எல்.முருகனின் மறுபக்கம்: "புடிச்ச வேலைய நாங்க செய்யறோம்"- பெற்றோர் நெகிழ்ச்சிப்பேட்டி

    • எழுதியவர், ஏ.எம்.சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

எங்க மகன் மத்திய அமைச்சரானது சந்தோஷம்தான். நானும், எனது மனைவியும் விவசாய வேலை செய்து வாழ்கிறோம். அதுதான் எங்களுக்குப் பெருமை, என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தந்தை. லோகநாதன்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சமீபத்தில் அவர் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பு அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் மற்றும் கட்சியில் எஸ்சி, எஸ்டி பிரிவு தேசிய தலைவர் போன்ற பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். எனினும் இவரது தந்தை லோகநாதன், தாய் வருதம்மாள் ஆகியோர் இன்றளவும் விவசாய கூலி வேலை செய்தே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

உற்சாகத்தில் கோனூர் கிராமம்

எல். முருகனின் பெற்றோரைப் பற்றி கேள்விப்பட்டு அவர்களை நாமக்கல் மாவட்டம் கோனூர் கிராமத்திற்கு பிபிசி தமிழுக்காக சென்றோம்.

கோனூரில் அருந்ததியர் வீதியில் இருக்கிறது, முருகனின் பெற்றோர் வீடு. ஹாலோபிளாக் கற்கள் கொண்டு எழுப்பப்பட்ட சுவர்களின் மீது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளில் கூரை வேய்ந்திருக்கிறார்கள். அங்கே வாசலில் அமர்ந்திருந்த முருகனின் தாயார் வருதம்மாளிடம் பேசினோம்.

"தம்பி நேரமாச்சி நான் வயலுக்கு போறேன், நீங்க அங்க வந்துடுங்கன்னு சொல்லி விட்டு கிளம்பினார். அவரை பின்தொடர்ந்து கீழ்சாத்தம்பூர் பழனிசாமியின் வயல் வெளியை அடைந்தோம்.

அங்கே சக தொழிலாளர்களுடன் களையெடுத்து கொண்டிருந்தார் முருகனின் தாயார். வேலைக்கு இடையே நம்மிடையே பேசினார் வருதம்மாள்.

"முருகன் சின்ன வயசிலேயே நல்ல படிப்பார். மத்தவங்களுக்கு உதவுனும் என்கிற குணமும் நிறைய உண்டு அதே போல கட்சிக்கு போனப்பவும் நாங்க தடுக்கல. உனக்கு எது விருப்பமோ அதை செய்யுன்னு சொல்லிட்டோம். அப்புறம் உங்க மகன் தலைவராயிட்டாருன்னு சொன்னாங்க, சந்தோஷமா இருந்தது. சின்ன வயசுல இருந்து அவர் யார் கிட்டேயும் கெட்ட பெயரே வாங்கியதில்லை. அதனால் தான் இந்த அளவுக்கு வளர்ந்து வந்திருக்கிறார். இதுக்கு மேலயும் மக்களுக்கு அவரு நல்லது செய்வார்," என்றார் வருதம்மாள்.

பேசிக்கொண்டு இருக்கும் போதே அமைச்சரின் தந்தை லோகநாதன் மண்வெட்டியுடன் சைக்கிளில் வந்தவர், நேரத்தை வீணாக்காமல் தோட்டத்தில் இருந்த மாங்கன்று ஒன்றுக்கு சுற்றிலும் பள்ளம் வெட்டி நீர் பாய்ச்சும் வேலையில் ஈடுபட்டார்.

"சொந்த உழைப்பு வாழ்க்கையே மகிழ்ச்சி"

இடையே நம்மிடையே பேச்சுக் கொடுத்த அவர், "எங்களுக்கு இரு மகன்கள். மூத்தவர் முருகன். இளையவர் ராமசாமி. இளையவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். பத்தாம் வகுப்பு வரை முருகன் இங்க கோனூரில் தான் படிச்சார். அப்புறம் பரமத்தி போய் படிச்சாரு. திடீரென நான் வக்கீலுக்குப் படிக்க சென்னை போறேன்னார்.

