்களிடம் பேசியது. அதோடு, அந்தக் கூற்றுகளை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை என்பதைக் கண்டறிந்தது.

சட்டவிரோத ஆராய்ச்சியை மறைக்க நோய்க்கிருமிகளை யுக்ரேன் அழித்ததா?

யுக்ரேன் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளைச் செய்ததற்கான ஆதாரங்களை மறைக்க முயன்றதாகவும் ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய நாளான பிப்ரவரி 24 அன்று, யுக்ரேனில் ரஷ்ய ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள், "யுக்ரேனின் சுகாதார அமைச்சகம், ஆய்வகங்களில் உள்ள உயிரி ஆயுதமாகப் பயன்படுத்தப்படக் கூடிய நுண்ணுயிரிகளை அழிக்கும் பணியைத் தொடக்கியதைக் காட்டுகிறது" என்று ஜெனரல் ஈகா கிரியோஃப் கூறினார்.

"இந்த ஆவணங்கள் ரஷ்ய நிபுணர்களின் கைகளில் கிடைத்தால், யுக்ரேனும் அமெரிக்காவும் உயிரி மற்றும் நச்சு ஆயுதங்களை தடை செய்யும் உடன்படிக்கையை மீறியது கண்டுபிடிக்கப்படும் என்பது பென்டகனுக்கு தெரியும்," என்று அவர் கூறினார்.

ஜெனரல் கிரியோஃப் மேற்கோள் காட்டிய ஆவணங்களை பிபிசி செய்தியால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை.

மக்கள் மத்தியில் நோயைப் பரப்பும் "நோய்ப் பரவலுக்கான எந்தவொரு சாத்தியக்கூறுகளையும்" தடுக்க, நாட்டின் பொது சுகாதார ஆய்வகங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் மிகுந்த நோய்க்கிருமிகளை அழிக்க யுக்ரேனுக்கு அறிவுறுத்தியதாக உலக சுகாதார அமைப்பு பிபிசி செய்தியிடம் தெரிவித்துள்ளது.

உயிரி பாதுகாப்பு மற்றும் உயிரி பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், "தற்செயலாக அல்லது வேண்டுமென்றே நோய்க்கிருமிகளை வெளியிடுவதை" தடுப்பதற்கும் யுக்ரேனிய பொது சுகாதார ஆய்வகங்களுடன் பல ஆண்டுகளாக ஒத்துழைத்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.

இந்தப் பரிந்துரை எப்போது செய்யப்பட்டது, எப்போது பின்பற்றப்பட்டது என்பதை உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை. யுக்ரேனிய ஆய்வகங்களில் சேமிக்கப்பட்டுள்ள நோய்க்கிருமிகளின் விவரங்களையும் அது வழங்கவில்லை. இருப்பினும், ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு, ரஷ்ய ராணுவத் தாக்குதலின்போது ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்காக யுக்ரேனின் சுகாதார அமைச்சகம் "பாதுகாப்பாக உயிரி மாதிரிகளை அகற்ற" உத்தரவிட்டதாக அமெரிக்கா கூறியது.

"யுக்ரேனிய ஆய்வகங்கள் எந்தவொரு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கையிலும் உயிரி ஆயுதங்கள் மாநாட்டிற்கு முரணான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டதற்கான அறிகுறிகள் எதுவுமில்லை," என்கிறார் லண்டன் கிங்ஸ் கல்லூரியின் உயிரி பாதுகாப்பு வல்லுநர் ஃபிலிப்பா லென்ட்ஸோஸ்.

மேலும், உயிரி ஆய்வகங்களில் சேமிக்கப்பட்டிருப்பது நோய்க்கிருமிகள் பாக்டீரியா மற்றும் நச்சுயிரிகள் தான், "உயிரி ஆயுதங்களின் கூறுகளோ அவற்றை உருவாக்குவதற்கான முறைகளோ அல்ல," என்றும் அவர் கூறுகிறார்.

அதோடு, "அவை உயிரி-பாதுகாப்பிற்காக, மிகவும் பாதுகாப்பான கட்டமைப்புகளில் வைக்கப்படுகின்றன. எனவே அவற்றை அணுகுவதன் மூலம் மக்கள் தங்களை நோய்வாய்ப்படுத்திக்கொள்ள மாட்டார்கள்," என்றும் குறிப்பிட்டார்.

அதிக எண்ணிக்கையிலான நோய்க்கிருமிகள், உயிரி-ஆயுத ஆய்வைக் குறிக்கிறது: தவறு

ஜெனரல் கிரியோஃப், யுக்ரேனிய உயிரி ஆய்வகங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் "அதிகப்படியான நோய்க்கிருமிகள்" மூலம், அதன் பணிகளின் ராணுவமயமாக்கப்பட்ட தன்மை உறுதியாகிறது என்றும் கூறினார்.

ஆனால், இந்த வாதம் தர்க்க அறிவியல் ரீதியாக உடன்படவில்லை என்று முனைவர்.லென்ட்ஸோஸ் கூறுகிறார். அவர், "எண்கள் முக்கியமில்லை. ஒரு சிறிய மாதிரியில் தொடங்கி, நீங்கள் ஓர் ஆய்வகத்தில் நோய்க்கிருமிகளை எளிதாக வளர்க்கலாம்" என்கிறார்.

பாத் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் பொது கொள்கையில் மூத்த விரிவுரையாளராக இருக்கும் பிரெட் எட்வர்ட்ஸ், "இந்த ஆய்வகங்கள் வெளிப்படையாகக் கிடைக்கும் ஆய்வறிக்கைகளில் திட்டங்களை வெளியிடுகின்றன. அவை உலகளாவிய பங்காளர்களுடன் பல பொது சுகாதாரத் திட்டங்களில் இணைந்து செயலாற்றுகின்றன," என்கிறார்.

"உயிரி ஆயுதங்களுக்கான ஆய்வை நடத்துவதற்கு கணிசமான அளவு பணம் மற்றும் குறிப்பிடத்தக்க ஆதாரங்களைச் செலவிடுவது யுக்ரேனுக்கு மூலோபாய பலன்களை அளிக்காது. அவற்றை மோதலின்போது பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது," என்று முன்னாள் அமெரிக்க படைவீரரும் உயிரி ஆயுதங்களுக்கு எதிரான பாதுகாப்பில் வல்லுநருமான டேன் கஷெட்டா வாதிடுகிறார்.

"வழக்கமான போர் ஆயுதங்களை யுக்ரேன் போன்ற நாடுகளில் பயன்படுத்துவது மிகவும் எளிதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்," என்று அவர் கூறுகிறார்.

வேறு எங்கெல்லாம் இத்தகைய கூற்றுகள் முன்வைக்கப்பட்டுள்ளன?

யுக்ரேனிய ஆய்வகங்கள் பற்றிய ரஷ்யாவின் கூற்றுகளை இந்த வாரம் சீனா எதிரொலித்தது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாவ் லிஜியன், "உயிரி-ராணுவ திட்டங்களை நடத்துவதற்கு" அமெரிக்கா இந்த வசதிகளைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டினார்.

இதேபோன்ற குற்றச்சாட்டுகளை ஈரான் மற்றும் சிரியாவின் அதிகாரிகளும் முன்வைத்துள்ளனர்.

குற்றச்சாட்டுகள் வேறு எங்கு எதிரொலித்து இருந்தாலும், "பெரும்பாலான ரஷ்ய செய்திகள் அவர்களுடைய சொந்த மக்களைக் குறிவைக்கும் வகையில் உள்ளன," என்று கூறுகிறார் மேரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் மூத்த ஆராய்ச்சி இணையரான மில்டன் லைடென்பெர்க்.

இந்தக் கூற்றுகள் தவறானவை என்பதை அறியாத, மாற்று தகவல்களை அணுக முடியாத நிலையில் இருக்கும், "ரஷ்ய மக்களின் மனதில் குழப்பத்தை உருவாக்கும் வகையில்" இவை இருப்பதாக அவர் கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: