You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனாவால் விமானப் பயணங்கள் பாதிப்பு: 3 நாள்களில் 5,900 விமானங்கள் ரத்து
உலகம் முழுக்க சுமார் 1,500க்கும் மேற்பட்ட விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை முன்னிட்டு பயணிக்க திட்டமிருந்த பல்வேறு பயணிகளையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
கிறிஸ்துமசுக்கு முந்தைய நாள், கிறிஸ்துமஸ், கிறிஸ்துமசுக்கு அடுத்த நாள் (டிசம்பர் 24,25, 26) ஆகிய மூன்று நாட்களில் சுமார் 5,900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக 'ஃப்ளைட் அவேர்' என்கிற விமானம் தொடர்பான விவரங்களைப் வெளியிடும் வலைதளத்தின் தரவுகள் கூறுகின்றன.
இதனால் சீனா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த விமான சேவை நிறுவனங்கள்தான் அதிக அளவில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன. திங்கட்கிழமையும் இது போல விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுக்க கொரோனா வைரசின் ஒமிக்ரான் திரிபு பரவி வருவதால் விமான சேவையை நடத்த போதுமான ஆட்கள் கிடைக்கவில்லை என விமான சேவை நிறுவனங்கள் கூறுகின்றன.
விமான நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்படுவது அல்லது பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்புடைய காரணத்தால் தனிமைப்படுத்திக் கொள்வது அல்லது பல்வேறு விதிமுறைகள் காரணமாக தனிமைப்படுத்திக் கொள்வது போன்ற பிரச்சனைகளால், போதிய அளவில் விமான சேவையை தொடர்ந்து நடத்த ஊழியர்கள் கிடைக்கவில்லை. அதன் விளைவாக விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
கொரோனாவின் மற்ற திரிபுகளை விட ஒமிக்ரான் திரிபின் பாதிப்புகள் லேசாக இருப்பதாகக் கூறிய பிறகும், ஒமிக்ரான் திரிபின் பரவல் எண்ணிக்கை குறித்து விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர்.
அமெரிக்காவுக்குச் செல்லும் அல்லது அமெரிக்காவிலிருந்து புறப்படும் 450 விமானங்கள், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் ரத்தாகியுள்ளதாக ஃப்ளைட் அவேர் நிறுவன தரவு கூறுகிறது. அதிலும் டெல்டா, யுனைடெட், ஜெட் ப்ளூ ஆகிய நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒமிக்ரானால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது விமான ஊழியர் குழுவை நேரடியாக பாதிக்கும், விமானத்தை இயக்கும் பணியில் இருப்பவர்களையும் பாதிக்கும் என யுனைடெட் விமான சேவை நிறுவனம் முன்பே எச்சரித்திருந்தது. மேலும், ரத்தான விமானங்களில் பயணம் மேற்கொள்ளவிருக்கும் பயணிகள், விமான நிலையங்களுக்கு வருவதற்கு முன்பே அவர்களை அழைத்து பேசி வருவதாகவும் கூறியுள்ளது யுனைடெட் நிறுவனம்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் தற்போது ஒமிக்ரானால் பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஞாயிற்றுக்கிழமை அதிகம் பாதிக்கப்பட்ட விமான சேவை நிறுவனம் என்றால் அது சீனாவைச் சேர்ந்த 'சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்' என்கிற சீன விமான சேவை நிறுவனம்தான். ஒரே நாளில் 350க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சீனாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஷியான் நகரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 100 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்நகரத்தில் வசிக்கும் 1.3 கோடி பேருக்கும் வீட்டிலேயே இருக்குமாறு சமீபத்தில் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தது நினைவுகூரத்தக்கது.
லண்டன் நகரத்தில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 56 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஒட்டுமொத்தமாக உலக அளவில் வெள்ளிக்கிழமை முதல் கிட்டத்தட்ட 5,700 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதுவரை கிட்டத்தட்ட 54 லட்சம் மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் என அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் கூறுகின்றன. இதுவரை உலக அளவில் 27.9 கோடி பேருக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- 1933ல் கிருமி ஆயுதத்தை பயன்படுத்தி இந்தியாவில் நடந்த கொலை - உலகம் கவனித்த வழக்கு
- திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை என இளம்பெண்ணை கொலை செய்த மூன்று திருமணமான நபர்
- "இந்தியைத் திணித்தால் கட்டாயம் எதிர்ப்போம். அதில் சமரசமே கிடையாது": அண்ணாமலை
- ஒமிக்ரான், தடுப்பூசி பற்றி நரேந்திர மோதி ஆற்றிய உரை: 10 முக்கிய தகவல்கள்
- ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காணப்பட்ட அரிய 'நடக்கும் மீன்'
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்