சென்னையில் மருத்துவர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் அறிகுறி: கொரோனா தடுப்பூசி செலுத்தியும் பாதிப்பு

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

சென்னையில் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்பட 39 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ''39 பேரும் தொற்றுக்கான அறிகுறிகள் அற்றவர்களாக உள்ளனர். தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியாக பாதிப்பு உள்ளது'' என்கிறார், சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணிராஜன். என்ன நடந்தது?

நோயாளி மூலம் பரவிய தொற்று

சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 17ஆம் தேதி நோயாளி ஒருவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு அந்த நோயாளிக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த நோயாளிக்கான அறுவை சிகிச்சையில் பங்கெடுத்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 39 பேருக்கு `எஸ் ஜீன்' எனப்படும் ஒமிக்ரான் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோருடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக கடந்த சனிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ``தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கடந்த ஒரு மாதமாக பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 143 பேரின் மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பினோம். அதில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தேசிய ஆய்வு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது குணமடைந்து வீட்டிற்குச் சென்றவர்களைத் தவிர, 22 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இன்னும் 40 மாதிரிகளின் முடிவுகள் வர வேண்டியுள்ளது" என்றார்.

எஸ் ஜீன் தொற்று

தொடர்ந்து ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையின் மருத்துவர்களுக்கு எஸ் ஜீன் கண்டறியப்பட்டது குறித்துப் பேசியவர், ``அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதல்நிலை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டதில் 54 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களின் மாதிரிகளை பரிசோதித்ததில் 39 பேருக்கு எஸ் ஜீன் தொற்று, அதாவது ஒமிக்ரான் அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அனைவரும் நலமாக உள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது' என்றார்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், ` இந்தியாவிலேயே கர்ப்பிணிகளுக்கு அதிக தடுப்பூசிகளை செலுத்திய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் மத்திய அரசின் உத்தரவுப்படி சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 முதல் 18 வயதினருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும். மேலும், ஒமிக்ரான் பாதிப்பு தடுப்பு நடவடிக்கையை ஆய்வு செய்வதற்கு நான்கு பேர் கொண்ட மத்தியக் குழுவினர் இன்று வரவுள்ளனர்' என்றார்.

உள்ளூரில் ஒமிக்ரான் உள்ளதா?

"சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 39 பேருக்கு ஒமிக்ரான் தொற்றுக்கான வாய்ப்பு (எஸ் ஜீன்) அதிகம் இருந்துள்ளது. இவர்களில் யாரும் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளவில்லை. அப்படியானால் உள்ளூரிலேயே ஒமிக்ரான் தொற்று இருக்கிறதா? அவர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களாக இருப்பதால் நிச்சயமாக கொரோனா தடுப்பூசிகளை செலுத்தியிருப்பார்கள். அதுதொடர்பான புள்ளிவிவரத்தை அரசு ஏன் வெளியிடவில்லை?'' எனக் கேள்வியெழுப்புகிறார், சூழலியலுக்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர் வீ.புகழேந்தி.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசியவர், ``பொதுவாக, மருத்துவர்கள் மத்தியில் கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு அதிகமாக இருக்கும். அப்படியானால், நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டபோது கொரோனா கட்டுப்பாட்டு விதிகளில் ஏதேனும் குளறுபடிகள் நடந்ததா என்பன உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. இத்தனைக்கும் அனைத்து மருத்துவ வசதிகளும் விழிப்புணர்வும் அதிகம் உள்ள மருத்துவமனையாக அரசு ராஜிவ்காந்தி பொதுமருத்துவமனை உள்ளது. அங்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? கொரோனா தடுப்பூசி செலுத்தினாலும் தொற்று வருகிறது என்றால், தடுப்பூசியின் தேவை அவசியம்தானா என்ற கேள்வியும் எழுகிறது" என்கிறார்.

ஒரேமாதிரியான பாதிப்புகள்

இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் தேரணிராஜன், ``தற்போது வரையில் 42 பேருக்கு எஸ் ஜீன் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனை ஓமிக்ரான் எனக் கூற முடியாது. ஒரு நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யும்போது தொற்று பரவியுள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் யாருக்கெல்லாம் அறிகுறிகள் உள்ளதோ அவர்கள் அனைவரையும் கண்டறியும் பணிகள் நடக்கின்றன. அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் கண்டறிந்துள்ளோம். இதில் 3,050 பேரை பரிசோதனை செய்து பார்த்ததில் 39 பேருக்கு தொற்று பாதித்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது" என்கிறார்.

``மருத்துவர்களும் செவிலியர்களும் நிச்சயமாக தடுப்பூசி செலுத்தியிருப்பார்கள். அவர்களையும் தொற்று தாக்குவதை எப்படி எடுத்துக் கொள்வது?" என்றோம். `` 39 பேரில் 22 பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள். 7 பேர் ஒரு தவணை தடுப்பூசி செலுத்தியவர்களாக உள்ளனர். ஆறு பேர் எந்தத் தடுப்பூசியும் போடாமல் உள்ளனர். அந்த 6 பேர் உள்பட 39 பேரும் அறிகுறிகள் அற்ற தொற்று பாதித்தவர்களாக உள்ளனர். இதன்மூலம் வைரஸின் தாக்கம் பெரிய அளவுக்கு இல்லை என்பது தெரிகிறது. தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் பாதிப்பு உள்ளது. யாருக்கும் ஆக்சிஜன் தேவைப்படவில்லை" என்கிறார்.

இரண்டரை நாள்தான் கணக்கு

``இந்தத் தொற்றானது, தொண்டைப் பகுதியில் மட்டுமே நிற்கிறது. அதைத் தாண்டி நுரையீரல் பகுதிக்கு செல்லவில்லை. அது மிக நல்ல விஷயம். அதேநேரத்தில் இதில் உள்ள கெட்ட விஷயம் என்னவென்றால் இது மிக எளிதாகவும் வேகமாவும் பரவுகிறது. ஓர் இருமலின் மூலம் எதிரில் உள்ளவர்களுக்கு உடனே வந்துவிடுகிறது. புத்தாண்டு உள்பட கொண்டாட்டங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். அதேநேரம், முகக்கவசம் அணிவதில் மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்," என்கிறார் மருத்துவர் தேரணிராஜன்.

தொடர்ந்து பேசுகையில், ``கொரோனா முதல் அலையின்போது பத்து முதல் 15 நாளில் தொற்று பரவும் என்ற கணக்கு இருந்தது. இரண்டாவது அலையின்போது ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குப் பரவுவது என்பது ஐந்து நாள்களாக குறைந்தது. தற்போது இரண்டரை நாளில் தொற்று வருகிறது. அதனால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முகக் கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது, தடுப்பூசி எடுத்துக் கொள்வது, காற்றோட்டமுள்ள இடங்களில் அமர்வது என மக்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்."

"குளிர்சாதன அறைகளில் கூட்டங்களை நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை பெருகினாலும் சமூக எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும். இதில், நிறைய பேருக்கு தொற்று வந்ததும் சென்றதும் தெரியாமல் இருக்கும். தொற்றால் பாதித்தவர்களின் தொடர்புகளைக் கண்டறிவதும் கண்காணிப்பதும் அவசியம் என உலக சுகாதார நிறுவனம் சொல்கிறது. அதனைக் கண்டறியாமல் இருந்தால் பரவல் அதிகரிக்கும்" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: