You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காணப்பட்ட அரிய 'நடக்கும் மீன்'
ஆஸ்திரேலியாவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்ட ஓர் அரிய "நடக்கும்" ஹேண்ட்ஃபிஷ் (Walking handfish) என்ற வகை மீன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக டாஸ்மேனியாவின் கடலில் காணப்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு ஹேண்ட்ஃபிஷ் என்ற இந்த மீன் வகையை, கடைசியாக 1999-ல் டாஸ்மேனியாவின் கடல்பகுதியில், கடலில் முக்குளிக்கும் ஒருவர் பார்த்தார். மேலும், இதுவரை நான்கு முறை மட்டுமே அது பார்க்கப்பட்டுள்ளது.
அந்த மீன் இனம் உயிர்த்திருக்க இயலாதோ என்ற அச்சத்தில், அதிகாரிகள் அதை சமீபத்தில் அழிந்து வரும் நிலையில் இருக்கும் உயிரினங்கள் பட்டியலில் வகைப்படுத்தினார்கள்.
ஆனால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆழ்கடல் காணொளிப் பதிவில் எடுக்கப்பட்ட படங்களில், அதை மீண்டும் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்போது கிடைத்துள்ள பதிவு, அவை கடலில் முன்னர் வாழ்ந்ததைவிட மிகவும் ஆழமான பகுதியில் இருப்பதைக் காட்டுகிறது.
கடுமையான அலைகளில் இருந்து புகலிடம் கொடுக்கக்கூடிய விரிகுடா பகுதிகளின் ஆழமற்ற கடல் பகுதியில் வாழக்கூடியவை என்றே விஞ்ஞானிகள் நினைத்தார்கள். ஆனால், அவை இப்போது தாஸ்மேனியாவின் தெற்கு கடற்கரையிலிருந்து 390 அடி (150மீட்டர்) ஆழத்தில் காணப்பட்டுள்ளது.
"இது ஓர் அற்புதமான கண்டுபிடிப்பு. இளஞ்சிவப்பு ஹேண்ட்ஃபிஷ் தொடர்ந்து உயிர் வாழும் என்ற நம்பிக்கையை இது வழங்குகிறது. ஏனெனில் அவை முன்பு நினைத்துக் கொண்டிருந்த நிலப்பரப்பைவிட பரந்த வாழ்விடத்தைக் கொண்டு பரவியிருக்கின்றன," என்று டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் இணை பேராசிரியரும் கடல் உயிரியலாளருமான நெவில் பார்ரெட் கூறினார்.
பெயருக்கு ஏற்றாற்போல், இந்த மீன்கள் பெரிய "கைகளைக்" கொண்டுள்ளன. அதைப் பயன்படுத்தி நீந்துவதோடு, கடல் தரையில் "நடக்கவும்" செய்கின்றன.
பிப்ரவரியில் டாஸ்மன் ஃபிராக்சர் கடல் பூங்காவில் (Tasman Fracture Marine Park), கடல் தரையில் கேமரா பொறியை வைத்து, அங்குள்ள பவளப்பாறைகள், இறால் மற்றும் மீன் வகைகளை அவருடைய குழுவினர் ஆய்வு செய்தார்கள்.
சுவிட்சர்லாந்தின் அளவுக்கு இருந்த பாதுகாக்கப்பட்ட பூங்காவில், பூமியின் மேலோட்டில் நீண்ட விரிசல் இருக்கும். அங்குள்ள அந்த விரிசல், கடல்வாழ் உயிரினங்கள் 4,000 மீட்டருக்கும் மேலான ஆழம் வரை வாழ்வதற்கு வழிவகுத்தது.
அக்டோபர் மாதத்தில் ஓர் ஆராய்ச்சி உதவியாளர் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பெரிய உயிரினங்கள் நிறைந்திருந்த கூட்டத்தின் நடுவே அந்த விசித்திரமான உயிரினத்தைக் கண்டார்.
"எங்கள் காணொளிகளில் ஒன்றை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, பவளப்பாறையின் விளிம்பில் ஒரு சிறிய மீன் தெரிந்தது," என்று பல்கலைக்கழகத்தின் அன்டார்டிக் மற்றும் கடல்சார் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆஷ்லீ பாஸ்டியான்சென் அதைப் பார்த்தது குறித்துப் பேசும்போது கூறினார்.
மேற்கொண்டு பேசியவர், "நான் கவனமாக உற்றுப் பார்த்தபோது, அதன் சிறிய கைகளைக் காணமுடிந்தது," என்றார்.
அந்தக் காணொளி, 15 சென்டிமீட்டர் அளவுக்கு இருக்கும் அந்த மீன், ஒரு பாறை இறால் தொந்தரவு செய்ததன் காரணமாக பாறையின் விளிம்பிலிருந்து வெளியே வருவதைக் காட்டியது.
அங்கு ஏற்பட்ட சலசலப்பை முதலில் கவனித்த அது, நீந்திச் செல்வதற்கு முன் அந்த இடத்தை ஒருமுறை நோட்டம் விடுகிறது.
"அப்படி நோட்டம் விட்ட நேரத்தில், அது எங்களுக்கொரு சிறந்த படத்தைக் கொடுத்துள்ளது. அந்தப் படத்தை வைத்து முழுமையாக அதன் இன வகைப்பாட்டை அடையாளம் காணவும் அளவைக் கணக்கிடவும் முடிந்தது" என்று இணை பேராசிரியர் பார்ரெட் ஏபிசியிடம் கூறியுள்ளார்.
"தற்போது, பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி, இத்தகைய அரிய உயிரினங்களுக்கு இந்த ஆழமான வாழ்விடங்கள் எவ்வளவு முக்கியம் என்று பார்க்க முடியும் என்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
இளஞ்சிவப்பு ஹேண்ட்ஃபிஷ் ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் தெற்கே உள்ள தாஸ்மேனியாவை சுற்றிக் காணப்படும் 14 வகையான ஹேண்ட்ஃபிஷ் மீன் வகைகளில் ஒன்றாகும்.
பிற செய்திகள்:
- ஸ்விகி அறிக்கை சுவாரசியம்: 6 கோடி பிரியாணி ஆர்டர்; அதிகபட்சம் ரூ.6 ஆயிரம் டிப்ஸ்
- ஒமிக்ரான் தொற்று: எந்தெந்த அறிகுறிகள் இருந்தால் கவனம் தேவைப்படும்?
- படுத்துக் கொண்டே விசாரணைக்கு ஆஜரான முன்னாள் காவல்துறை அதிகாரியை எச்சரித்த நீதிமன்றம்
- தியானென்மென் வெட்கக்கேடு ஸ்தூபி ஹாங்காங்கில் இரவோடு இரவாக அகற்றம்
- இளவரசி ஹயா, துபாய் ஷேக், ரூ.5,500 கோடிக்கு ஜீவனாம்சம் - மலைப்பூட்டும் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு
- தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு - என்ன காரணம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்