தஞ்சாவூர், புதுக்கோட்டை கிராமங்களில் களைகட்டும் மொய் விருந்துகள் - கள நிலவரம்

    • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
    • பதவி, பிபிசி தமிழ்

நிதி மூலதனம், புதிய வேலை வாய்ப்பு, கூட்டுறவின் பலன், திருவிழாக் கோலம் என பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளைக் கொண்டதாக மொய் விருந்து விழாக்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் நடைபெறும் இந்த விழாக்கள், பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன. கஜா புயலின் தாக்கம், கொரோனா ஆகியவற்றால், கடந்த 2 ஆண்டுகளில் பெரும்பான்மையாக நடைபெறவில்லை. தற்போது மொய் விருந்து விழாக்கள் மீண்டும் தொடங்கியுள்ளன.

தமிழ்நாட்டு கிராமங்கள் திருவிழா, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் களை கட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், ஆண்டு தோறும் கறி விருந்தால் களை கட்டும் கிராமங்களை இப்போது பார்க்க உள்ளோம்.

ஆம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி சுற்று வட்டார கிராமங்கள், புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்று வட்டார கிராமங்கள் என இரு மாவட்டங்களில் எல்லையோர கிராமங்கள் மொய் விருந்திற்கு பெயர் பெற்றவை.

கடந்த 2019ஆம் ஆண்டு ஒருவர் நடத்திய விருந்தில் ஒரு டன் ஆட்டுக் கறி பரிமாறப்பட்டது. அவருக்கு மொத்தம் ரூ. 4 கோடி மொய் பணம் கிடைத்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

கொரோனா பரவலால், கடந்த 2020ஆம் ஆண்டு ஓரிரு இடங்களிலும் மொய் விருந்து நடைபெற்றன. கடந்த ஆண்டு, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு குறைந்த எண்ணிக்கையில் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், மொய் விருந்து நடத்த மாவட்ட ஆட்சியர் தடை விதித்தார்.

இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகள், புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் தற்போது மொய் விருந்துகள் நடைபெற்று வருகின்றன. கீரமங்கலம், வடகாடு, மாங்காடு, சேந்தன்குடி, குளமங்கலம், அணவயல் உள்ளிட்ட கிராமங்களிலும் மொய் விருந்துகளை நடத்த திட்டமிட்டு வருகின்றனர்.

திருவிழா போல் மொய் விருந்து

திருமண அழைப்பிதழ் போல் மொய் விருந்து விழாவிற்கும் அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்படுகின்றன. விருந்திற்கு வருவோரை வரவேற்க வைக்கப்படும் பதாகைகள், மாலையிட்டு அளிக்கப்படும் உபசரிப்பு உள்ளிட்டவை திருவிழா உணர்வைத் தருவதாக அமையும்.

விருந்து நடைபெறும் பகுதியில், வைக்கோல் பரப்பி அதன்மேல் வேட்டியை விரித்து, வெள்ளைக் குன்று போல் குவிக்கப்படும் அரிசி சோறு, பெரிய பெரிய அண்டாக்களில் கம கம வாசத்துடன் சமைக்கப்பட்டிருக்கும் குழம்பு, தலைவாழை இலையில் வைக்கப்படும் பந்தி, திகட்ட திகட்டக் கிடைக்கும் ஆட்டுக்கறி என மொத்தத்தில் வயிறும் மனசும் நிறையும் விருந்தாக மனதில் நிற்கும்.

'மொய் விருந்து கறி சோறு' போல் அசத்திட்டான் என்று மற்ற நாட்களில் சொல்லும் அளவிற்கு மொய் விருந்து தனிச்சிறப்பு பெற்றது,

கொரோனா பொதுமுடக்கத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு, நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் மொய் விருந்துகள் நடைபெற்று வருகின்றன.

வழக்கமாக ஆடி மாதம் நடைபெறும்

ஒரு முறை மொய் விருந்து வைத்தவர் 5 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அடுத்த விருந்து நடத்த வேண்டும். ஓரே நேரத்தில் பலர் மொய் விருந்து நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட சுய கட்டுப்பாடுகள் உள்ளன.

இது குறித்து கொத்தமங்கலத்தைச் சேர்ந்த சுரேஷ் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் மொய் விருந்து விழாக்கள் நடைபெற்று வருகின்றன. பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை கைதூக்கி விடும் நோக்கத்தில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சுற்று வட்டாரத்தில் தொடங்கிய பழக்கம், இப்போது புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களிலும் நடைபெறுகிறது.

ஆண்டுதோறும் ஆடி, ஆவணி மாதங்களில்தான் மொய் விருந்து நடைபெறும். இந்த இரண்டு மாதங்களும் உறவினர்கள் வருகையாகவே இருக்கும். ஆனால், கொரோனாவால் 2 ஆண்டுகளாக நடத்தவில்லை.

