You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விண்வெளியில் ஜெஃப் பெசோஸ்: 11 நிமிட பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம்
- எழுதியவர், பால் ரின்கன்
- பதவி, அறிவியல் ஆசிரியர், பிபிசி செய்தி இணையதளம்
உலக முன்னணி கோடீஸ்வர்களில் ஒருவரான ஜெஃப் பெசோஸ், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட்டில் விண்வெளி பயணம் மேற்கொண்டார். 11 நிமிடங்கள் நீடித்த இந்த பயணத்தை முடித்துக் கொண்டு அவரும் அவருடன் பயணம் செய்த மேலும் மூவரும் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளனர். துல்லியமாக சொல்வதென்றால் இவர்கள் 10 நிமிடங்கள் 10 நொடிகள் பயணம் செய்துள்ளனர்.
இந்த பயணத்தில் ஜெஃப் பெசோஸின் சகோதரர் மார்க் பெசோஸ், 1960களில் விண்வெளி போட்டிக்கான பயிற்சியில் முன்னோடி பங்கேற்பாளராக அறியப்படும் 82 வயது வேலி ஃபங்க், 18 வயது மாணவர் ஆலிவர் டேமென் ஆகியோரும் ஜெஃப் பெசோஸுடன் சென்றனர்.
மிகப்பெரிய ஜன்னல்களுடன் கூடிய விண்கலன் பூமியில் இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. அதில் இருந்தபடி பூமியின் கண்கொள்ளா காட்சியை அனுபவித்த இந்த குழுவினர் பின்னர் பூமிக்கு திரும்பினர்.
நியூ ஷெப்பர்ட் ராக்கெட், பெசோஸின் சொந்த நிறுவனமான ப்ளூ ஆரிஜின் உடைய தயாரிப்பாகும். எதிர்கால விண்வெளி சுற்றுலாவை நோக்கமாகக் கொண்டு இந்த விண்கலன் மற்றும் மறுபயன்பாடுக்கு உகந்த ராக்கெட் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் முதலாவது பயணத்தில் ஜெஃப் பெசோஸுடன் பயணம் செய்தவர்களில் மிக அதிக வயதுடையவராக வேலி ஃபங்கும், மிகவும் இளையவராக 18 வயது மாணவர் ஓலிவர் டேமென்னும் கருதப்படுகிறார்கள்.
டெக்சாஸின் வான் ஹார்னுக்கு உருகே உள்ள தனியார் ராக்கெட் ஏவுதளத்தில் பிரிட்டன் நேரப்படி பிற்பகல் 2 மணி 12 நிமிடங்களுக்கு இவர்களின் விண்கலனை சுமந்தவாறு ராக்கெட் விண்ணை நோக்கி புறப்பட்டது.
இந்த விண்கலன் வெற்றிகரமாக பூமியில் தரையிறங்கியதும், "ஆஸ்ட்ரனாட் பெசோஸ்: இதுவரை இல்லாத மிகச்சிறந்த தினம் இது" என்று அழைத்து பெசோஸ் பெருமிதப்பட்டுக் கொண்டார்.
முன்னதாக, பூமியில் இருந்து இரண்டு நிமிடங்கள் பயணம் செய்த பிறகு, இவர்களை சுமந்து சென்ற ராக்கெட் விண்கலனில் இருந்து பிரிந்தது. பிறகு மேல்நோக்கி கர்மன் கோடு என்று அழைக்கப்படும் பூமியில் இருந்து மேல்நோக்கி 100 கி.மீட்டர் தூரத்தில் உள்ள விண்வெளி எல்லையாக பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தை நோக்கி நால்வர் குழுவுடன் விண்கலன் முன்னேறியது.
அங்கு எடையற்ற மிதவை நிலையை சுமார் நான்கு நிமிடங்களுக்கு பெசோஸ் உள்ளிட்ட நால்வரும் அனுபவித்தனர். தங்களுடைய இருக்கைகளில் இருந்து பெல்டை கழற்றி விட்டு கலனுக்குள்ளேயே மிதந்த நால்வரும் பூமிக்கிரகத்தின் அழகை ஜன்னல் வழியே கண்டு ரசித்தனர்.
கர்மன் கோடு பகுதியை கடக்கும்போது, நால்வரும் உற்சாகத்துள்ளலுடன் குரல் கொடுத்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
82 வயதான வேலி ஃபங்க், "ஓ என்ன அதிசயம், பூமியை பாருங்கள்," என்று தான் கண்ட அனுபவத்தை விவரித்தார்.
விண்வெளி பயணத்துக்கு ஆயத்தமாகும் முன்பு, புவிஈர்ப்பு இல்லாத நிலையில், குட்டிக்கரணம் அடிக்கலாம் என்று உத்தேசித்திருந்ததாக அவர் கூறினார்.
1960களில், மெர்குரி 13 என்ற விண்வெளி வீராங்கனைகள் குழுவில் ஒருவராக ஃபங்க் இடம்பெற்றிருந்தார். விண்வெளி ஆண் வீரர்களுக்கு இணையான பயிற்சியும் பரிசோதனைகளும் இந்த குழுவினருக்கு வழங்கப்பட்டது. ஆனால், விண்வெளிக்கு மட்டுமே இந்த குழுவினர் பயணம் மேற்கொள்ளவில்லை. அவரது நீங்காத அந்த ஆசை, 61 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது நிறைவேறியிருக்கிறது.
"வேலி ஃபங்க், மெர்குரி 13 குழுவில் தன்னுடன் பயிற்சி எடுத்துக் கொண்ட வீரர்களை விட மிகச்சிறப்பாக பரிணமித்ததற்கான உத்தரவாதத்தை என்னால் தர முடிந்தது. அதை இன்று அவர் கண்கூடாக நிரூபித்திருக்கிறார்," என்றார் ஜெஃப் பெசோஸ்.
விண்வெளியை அடைந்தபோது இவர்களின் விண்கலன் பூமியில் இருந்து 106 கி.மீ தூரத்தில் அதாவது மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் அடி உயரத்தில் பறந்தது. பின்னர் பூமியை நோக்கி இறங்கிய விண்கலன், பாலைவனத்தில் பாரசூட் உதவியுடன் தரையிறங்கியது.
தரையைத் தொட்டதும் ஜெஃப் பெசோஸ், "நம்ப முடியாத வகையில் நான் நலமாக இருக்கிறேன்," என்று உற்சாகத்துடன் கூறினார்.
ஜெஃப் பெசோஸ், சமீபத்தில்தான் அமேசான் என்ற மின் வணிக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார். ப்ளூ ஆரிஜின் என்ற தமது கனவுத் திட்டமான விண்வெளி சுற்றுலாவுக்கு ராக்கெட் அனுப்பும் பணியில் இனி முழு கவனம் செலுத்தப்போவதாக அப்போது பெசோஸ் கூறியிருந்தார்.
இவரது சகோதரர் மார்க் பெசோஸுக்கு 53 வயதாகிறது. இவர் நியூயார்க்கைச் சேர்ந்த ராபின் ஹுட் என்ற தொண்டு அமைப்பின் மூத்த துணைத் தலைவராக இருக்கிறார்.
இந்த குழுவினருடன் நான்காவதாக பயணம் செய்தவர் 18 வயதே ஆன ஆலிவர் டேமென். சோமர்செட் கேப்பிடல் பார்ட்னர்ஸ் என்ற டச்சு நிதி முதலீட்டு நிறுவன உரிமையாளர் ஜோஸ் டேமெனின் மகன் இவர்.
ஆரம்பத்தில் சுற்றுலா விண்கலனில் பயணம் செய்ய நடத்தப்பட்ட ஏலத்தில் இரண்டாவதாக விண்வெளிக்கு புறப்படும் விண்கலனில் இடம்பெறவே ஆலிவர் பொது ஏலத்தில் தேர்வாகியிருந்தார். இதற்காக அவர் 28 மில்லியன் டாலர்கள் அளவுக்கு தொகை செலுத்தியிருந்தார். ஆனால், இரண்டாவது விண்கல பயணத்துக்கான புறப்பாடு அட்டவணை பிரச்னை காரணமாக, முதலாவது பயணத்திலேயே அவர் இடம்பிடித்து விண்வெளியைத் தொட்டு விட்டு பூமிக்குத் திரும்பிய பதின்ம வயது இளைஞராகியிருக்கிறார்.
நியூ ஷெப்பர்ட்: மறுபயன்பாடுக்கு உகந்த ராக்கெட் வடிவமைப்பு
ப்ளூ ஆறிஜின் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் இந்த மாத தொடக்கத்தில் தமது சொந்த தயாரிப்பான விர்ஜின் காலக்டிக் ராக்கெட்டில் விண்வளி சென்று திரும்பிய ரிச்சர்ட் பிரான்சன் போன்றோர், விண்வெளி பயண திட்டத்துக்காக செலவிடும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை கொரோனா பெருந்தொற்று போன்ற பல பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று சமூக ஊடகங்களில் ஒரு பிரிவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதில் ரிச்சர்ட் பிரான்சன் அளித்துள்ள பதிலில், "எங்களை விமர்சிப்பவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், இந்த பூமிக்கு விண்வெளி தரும் நன்மை பற்றிய புரிதலற்றவர்களாக விமர்சிப்பவர்கள் இருப்பதாகவே நான் கருதுகிறேன்," என்று கூறினார்.
"செயற்கைக்கோள் மழைக்காடுகள் பாதுகாப்பு, உணவு விநியோக கண்காணிப்பு, பருவநிலை மாற்ற விளைவு போன்றவற்றை கண்காணிக்க பயன்படுகின்றன. அந்த வகையில், விண்வெளிக்கு சென்று வரக்கூடிய மேலதிக விண்கலன்கள் நமக்கு அவசியம். அவற்றின் எண்ணிக்கை குறைவாக மட்டும் இருந்து விடக்கூடாது," என்று ரிச்சர்ட் பிரான்சன் தெரிவித்தார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு விண்வெளி சுற்றுலா பயண திட்டத்தை செயல்படுத்த ப்ளூ ஆரிஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதில் பயணம் செய்ய எவ்வளவு கட்டணம் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில், இந்த நிறுவனத்திடம் இரண்டு ராக்கெட்டுகளும், விண்கலனும் உள்ளன. அதில் ஒரு ராக்கெட் சுற்றுலா பயணிகள் சேவைக்கும், மற்றொன்று விண்வெளி ஆய்வுப் பணிக்காகவும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- சிங்கப்பூர் பள்ளியில் 13 வயது சிறுவன் கொலை - 16 வயது சிறுவன் கைது
- '12,000 ஆண்டுகள் இந்திய பண்பாட்டின் வரலாறை ஆராயும் குழு மாற்றி அமைக்கப்படும்'
- நிலவில் மனிதன் கால் பாதித்தது உண்மையில் நிகழ்ந்ததா? எல்லாம் நாடகமா?
- Monkey B Virus: சீனாவில் ஒருவர் பலி - அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் என்ன?
- ஆபாசப் படம் எடுத்ததாக நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்