You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தியானென்மென் வெட்கக்கேடு ஸ்தூபி ஹாங்காங்கில் இரவோடு இரவாக அகற்றம்
ஹாங்காங் பல்கலைக்கழகத்திலிருந்து தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவு கூரும் புகழ்பெற்ற ஸ்தூபி அகற்றப்பட்டுள்ளது.
8 மீட்டர் உயரம் கொண்ட அந்த செம்பு ஸ்தூபி இரவோடு இரவாக கட்டுமானத் தொழிலாளர்களால் அகற்றப்பட்டுள்ளது.
1989ஆம் ஆண்டு ஜனநாயக ஆதரவாளர்கள், சீனப் படையினரால் கொல்லப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் இந்த ஸ்தூபி 'வெட்கக்கேட்டின் சின்னம்' என்று அழைக்கப்பட்டது.
உயிரற்ற உடல்கள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டுக் கிடப்பதாக காட்டும் இந்த சின்னம் சிலைபோல வடிக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுச் சின்னத்தை அகற்றும்படி கடந்த அக்டோபர் மாதம் ஆணையிட்டது ஹாங்காங் பல்கலைக்கழகம்.
அந்த ஆணையின்படி நேற்று இந்த சிலை அகற்றப்பட்டுள்ளது.
"இந்த முடிவு, வெளியிலிருந்து வந்த சட்ட அறிவுரை மற்றும் ஆபத்தை ஆராய்ந்து பல்கலைக்கழக நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது," என பல்கலைக்கழக அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும், "இந்த வலுவிழந்த சிலையால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் பல்கலைக்கழகம் கருத்தில் கொண்டது." என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டஜன் கணக்கான உயிரற்ற உடல்கள் மற்றும் வேதனையான முகங்கள் கொண்ட இந்த சிற்பம், பெய்ஜிங்கில் நடைபெற்ற தியானென்மென் சதுக்க படுகொலையை நினைவுகூரும் ஒருசில பொது நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இருந்தது.
தியானென்மென் படுகொலை குறித்த எந்த ஒரு பொது அங்கீகாரத்தையும் சீனா ஏற்பதில்லை.
ஹாங்காங்கில் தனது ஆட்சியை எதிர்ப்பவர்களை மெளனமாக்கி வருகிறது சீனா.
இந்த 'வெட்கக்கேட்டின் சின்னம்' நெதர்லாந்தை சேர்ந்த சிற்பி ஜென்ஸ் கால்ஷியோட்டால் செதுக்கப்பட்டது. இது ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் கடந்த 24 வருடங்களாக இருந்து வருகிறது.
இந்த சிலை அகற்றப்படுவது 'மிருதத்தனமாக ஒரு செயல்' என்றும் இது 'கல்லறையை அழிப்பதற்கு சமம்' என்றும் ஜென்ஸ் தெரிவித்துள்ளார்.
"இந்த சிலை உயிரிழந்தவர்களை பற்றியது. 1989ஆம் ஆண்டு பெய்ஜிங்கில் உயிரிழந்தவர்களை நினைவுகூர நிறுவப்பட்டது. எனவே இம்மாதியாக இந்த சிலையை அழிப்பது, கல்லறைக்கு சென்று அங்குள்ள கற்களை அழிப்பதற்கு சமம்" என பிபிசியின் நியூஸ் அவர் நிகழ்ச்சியில் ஜென்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்து இழப்பீடு கோருவது குறித்து யோசிக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த சிலை அகற்றப்படும்போது அந்த பகுதியை பிளாஸ்டிக் தடுப்புகளை கொண்டு பல்கலைக்கழக அதிகாரிகள் மூடிவிட்டனர்.
செய்தியாளர்கள் அங்கு சென்று படம் பிடிக்கவும் பாதுகாப்பு அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
இந்த சிலை பத்திரப்படுத்தி வைக்கப்படும் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
1989ஆம் ஆண்டு சீனாவின் பெய்ஜிங் நகரில் அமைந்துள்ள தியானென்மென் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் சீனப் படையால் கொல்லப்பட்டனர்.
சீனாவில் தியானென்மென் குறித்து பேச தடை உள்ளது. ஆனால் ஹாங்காங்கில் ஆண்டுதோறும் இது நினைவுகூரப்பட்டது. இருப்பினும் 2020ஆம் ஆண்டு முதல் கோவிட் கட்டுப்பாடுகளை காட்டி அதற்கு தடை விதிக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தடை செய்யப்பட்ட நினைவஞ்சலி கூட்டத்தில் பங்கு கொண்ட காரணத்தில் 9 ஜனநாயக ஆதரவு செயல்பாட்டாளர்கள் 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தியானென்மென் சதுக்க படுகொலை
முப்பது ஆண்டுகளுக்கு முன் சீனத் தலைநகர் பெய்ஜிங்கின் தியானென்மென் சதுக்கம் ஒரு பெரும் போராட்டத்தின் நிகழிடம் ஆனது. ஆனால் அந்த போராட்டம் சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களால் நசுக்கப்பட்டது.
1980களில் சீனாவில் பெரிய மாற்றங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன.
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி சில தனியார் நிறுவனங்களுக்கும், வெளிநாட்டு முதலீடுகளுக்கும் அனுமதி வழங்க தொடங்கியது.
சீனத் தலைவர் டெங் ஷியோபிங், பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்தலாம் என நம்பிக்கைக் கொண்டிருந்தார்.
இருப்பினும் இந்த நடவடிக்கை ஊழல்களுக்கு வித்திட்டது. அதே நேரம் அரசியலில் வெளிப்படைத் தன்மை தேவை என்ற கோரிக்கையையும் இந்த சீர்திருத்தங்கள் உடன் கொண்டுவந்தன.
வேகமாக மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஒரு தரப்பும், நாட்டை கடுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்து கொள்ள வேண்டும் என்று கூறும் கடும்போக்குவாதிகள் மறு தரப்பும் என சீன கம்யூனிஸ்ட் கட்சியிலேயே இருவிதமான போக்குகள் முகம் காட்டின.
1980களில் இடைக்காலத்தில் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம் ஒன்று தொடங்கியது.
அந்த போராட்டத்தில் வெளிநாட்டில் வாழ்ந்தவர்களும், புதிய யோசனைகள் மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துக்குப் பழகியவர்களும் கலந்து கொண்டனர்.
1989 ஆண்டின் வசந்த காலத்தில், மேம்பட்ட அரசியல் உரிமைகள் கோரி போராட்ட மேகம் சூல் கொண்டது.
முக்கிய அரசியல் தலைவரும், பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஆதரித்தவருமான ஹு யோபாங்கின் இறப்பு போராட்டக்காரர்களை தூண்டியது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசியல் எதிரிகளால் கட்சியின் உயர் பதவியிலிருந்து அவர் ஏற்கனவே நீக்கப்பட்டிருந்தார்.
ஏப்ரல் மாதம் ஹுவின் இறுதிச் சடங்கின்போது ஆயிரக்கணக்கானோர் கூடினர். அவர்கள் பேச்சுரிமை கோரினர். கட்டுப்பாடுகளைத் தளர்த்தவும் வலியுறுத்தினர்.
அதற்கு அடுத்த வாரம் போராட்டக்காரர்கள் தியானென்மென் சதுக்கத்தில் கூடினர். இந்தப் போராட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் வரை கூடியதாக கணிக்கப்படுகிறது.
இந்த சதுக்கம் பெய்ஜிங்கின் புகழ்பெற்ற இடங்களில் ஒன்று.
பெய்ஜிங்கில் மே மாத இறுதியில் பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்தது.
ஜூன் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் தியானென்மென் சதுக்கத்தை நோக்கி படைகள் சென்றன. அந்தப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; போராட்டக்காரர்களை கைது செய்தனர்.
பிற செய்திகள்:
- சிவிங்கிப் புலிகள்: ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியக் காடுகளுக்கு பாய்ந்து வரப்போகின்றனவா?
- இளவரசி ஹயா, துபாய் ஷேக், ரூ.5,500 கோடிக்கு ஜீவனாம்சம் - மலைப்பூட்டும் விவாகரத்து வழக்கின் தீர்ப்பு
- தொல்காப்பியம்: இந்தி, கன்னடத்தில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்ட இந்திய அரசு - என்ன காரணம்?
- பழி தீர்க்கும் கொலைகள்: அடிப்படைவாத அரசியலை நோக்கிச் செல்கிறதா கேரளா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்