ஆகையால் கடந்த ஆடி, ஆவணி மாதங்களில் நடத்த வேண்டியவர்கள், தற்போது (மாசி மாதத்தில்) நடத்துகின்றனர். ஒரு முறை மொய் விருந்து நடத்தியவர்கள் 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடத்தினால்தான் வரவு செலவு சரியாக இருக்கும். ஆகையால் மொய் பணத்தைத் திரும்பப் பெறும் வகையில் தொடர்ச்சியாக இந்த விழாக்கள் நடத்தப்படுகின்றன'' என்கிறார்.

முதலீட்டுக்கு உதவும் மொய் விருந்து

தொடர்ந்து சுரேஷ் கூறுகையில், ''தனி நபர்களாக நடத்துவதை விட, பெரும்பாலும் 10க்கும் மேற்பட்டவர்கள் வரை இணைந்து தற்போது விழா நடத்துகிறார்கள். விருந்திற்கான அனைத்து செலவுகளும் மொத்தமாகக் கணக்கிடப்படும். இறுதியில் அனைவரும் செலவினத் தொகையைப் பகிர்ந்து கொள்வார்கள்.

ஆனால், மொய் பணத்தை தனித்தனியாகப் பெற்றுக் கொள்வார்கள். கடந்த 2018ஆம் ஆண்டு கஜா புயலுக்கு முன்பு நடைபெற்ற மொய் விருந்தில் அனைத்து பகுதிகளிலும் ஒட்டு மொத்தமாக சுமார் 500 கோடி வரை மொய் கிடைத்தது.

மொய் மூலம் கிடைக்கும் பணத்தை தொழில் தொடங்க, வீடு கட்ட, வாகனம் வாங்க, வங்கியில் வைப்புத் தொகை, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு என பயன்படுத்துவார்கள். மொய் விருந்து நடத்துபவர்களுக்கு வங்கியே கடன் கொடுக்கும் வழக்கமும் உள்ளது.

மொய் பெற்றவர்கள் அதை 5 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் திரும்ப கொடுத்து விடுவார்கள். இதற்காக அவர்கள் நடத்தும் விழாவிற்கு கட்டாயம் சென்று, மொய் செலுத்தி வருகிறார்கள். ஆகையால், இது கலாச்சார பழக்கமாக மட்டும் இல்லாமல், ஒற்றுமையின் பயனை எடுத்துச் சொல்லும் விதமாகவும் இருக்கிறது,'' என்கிறார் சுரேஷ்.

புதிதாக உருவாகும் வேலை வாய்ப்புகள்

மொய் விருந்து அழைப்பிதழ் தொடங்கி விருந்து பரிமாறுவது, மொய் எழுதுவது வரை உறவினர்களே செய்து வந்தனர். காலப் போக்கில் இந்த பணிகளைச் செய்வதற்காக தனி நபர்கள், குழுக்கள் தற்போது வந்து விட்டனர்.

ஆடு வியாபாரம், மளிகை பொருட்கள் விற்பனை, வாழை இலை, பந்தல் அமைப்பாளர்கள், வாடகை பாத்திரம், சமையல்காரர்கள், உணவு பரிமாறுபவர்கள், மொய் எழுதுவோர் என பலருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது என்கிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அச்சகம் நடத்தி வரும் மா.துரைமுருகன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''மொய் விருந்து விழாக்கள் எங்கள் பகுதியில் நூற்றுக் கணக்கானவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை அளிக்கும் ஒன்றாக உள்ளது. என்னுடைய தொழிலைப் பொருத்தவரை, மற்ற மாதங்களில் வரும் ஆர்டர்களை விட, இந்த காலத்தில் அதிகம் கிடைக்கிறது.

ஒரு மண்டபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் வரை இணைந்து மொய் விருந்து நடத்துவார்கள். இதனால், ஒரே நேரத்தில் 10க்கும் மேற்பட்ட அழைப்பிதழ்களை அச்சடிக்கும் ஆர்டர்கள் கிடைக்கிறது. அழைப்பிதழ்கள் மட்டுமின்றி பிளக்ஸ், பேனர் அச்சடிப்பவர்கள், அதைக் கட்டுபவர்கள் எனப் பலருக்கும் வருமானம் கிடைக்கிறது.

தற்போது மொய் விருந்து அழைப்பிதழ்களை வீடு வீடாகச் சென்று கொடுப்பதற்கும் குழுக்கள் உள்ளன. ஒரு பத்திரிக்கைக்கு ரூ. 5 முதல் 20 வரை தொலைவிற்கு ஏற்ப கட்டணம் பெற்றுக் கொண்டு, மாணவர்கள், இளைஞர்கள் இந்தப் பணிகளை மேற்கொள்கின்றனர். மீண்டும் மொய் விருந்துகள் நடைபெறுவதால், பலருக்கு வேலை, வருவாய் உத்தரவாதம் உறுதியாகியுள்ளது,'' என்கிறார் துரைமுருகன்.