எங்களால் முடிந்த பண உதவியை பண்றோம். நீ விரும்புவதை படிப்பான்னு சொன்னேன். அவருக்கு படிப்பு மேல அவ்வளவு ஆசை. பிறகு அவர் சென்னைக்கு போய் குடும்ப கஷ்டத்தை உணர்ந்து நல்லா படிச்சார். படிச்சு முடிச்சதும் அங்கேயே தங்கி, இருந்தார். அவருக்கு கலையரசியை திருமணம் செஞ்சு வச்சேன். மருமகள் அரசு மருத்துவராக உள்ளார் அவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். பாஜக மாநில தலைவராக இருந்தார். இப்போது மத்திய அமைச்சராகியிருக்காரு. அவருடைய வளர்ச்சி எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார் லோகநாதன்.

முருகன் அடிக்கடி உங்களை சந்திப்பாரா என்று கேட்டோம்.

"அடிக்கடி எங்களை வந்து பார்த்து விட்டுப் போவார். சென்னையில் தன்னுடனே வந்து தங்கிவிடும்படி பலமுறை அழைத்தார். எங்களுக்கு அந்த மாதிரி பழக்கமில்லை. அங்கே போனால், வீட்டிற்குள் அடைபட்டிருக்க வேண்டும் நாங்க காடு கழனின்னு வாழ்துட்டோம். அதனால் அங்கு போனால் ரெண்டு. மூணு நாள் தன இருப்போம். உடனே கோனுருக்கு திரும்பிடுவோம். அவ்வப்போது சென்று மகன், மருமகள்,பேரன்களை பார்த்துவிட்டு வருவோம். அமைச்சர் ஆயிட்டேன்ன்னு போன் பண்ணி அவர் சொன்னப்ப ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவர் உழைப்புக்கு இன்னும் பெரிய, பெரிய பதவிக்கு வருவார். ஆனால் என் மனைவியும் நானும் இன்னும் விவசாய வேலைதான் செய்கிறோம். அவர் நல்லா இருக்கணும்னுதான் நாங்க பாடுபட்டோம். எங்க கண்ணுக்கு முன்னாடி அவர் நல்ல நிலைமைக்கு வந்துக்கிட்டு இருக்கார். அதைப் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. பெத்தவங்களுக்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும். முருகன் அவர் வாழ்க்கையை வாழுறாரு. நாங்க எங்க வாழ்க்கையை வாழ்கிறோம்," என்கிறார் லோகநாதன்.

அடுத்து நாம் கீழ்சாத்தம்பூர் பழனிசாமியிடம் பேசினோம்.

முருகன் பாஜக மாநில தலைவர் ஆனதற்கு பிறகு ரெண்டு மூணு தடவை நான் அவரை சந்தித்து இருக்கிறேன் அவர் பழையபடிதான் இருக்கிறார். படிக்கும் போதே அவரு கிட்ட எந்த பந்தாவும் இருக்காது. இப்பவும் அதே போல தான் இருக்கிறார். முருகனின் அப்பா லோகநாதனும் அம்மாவும் என் வயலில் வேலை செய்வார்கள். சில நேரங்களில் மற்ற வயல்களுக்கும் வேலைக்கு போவார்கள். அவங்க என் குடும்ப நண்பர்கள் போலத்தான். அவர்களிடம் இன்னும் நீங்க ஏன் வேலைக்குப் போகணும்? என்று கேட்டேன். அதற்கு அவர், நான் வேலைக்குப் போறது பணத்துக்காக மட்டும் இல்லை. இது உழைத்த உடம்பு, வேலை பார்க்காமல் என்னால் சும்மா இருக்க முடியாது என்பார். எப்படியோ எங்க ஊரில் இருந்தும் ஒரு தலைவர் உருவானது எங்களுக்கு பெருமை தானே, என்றார் பழனிசாமி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :