You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தன்பாலின ஈர்ப்புக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கிய பிரிட்டன்
தன்பாலின ஈர்ப்பு தொடர்பாக வரலாற்றில் குற்றவியல் தண்டனைகளுக்கு உள்ளான பலரும் மன்னிப்பு பெற தகுதியுடையவர்கள் என்று பிரிட்டன் அரசு கூறியுள்ளது.
இப்போது ஒழிக்கப்பட்டுள்ள சட்டங்களின் கீழ், தன்பாலின ஈர்ப்பு நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட்ட அல்லது எச்சரிக்கப்பட்ட எவரும் தங்களை அதிலிருந்து விடுவித்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.
தண்டனைகள் பதிவுகளில் இருந்து நீக்கப்பட்டு, தானாக மன்னிப்பு வழங்கப்படும்.
பிரிட்டனின் உள்துறைச் செயலர், "இந்தத் திருத்தப்பட்ட சட்டம், கடந்த காலத்தின் தவறுகளை சரிசெய்வதற்கான பாதையில் பயணிக்கும் என்று நம்புகிறேன்," எனக் கூறினார்.
2012-ம் ஆண்டு முதல், இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ளவர்கள் வரலாற்றில் தன்பாலின ஈர்ப்பு குறித்த எச்சரிக்கைகளையும் நம்பிக்கைகளையும் எதிர்த்து விண்ணப்பிக்க முடிகிறது.
2017-ம் ஆண்டில், "டியூரிங்'ஸ் சட்டம்" என்று அழைக்கப்படும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. போர்க் காலங்களில் எதிரிப் படைகளின் அடையாளக் குறியீடுகளை உடைத்து தகவல்களைக் கண்டறியும் கோட்பிரேக்கராகச் செயல்பட்ட ஆலன் டியூரிங், அவருடைய தன்பாலின ஈர்ப்பு நடவடிக்கைக்காக மிகவும் அநாகரீகமான முறையில் தண்டிக்கப்பட்டார். அவருடைய நினைவின் அடிப்படையில், இந்தச் சட்டத்திற்கு, அவருடைய பெயர் வழங்கப்பட்டது. இது, முன்னர் தன்பாலின பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு, மரணத்திற்குப் பின்னர், அது குற்றமாகக் கருதப்படாது என்று மன்னிப்பு வழங்கியது.
இருப்பினும், இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்ட குற்றங்கள் மிகவும் குறுகிய அளவிலானவை என்று பலரும் வாதிட்டனர்.
தற்போதைய சட்டம் ஒரு குறிப்பிட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முந்தைய ஒன்பது குற்றங்களை மட்டுமே உள்ளடக்கியது.
பிரச்சாரகர் லார்ட் கேஷ்மேன், "தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் இருபாலின ஈர்ப்பாளர்களாக இருந்த ஆண்களைச் சிக்க வைக்க இது பயன்படுத்தப்பட்டது. சில நேரங்களில் மற்றொரு வயது வந்த மனிதருடன் அரட்டை அடிப்பதைத் தவிர வேறொன்றும் செய்யாதபோதும் தண்டிக்கப்பட்டனர்," என்று கூறும் அவர், உண்மையான சட்டத்தில் அவை சேர்க்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், "இந்தத் சட்டம் நீடிக்கப்படாதது, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஓர் அவமானம்," என்று கூறினார், லார்ட் லெக்ஸ்டென்.
மன்னிப்பிற்கான தகுதியை விரிவுபடுத்துவதற்கு, காவல்துறை, குற்றம், தண்டனை மற்றும் நீதிமன்றங்கள் மசோதாவில் திருத்தம் கொண்டுவர அரசு உத்தேசித்துள்ளது.
எதிர்காலத்தில், முற்றிலும் தன்பாலின ஈர்ப்பு செயல்பாடுகளின் காரணமாகவே, யாரோ ஒருவர் மீது சுமத்தப்பட்ட குடிமைச் சமூக அல்லது ராணுவக் குற்றங்களையும் உள்ளடக்கியதாக இந்தச் சட்டம் இருக்கும்.
சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பு இறந்தவர்களுக்கு, அது நடைமுறைக்கு வந்த ஓர் ஆண்டுக்குள் அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு மன்னிக்கப்படுவதற்கு இந்தச் சட்டத்திருத்தம் உதவும்.
உள்துறை செயலர் ப்ரிதி படேல், "குற்றங்கள் ஒழிக்கப்படுவதோடு, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு இடையிலான ஒருமித்த செயல்பாட்டிற்காக தண்டிக்கப்பட்டவர்களின் தண்டனைகளும் புறக்கணிக்கப்படவேண்டும்," என்று கூறினார்.
"மன்னிப்பு மற்றும் குற்றத்தை நீக்குவது குறித்த சட்டத்தை விரிவுபடுத்துவது கடந்த கால தவறுகளைச் சரிசெய்வதற்கும் பாலினமற்ற பால் ஈர்ப்பு கொண்ட சமூகத்தின் (LGBT) உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பான இடங்களில் பிரிட்டன் ஒன்றாகும் என்பதை உறுதிபடுத்துவதற்கும் இது ஒரு பாதையாக அமையும் என்று நான் நம்புகிறேன்."
பிரசாரத்தில் பணியாற்றிய லார்ட் கேஷ்மேன், லார்ட் லெக்ஸ்டன் மற்றும் பேராசிரியர் பால் ஜான்சன் ஆகியோர் மன்னிப்பு பெறும் தகுதியை விரிவுபடுத்துவதை வரவேற்றனர்.
ஓர் அறிக்கையில், "பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற தன்பாலின ஈர்ப்பாளர்களின் நற்பெயரின் மீது அவர்கள் செலுத்திய பயங்கரமான கறைகளைத் துடைக்கவேண்டிய கடமை நாடாளுமன்றத்திற்கு உள்ளது," என்று அவர்கள் கூறியுள்ளனர்.
டேவிட் போன்னி, 1993-ம் ஆண்டில் ஆர்.ஏ.எஃப்-இல் பணியாற்றியபோது தன்பாலின ஈர்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். இங்கிலாந்தில் தன்பாலின ஈர்ப்பாளராக இருந்ததற்காக சிறைக்கு அனுப்பப்பட்ட கடைசி நபர் தாம் தான் என்று அவர் நினைக்கிறார்.
தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருப்பது 2000-ம் ஆண்டு வரை ஆயுதப்படைகளில் குற்றமாக இருந்தது.
போன்னி மேல்முறையீட்டில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு தன்னுடைய ஆறு மாத கால சிறை தண்டையில் நான்கு மாதங்களை கோல்செஸ்டரில் உள்ள ராணுவச் சிறையில் அனுபவித்தார்.
"அவர்களுக்குப் பதிவுகள் கிடைத்துள்ளன. நாங்கள் யார் என்பது அவர்களுக்குத் தெரியும்," என்று அவர் கூறினார்.
"எங்களில் 2,000 பேர் மட்டுமே இருக்கிறோம். இதை ஒன்றிரண்டு ஆண்டுகளில் சரிசெய்யவேண்டும்." என்றார்.
பிற செய்திகள்:
- 7 ஆண்டுகளில் 122 தற்கொலைகள்: சாதிய பாகுபாட்டில் சிக்கியுள்ளனவா மத்திய பல்கலைக்கழகங்கள்?
- 3 நாட்களில் 5,900 விமானங்கள் ரத்து - கொரோனாவால் தொடரும் பயணச் சிக்கல்
- சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு
- திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்