மொய் எழுதும் பட்டதாரிகள்

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மொய் விருந்து விழா நடைபெறும் காலம் வேலை வாய்ப்பு அளிக்கிறது என்கிறார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். மொய் எழுதும் பணியில் ஈடுபடும் இளைஞர் ராஜன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "நான் எம்.ஏ., பி.எட் பட்டதாரி. மொய் விருந்தில் மொய் எழுதும் பணிக்குச் செல்கிறேன். விருந்திற்கு வரும் உறவினர்கள் கொடுக்கும் மொய் பணத்தைப் பெற்று, அவர்களது பெயர், முகவரியை தெளிவாக நோட்டில் எழுதிக் கொடுக்கிறேன். என்னோடு மற்றொரு நபர் பணத்தை வாங்கி வைத்துக் கொள்வார். இது போல் ஒரு நபருக்கு 3, 4 குழுக்கள் வரை மொய் எழுதிக் கொடுப்பார்கள்.

மொய் பணத்தை வாங்கி, அதை கவனமாக நோட்டில் எழுதி, கணக்கை முடித்துக் கொடுத்து விட்டு வந்து விடுவோம். சில மணி நேர இந்த பணிக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவார்கள்.

விழா நடைபெறும் மாதங்களில் 50 விழாக்கள் வரை மொய் எழுதும் வாய்ப்பு கிடைக்கும். என்னைப் போல் பலர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேலையில்லாத இளைஞர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது. ஆகையால், ஆர்வத்துடன் இந்த பணியில் பங்கேற்று வருகிறேன்,'' என்கிறார் ராஜன்.

சமையல் குழுவினரின் அனுபவம்

மொய் விருந்து விழாவின் முக்கிய அம்சமாக இருந்து சுவையாக சமைத்து, பரிமாறுவதுதான். மிகவும் விழிப்போடு செய்ய வேண்டிய இந்த பணிக்கு பல்வேறு சமையல் குழுக்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான சமையல் கலைஞர் முத்தரசு கூறுகையில், ''பல ஆண்டுகளாக சமையல் பணியில் ஈடுபட்டாலும், மொய் விருந்து விழா காலத்தில் வேலை அதிகம் கிடைக்கிறது. ஒரே நாளில் 2, 3 விழாக்களுக்கு சமைக்கும் ஆர்டர் கூட வரும். ஆனால், முடிந்த பணிகளை மட்டும் ஏற்றுக் கொள்வோம்.

சமைப்பது தொடங்கி, அதை பக்குவமாகப் பரிமாறுவது வரை 50 பேர் வரை ஒரு குழுவில் இருப்பார்கள். இன்றைக்கு மட்டும் 20 பேர் பணியில் ஈடுபட்டுள்ளோம். மொய் விருந்து காலம் முழுவதும் எங்களுக்கு வேலை இருக்கும்.

அதற்கேற்ற வருமானமும் கிடைக்கும். இரண்டாண்டுகளாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் வேலை கிடைத்து வருகிறது. தொடர்ந்து கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஏனென்றால், இந்த விழா சார்ந்த வேலைதான் பலருக்கு வாழ்வாதரமாக உள்ளது,'' என்கிறார் முத்தரசு.

மொய் விருந்து ஆர்வம் குறைகிறதா?

பல்வேறு காரணங்களினால், கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் மொய் விருந்து ஆர்வம் குறைந்து வருகிறது. குறிப்பாக 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலுக்குப் பிறகு எண்ணிக்கை குறைந்து விட்டது என்கிறார்கள் ஏற்பாட்டாளர்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் சண்முகானந்தன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இந்த பகுதியில் தென்னை மரங்கள் அதிகம். தென்னை சார்ந்த விவசாயப் பணிகள் அதிகம் நடைபெற்றன. கஜா புயலில் பல்லாயிரம் மரங்கள் அடியோடு விழுந்து விட்டன. இதனால், பல விவசாயிகள் நொடித்துவிட்டனர். பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

இதையடுத்து, கொரோனா வந்து, பொருளாதார புழக்கத்தை மேலும் முடக்கியுள்ளது. இதனால், மொய் விருந்து நடத்தினால், மொய் தொகை வருவது வெகுவாகக் குறைந்துவிட்டது. முன்பு ஒருவர் விழா நடத்தினால், 3 லட்ச ரூபாய் மொய் வந்தது என்றால், தற்போது ஒரு லட்ச ரூபாய்தான் கிடைக்கிறது.

வரவு கட்டாய தேவை என்கிற நிலையில் இருப்பவர்கள் விழாவை நடத்துகின்றனர். மொய் வரவு செலவு கணக்கை பலரும் முடித்துக்கொள்கின்றனர். சிலர் ஏற்கனவே வந்த தொகையை மட்டும் மொய் செய்து விட்டு, ஒதுங்கிக் கொள்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக விழாக்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது,'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: