You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது: ஆபாசப் படம் எடுத்ததாகப் புகார்
இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் கைது
ஆபாசப் படங்களைத் தயாரித்து அதை மொபைல் ஆப்களில் வெளியிட்டதாகக் கூறி, பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 11 பேரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது என இந்துஸ்தான டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
45 வயதான ராஜ் குந்த்ரா இந்த குற்றத்தில் முக்கிய பங்காற்றியிருப்பதாகவும், அதற்கான அனைத்து ஆதாரங்களும் காவல்துறையிடம் இருப்பதாகவும் மும்பை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம், ஐபிசி 420, 292, 293, பெண்களைத் தவறாகச் சித்தரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆபாசப் படங்களைத் தயாரித்து அதை சில ஆப்களில் வழியாக வெளியிட்டது தொடர்பாகக் கடந்த பிப்ரவரி மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் தொடர்ச்சியாக ராஜ் குந்த்ராவை காவல்துறை நேற்று கைது செய்தது.
வெப் சீரியஸ் மற்றும் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாகக் கூறி அழைத்து, ஆபாசப் படத்தில் நடிக்கும்படி கட்டாயப்படுத்தியதாக ஒரு பெண் ராஜ் குந்த்ராவுக்கு எதிராகக் கடந்த பிப்ரவரி மாதம் மும்பை காவல்துறையில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து, மும்பையின் மாத் பகுதியில் உள்ள பங்களாவைக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை செய்து, ஐந்து பேரைக் கைது செய்தனர்.
ஆபாசப் படத்தின் இயக்குநர் என கருதப்படும் ரோவா கான், புகைப்பட கலைஞர் மோனு சர்மா, கலை இயக்குநர் பிரதிபா நலாவடே ஆகியோருடன் அரிஷ் ஷேக் மற்றும் பானு தாக்கூர் என்ற இரண்டு நடிகர்களும் இந்த சோதனையின் போது கைது செய்யப்பட்டனர்.
பெகாசஸ் சர்ச்சை: ``இந்திய ஜனநாயகத்திற்குத் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது``
மத்திய அமைச்சர்கள், பத்திரிக்கையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோரின் செல்போன் மென்பொருள் மூலம் வேவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் இந்திய ஜனநாயகத்திற்குத் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேலின் பெகாசஸ் என்ற மென்பொருள் மூலம் இந்தியாவில் பலர் வேவு பார்க்கப்பட்டதாகச் சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியானது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று(திங்கள்கிழமை) தொடங்கிய நிலையில், இந்த விவகாரம் அமளியை ஏற்படுத்தியது.
இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,`` இந்தியாவில் அனுமதியில்லாத நபர்கள் மூலம் எந்தவித சட்டவிரோத கண்காணிப்பும் நடைபெறவில்லை. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஜனநாயகத்திற்குத் தீங்கிழைக்கும் நோக்கத்துடன் இது வெளியிடப்பட்டுள்ளது.`` என கூறியுள்ளார்.
சசிகலா யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை- எடப்பாடி பழனிச்சாமி
சசிகலா யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி தெரிவித்துள்ளார் என இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.
``சசிகலாவுக்கும், அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏற்கெனவே பலமுறை அவர் தவறான தகவல்களைத் தெரிவித்து உள்ளார். எம்ஜிஆருக்கு அரசியல் ஆலோசனை வழங்கியதாக கூறிய சசிகலா, எத்தனை பொய்யான தகவல்களைப் பரப்பினாலும் அதிமுகவை அழித்துவிட முடியாது.`` என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
மேலும் அவர்,``சசிகலா அதிமுகவில் இருந்த காலகட்டத்திலும் தேர்தலில் கட்சி தோல்வியைச் சந்தித்துள்ளது. அவர் யாருக்கும் ஆலோசகராக இருந்ததில்லை. உள்ளாட்சித் தேர்தல் வரவுள்ளது. அதிமுக தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது`` என்றார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்கிறாரா?-வெளியான ஆடியோ
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்றிவிட்டு அடுத்த சட்டசபை தேர்தலில் புதியவரைக் களமிறக்க பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. எடியூரப்பா ராஜினாமா குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா தலைவர் நளின்குமார் கட்டீல் கட்சி நிர்வாகி ஒருவருடன் செல்போனில் பேசிய உரையாடல் பதிவு (ஆடியோ) வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், "முதல்-மந்திரி எடியூரப்பா பதவி விலகுகிறார். டெல்லியில் இருப்பவர் (அதாவது மறைமுகமாக மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷியை குறிப்பிட்டார்.) புதிய முதல்-மந்திரி ஆகிறார். மூத்த மந்திரிகளான ஈசுவரப்பா, ஜெகதீஷ்ஷெட்டர் ஆகியோரின் காலமும் முடிவுக்கு வருகிறது. இதை யாரிடமும் கூற வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார். துளு மொழியில் இடம் பெற்றுள்ள இந்த ஆடியோ சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பரவியது. ஆனால் இதனை நளின்குமார் கட்டீல் மறுத்துள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்