You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எல். முருகன் யார்? மத்திய அமைச்சர் ஆக உதவிய 'அரசியல் பாதை'
இன்று மாற்றிய அமைக்கப்படும் இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் அமைச்சரவையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவரான எல். முருகனும் இடம்பெற்றுள்ளார். மாநில தலைவராக செயல்பட்ட குறுகிய காலத்திலேயே தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த எல். முருகனின் பின்னணி என்ன?
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக 2019 ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டார். அவருக்குப் பிறகு, நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சிக்கு புதிதாக தலைவர்கள் யாரும் நியமிக்கப்படாத நிலையில், பல மாதங்கள் கழித்து எல். முருகன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
எச். ராஜா, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சி.பி. ராதாகிருஷ்ணன், கே.டி. ராகவன், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ஆகியோரில் ஒருவர் இந்தப் பதவிக்கு நியமிக்கப்படலாம் எனக் கூறப்பட்ட நிலையில், எல். முருகனின் நியமனம் பலரது புருவங்களை உயர்த்தியது.
1977ல் நாமக்கல் மாவட்டம் கோனூரில் பிறந்த எல். முருகன், சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த பிறகு, சென்னைப் பல்கலைக்கழத்தில் சட்ட முதுகலைப் பட்டத்தைப் பெற்றார். அதற்குப் பிறகு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகவும் பணியாற்றினார்.
ஆர்.எஸ்.எஸில் இணைந்து பணியாற்றி வந்த எல். முருகன், அக்கட்சியின் பட்டியலினத்தோர் பிரிவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முன்னாள் சபாநாயகர் தனபாலை எதிர்த்து பா.ஜ.கவின் சார்பில் போட்டியிட்டார் முருகன். அந்தத் தேர்தலில் தனபால் வெற்றிபெற்றார். முருகன், 1730 வாக்குகளைப் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
2018ஆம் ஆண்டுவாக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக பணியாற்றிவந்தார். ஆணையத்தில் ஓராண்டு பதவிக்காலம் இருந்தபோதும், மாநில பா.ஜ.கவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
சர்ச்சை கருத்து
நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட சமயத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி தற்கொலைசெய்துகொண்டபோது, அவரது தற்கொலைக்கு வெளிப்புற அழுத்தம் காரணமாக இருக்கலாம் என முருகன் தெரிவித்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக எல். முருகன் நியமிக்கப்பட்டது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும், மிக விரைவிலேயே தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதத்தில் அவரது செயல்பாடுகள் இருந்தன.
யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து ஆபாசமாகப் பேசப்பட்ட விவகாரத்தை மாநிலம் தழுவிய பிரச்சனையாக முன்னிறுத்திய முருகன், அதற்காக வேல் யாத்திரை என்ற பெயரில் பயணம் மேற்கொண்டார்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க. 20 இடங்களைப் பெற்று, அதில் நான்கு இடங்களில் வெற்றிபெற்றது. இந்த சட்டமன்றத் தேர்தலில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட எல். முருகன் தோல்வியடைந்தாலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. உறுப்பினர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடம்பெற்றது கவனிக்க வைத்தது.
இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது சென்னை அண்ணா நகரில் வசித்து வருகிறார் எல். முருகன்.
கடந்த வாரம், தமிழ்நாட்டில் வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துச் சென்று, பிரதமரைச் சந்தித்துப் பேசிய எல். முருகன், டெல்லியிலேயே தொடர்ந்து தங்கினார். இந்த நிலையில்தான் அவரும் அமைச்சராவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பிற செய்திகள்:
- இந்திய சீன எல்லையில் குவிக்கப்படும் படைகள் - எல்ஓசி போல மாறுகிறதா எல்ஏசி?
- 25 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரதட்சணை: இந்திய திருமணங்கள் பற்றிய ஆய்வு
- யூட்யூபர் பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - இனி என்ன நடக்கும்?
- யார் இந்த தாலிபன்கள்? இவர்கள் குறித்து அமெரிக்க ராணுவத்தின் சமீபத்தைய மதிப்பீடு என்ன?
- ஆலமரத்தில் ஏறி ஆன்லைன் வகுப்பைக் கவனிக்கும் தமிழக மாணவர்கள்
- கோவையில் 30 பேர் பார்வையைப் பறித்த கருப்பு பூஞ்சை நோய்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்